ரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் | Maruti Suzuki Alto facelift launched

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (24/04/2019)

கடைசி தொடர்பு:21:10 (24/04/2019)

ரூ.22,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துவிட்டது ஆல்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்

கடந்த 15 ஆண்டுகளாக விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஆல்ட்டோ 800 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இன்ஜின், பாதுகாப்பு, இன்டீரியர் போன்ற விஷயங்களில் முன்னேறியுள்ளது புதிய ஆல்ட்டோ 800.

ஆல்ட்டோ

ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூ.2.94 லட்சம், மிட் வேரியன்ட் ரூ.3.50 லட்சம் மற்றும் டாப் வேரியன்ட் ரூ.3.71 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலைவிட இதன் விலை ரூ.22,000 - 28,000 வரை அதிகம். பெலினோவை தொடர்ந்து ஆல்ட்டோவின் 796cc, 3 சிலிண்டர் இன்ஜினும் இப்போது BSVI மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 47bhp பவர் மற்றும் 69Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 

வெளிப்புற மாற்றங்களாக காரின் க்ரில் கறுப்பு நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பம்ப்பரின் டிசைன் புதிது, ஃபெண்டரில் சிறிய மாற்றம் செய்துள்ளார்கள். காரின் உள்பக்கத்தில் டூயல் டோன் இன்டீரியர் மற்றும் ஆல்ட்டோ K10-ல் இருக்கும் டேஷ்போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீனுக்குப் பதிலாக Two-din ஆடியோ சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் கனெட்டிவிட்டி கொடுத்துள்ளார்கள். டாப் வேரியன்ட்டில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் கீலெஸ் என்ட்ரி வருகிறது.

புது டேஷ்போர்டு

புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்றபடி ஆல்ட்டோவில் முன்பக்கம் 2 ஏர்பேக், ABS, EBD, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் மற்றும் ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் அனைத்து வேரியன்ட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், புதிய ஆல்ட்டோ 800 வரவிருக்கும் கிராஷ் டெஸ்ட் மற்றும் பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்றபடி இருக்கும் என்கிறது மாருதி. ஆல்ட்டோவில் இருக்கும் புதிய இன்ஜின் முன்பைவிட 25 சதவிகிதம் குறைவான NoX வெளிப்படுத்தும்படி அதன் ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக முன்பு லிட்டருக்கு 24.7 கி.மீ என்றிருந்த ARAI மைலேஜ் இப்போது 22.05கி.மீ-ராகக் குறைந்துள்ளது.