உருளைக் கிழங்குக்காக வழக்கு தொடர்ந்த `பெப்சி' நிறுவனம்! - அதிர்ச்சியில் குஜராத் விவசாயிகள்! | Pepsi company compensation Case for potato farmers in Gujarat

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:09:58 (26/04/2019)

உருளைக் கிழங்குக்காக வழக்கு தொடர்ந்த `பெப்சி' நிறுவனம்! - அதிர்ச்சியில் குஜராத் விவசாயிகள்!

லேஸ் சிப்ஸ்களுக்கான பிரத்யேக உருளைக்கிழங்கைப் பயிர் செய்த குஜராத் விவசாயிகளிடம் 1.05 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 

பெப்சி நிறுவன உருளைக் கிழங்கு - விவசாயிகள்

பெப்சி நிறுவனம் தயாரித்து வரும் `லேஸ் சிப்ஸ்' உணவுப் பொருளுக்காக புதிய வகை உருளைக் கிழங்குகளைப் பயன்படுத்தி வருகிறது. பெப்சி நிறுவனம், கடந்த 2009-ம் ஆண்டு எப்.எல்.2027-ம் ஆண்டு புதிய வகை உருளைக்கிழங்குகளை கண்டறிந்து அதற்கான காப்புரிமை பெற்றது. அதன் பின்னர் லேஸ் சிப்ஸ் பொருளை தயாரிப்பதற்கு இந்த வகை உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய பல விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி அந்த விவசாயிகளிடம் நேரடியாக உருளைக் கிழங்குகளை கொள்முதல் செய்துவந்தது. 

இந்த உருளைக் கிழங்கு வகையை குஜராத்தில் உள்ள ஒரு சில விவசாயிகள் காப்புரிமை பெறாமலும், காப்புரிமை பற்றி அறியாமலும் பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக பெப்சி நிறுவனம் தங்களது விதைகளை காப்புரிமை பெறாமல் பயிரிட்டு வந்ததற்காக, நஷ்டஈடு கேட்டு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.  

இது பற்றி அங்குள்ள விவசாயிகள் தரப்பில், ``விவசாயிகளான எங்களுக்குக் கிடைக்கும் விதைகளை மட்டும்தான் பயிரிட முடியும். அதுபோலத்தான் கிடைத்த உருளைக் கிழங்கு விதைகளைப் பயிரிட்டோம். இதுபற்றித் தெரிந்துகொண்ட பெப்சி நிறுவனம் தனியார் துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு எங்களுக்குத் தெரியாமல் தோட்டத்திலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுமூலமாகத்தான் இப்போது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள். மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்" என்கிறார்கள்.

உருளைக் கிழங்கு சிப்ஸ்

பயிர் பன்மைய பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001 பிரிவு 64- ன் கீழ், நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறுவதாக பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால் விவசாயிகள் அதே சட்டம் 39 -ம் பிரிவைக் காட்டி விதைகளைச் சேமித்து, பரிமாற்றம் செய்து விற்பனை செய்ய அச்சட்டம் அனுமதிக்கிறது. 

வழக்கு தொடரப்பட்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 3 முதல் 4 ஏக்கர் நிலங்களைக் கொண்ட சிறு, குறு விவசாயிகளாகவே இருக்கின்றனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.