மெத்தூசலா... அமெரிக்கா பொத்தி பொத்தி பாதுகாக்கும் 4850 ஆண்டு பழைமையான மரம்! | How America protects this 4850 years old Methuselah tree?

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (30/04/2019)

கடைசி தொடர்பு:14:48 (30/04/2019)

மெத்தூசலா... அமெரிக்கா பொத்தி பொத்தி பாதுகாக்கும் 4850 ஆண்டு பழைமையான மரம்!

இன்றைக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கூகுளில் எந்தத் தகவல்களை வேண்டுமானாலும் எடுத்துவிடலாம். ஆனால், இந்த மரத்தின் புகைப்படத்தை என்ன செய்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. அந்தளவுக்கு அதை ரகசியமாக வைத்திருக்கிறது அமெரிக்கா.

மெத்தூசலா... அமெரிக்கா பொத்தி பொத்தி பாதுகாக்கும் 4850 ஆண்டு பழைமையான மரம்!

பொதுவாக 200 வருடங்கள் அல்லது 400 வருடங்கள் வாழும் மரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 4,850 வருடங்கள் பழைமையான மரம் இந்த உலகில் உண்டு என்றால் நம்புவீர்களா? அந்த மரம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய ஒயிட் மலைத்தொடரில் உள்ளது. மரத்தின் பெயர் `மெத்தூசலா'(Methuselah). மரத்தின் வயது 4,850 வருடங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது `பிரிஸ்டல்கோன் பைன்' வகையைச் சேர்ந்தது. இது, பைபிளில் சொல்லப்பட்டுள்ள அதிக வயதான நபர் மெத்தூசலாவின் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது.

மெத்தூசலா மரம்

(மாதிரி படம்)

இதுதான் உலகிலேயே பழைமையான மரமாகக் கருதப்படுகிறது. இது கடல்மட்டத்திற்கு மேல் 3,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒயிட் மலைத்தொடரில் இருக்கிறது. இந்த மலைத்தொடர் கலிபோர்னியா ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மெத்தூசலா என்றால் பழங்கால மனிதன் என்ற மறுபெயரும் உண்டு. இதன் வயது 4,800 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. பழங்கால `பிரிஸ்டல்கோன் பைன் மரங்கள் இருக்கும் ஒரு தோப்பின் நடுவே மூத்த குடிமகனாக இம்மரம் விளங்குகிறது. நன்கு வளைந்து, நெளிந்து காணப்படுகிறது, மெத்தூசலா. அந்த வயதான மரத்திடம் செல்ல, அதன் பாதுகாப்பு கருதி யாருக்கும் அனுமதி இல்லை என்கிறது அமெரிக்க வனத்துறை.

மெத்தூசலா மரம் மிக மோசமான சூழ்நிலையையும் தாக்குப்பிடித்து வளரும் தன்மை கொண்டது. அம்மலை முழுவதும் பல பைன் மரங்கள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 30 செ.மீ மழையே பெய்கிறது. அந்த மழையும் பெரும்பாலும் பனிதான். எனவே மிகக்குறைந்த ஈரப்பதமே காணப்படுகிறது. இந்த மரம் இருக்கும் நிலம், சுண்ணாம்பு கலந்த பாறை நிலமாக இருக்கிறது. இந்த நிலத்தில் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் இருக்கும். இதுதவிர, கோடையில் கடும்வெப்பமும், குளிர்காலத்தில் கடுமையான குளிரும் நிலவும். காற்று பலமாக வீசக்கூடிய பகுதி இது. இவ்வளவு மோசமான சூழ்நிலைகள்தான், இம்மரத்தின் நீண்ட ஆயுளுக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. வைரஸ்களோ, பாக்டீரியாக்களோ வாழ முடியாத ஒரு நிலப்பரப்பாக இருப்பதால் இம்மரம் நோய்த்தாக்குதல் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறது. இம்மரங்கள் அதிகமான அடர்த்தி கொண்டதாகவும், பிசின் நிறைந்ததாகவும் இருப்பதால், பூச்சிகளும் அம்மரங்களை தாக்க முடியாமல் விட்டுவிட்டுப் போய்விடுகிறது. கலிபோர்னியா பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், இம்மரம் உள்ள பகுதியின் அருகில் வேறு எந்த மரமும் இல்லை. அதனால் தொடர்ச்சியாக தீ பற்றினாலும், இம்மரத்துக்குப் பரவாது. 

எட்மண்ட் ஸ்கல்மேன் (Edmund Schulman) எனும் விஞ்ஞானி, 1957-ம் ஆண்டு அம்மலைத்தொடரில் `பிரிஸ்டல்கோல் பைன்' மரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது மிகுந்த பழைமை வாய்ந்த மரம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்த வகை மரங்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்தார். ஆய்வகத்தில் சோதனை செய்தபோது ஒரு மரத்தின் மரபணு மட்டும், அதிக வயதைக் கொண்டிருப்பதை கண்டறிந்தார். அவர் அம்மரத்திற்கு `மெத்தூசலா' என்று பெயரிட்டார். இவர் கண்டுபிடித்து சொன்ன பின்புதான் அமெரிக்க வனத்துறை அம்மரத்தைக் காப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறது. எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிய காலத்தில் இருந்தே இந்தப் பழைமை வாய்ந்த மரங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மெத்தூசலா மரம்

(மாதிரி படம்)

இதன் இருப்பிடம் அமெரிக்க வனத்துறையினரால் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது கலிபோர்னியாவில் வெள்ளை மலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ரகசியத்துக்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்த `ஸ்பைடர்' எனப்படும் 3500 வயது உள்ள ஒரு மரத்தை, மது அருந்திய நபர் ஒருவர் தீ வைத்து எரித்துவிட்டார். அதனால்தான் இந்த மரத்தை ரகசியமாகப் பாதுகாக்கிறார்கள். அதன் புகைப்படம் இணையங்களிலோ அல்லது பொது தளங்களிலோ எங்குமே கிடைக்காது. இம்மரத்தைச் சுற்றிலும், வயதான மரங்கள் அதிகமாக இருப்பதால் இம்மரத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்குப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள், அமெரிக்க வனத்துறையினர். 

இந்த மரங்கள், ஓராண்டுக்கு 45 நாள்கள் மட்டும்தான் வளரும். ஆனால் தன் வசமுள்ள குறைந்தளவு சத்தையும் வீணாக்காமல் சிறிது சிறிதாகப் பயன்படுத்துவதால் இவை மிகவும் மெதுவாகவே வளர்கின்றன. இம்மரத்தின் சுற்றளவு, நூறு வருடங்களுக்கு ஓர் அங்குலம் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. இதன் இலைகளோ 30 வருடங்களுக்கு உதிராமல் இருக்கின்றன. இவ்வகை மரங்களில் மிகவும் உயரமாக 18 மீட்டர் வரை இருக்கும். இம்மரங்கள் இன்னும் 5 நூற்றாண்டுகளுக்கு இந்த மரம் நீடித்து வாழலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். 

மனிதர்கள் மத்தியில் இன்னும் பத்திரமாக வாழ்கிறதே?! அதுவே இந்த மரத்தின் சாதனைதான். 


டிரெண்டிங் @ விகடன்