`அவர்கள் என்னை அம்மாவாக மட்டுமே பார்க்க நினைக்கிறார்கள்!' - குழந்தைகள் குறித்து அமெரிக்க நடிகை ஜெனிஃபர் கார்னெர் | They just want me to look like Mom says Jennifer Garner

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (29/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (29/04/2019)

`அவர்கள் என்னை அம்மாவாக மட்டுமே பார்க்க நினைக்கிறார்கள்!' - குழந்தைகள் குறித்து அமெரிக்க நடிகை ஜெனிஃபர் கார்னெர்

பிரபல அமெரிக்க நடிகை ஜெனிஃபர் கார்னெர்,  'People' பத்திரிகைக்காக சமீபத்தில் கொடுத்துள்ள பிரத்தியேகப் பேட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. 'Alias' எனும் அமெரிக்க டிவி சீரிஸ்மூலம் மக்கள் மனதைக் கொள்ளைகொண்டவர் கார்னெர். 'டேர்டெவில்', 'ஜூனோ', 'லவ்', 'சைமன்', 'பெப்பர்மின்ட்' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 47 வயதாகும் கார்னெர், சென்ற வாரம் வெளியாகிய பீப்பிள் பத்திரிகையின் 'அழகு' தலைப்பின் நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

ஜெனிஃபர் கார்னெர்

ஏற்கெனவே, தொண்டு வேலைகளில் பிசியாக இருக்கும் இவரிடம், பீப்பிள் பத்திரிகை ஏராளமான கேள்விகளை முன்வைத்தது. நடிகை, தொழிலதிபர் மற்றும் அன்பான அம்மா எனப் பன்முகங்களைக் கொண்டிருக்கும் இவரின் பதில்கள், பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்தது. குழந்தைகள் உணவு நிறுவனம் நடத்திவரும் கார்னெர், தன் மூன்று குழந்தைகளையும் தனியாளாக வளர்த்துவருகிறார். 'அழகு' எனும் தலைப்பில் தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, "அழகான பெண்கள் பட்டியலில் என்றைக்குமே என்னை வைத்து நான் பார்த்ததில்லை. கடந்த 13 ஆண்டுகளில், உண்ணும் வேளை முதல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு தருணமும் நான் விரும்பியதுபோல இருந்ததில்லை. ஆனால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் அழகு இருக்கிறது" என்றார்.

ஜெனிஃபர் கார்னெர்

`செலிபிரிட்டி' கார்னெர், வீட்டில் எப்படி? என்ற கேள்விக்கு, ``ஒவ்வொரு ஷூட் முடித்து வீட்டுக்கு வந்ததும், என் குழந்தைகள் அனைவரும் என்னைப் பார்த்து, 'முகத்தைக் கழுவி, தலைமுடியை பின்னலிட்டு, முகக் கண்ணாடி போட்டுட்டு வாங்க' என்று கூறுவார்கள். இது எனக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டு. அவர்கள் என்னை அம்மாவாக மட்டுமே பார்க்க நினைக்கிறார்கள்" என்றுகூறி பூரித்தார்.