Published:Updated:

`கல்வியால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும்!' - பழங்குடியின கிராமத்தைத் தத்தெடுத்த நம்பிக்கை மனிதர்

பிரபாகரன் செ
`கல்வியால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும்!' - பழங்குடியின கிராமத்தைத் தத்தெடுத்த நம்பிக்கை மனிதர்
`கல்வியால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும்!' - பழங்குடியின கிராமத்தைத் தத்தெடுத்த நம்பிக்கை மனிதர்

ஒரு குழந்தையைத் தத்தெடுக்க யோசித்து, பணம் கொடுத்து வாங்கும் செல்வந்தர்கள் இருக்கும் இதே உலகில்தான் தன்னிடம் பெரிய உடமைகள் இல்லாதபோதும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ளவர்களுக்குக் கல்வி கொடுத்து அப்பகுதியை வளமையாக்கும் எளியவர்கள் இருக்கிறார்கள். 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியைச் சேர்ந்த அசோக் ப்ரியதர்ஷன், தேவைகளுக்கு பஞ்சமில்லாத வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தன் பட்டப்படிப்பை முடித்ததும் திருவள்ளூர் மாவட்டம், வஞ்சிவாக்கம் கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள பழங்குடி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். 

அசோக் ப்ரியதர்ஷனிடம் பேசினோம். ``என்னுடைய தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். எனக்கு கஷ்டமில்லாத வாழ்க்கைதான். ஆனால், பழங்குடியின மக்களோட கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். என் அப்பாகிட்ட சொன்னேன். படிச்சு கலெக்டர் ஆயிட்டா, பழங்குடியின மக்களுக்கு நீ நினைத்ததைவிட அதிகமாகவே செய்யலாம். நீ ஐ.ஏ.எஸ் படி என்று அப்பா என்னை ஊக்கப்படுத்தினார்.

ஐ.ஏ.எஸ் படிக்கத் தயாராகும்போதே, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் சேவை செய்ய ஆசைப்பட்டேன். திருவள்ளூர் மாவட்டம், வஞ்சிவாக்கம் கிராமத்தை தத்தெடுத்து, 6 ஆண்டுகளுக்கும் மேல் என்னால் முடிந்த அளவுக்கு சேவை செய்துவருகிறேன். இங்கு, யார் வீட்டிலும் கழிவறை இல்லை. பெண் குழந்தைகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டாங்க. அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்றேன். இப்போது, 300 வீடுகளில் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 250 கழிவறைகள் கட்டப்பட உள்ளேன்.

கல்வியால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும். அதனால், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி இலவசமாக டியூசன் எடுக்கிறேன். இப்போது, எல்லாருடைய குடும்பத்தில் நானும் ஒருவனாகப் பார்க்கப்படுகிறேன். இதைவிட என் வாழ்க்கையில், வேறென்ன அளப்பரிய சந்தோஷம் கிடைத்திடப் போகுது. எனக்கு, இப்போ 38 வயசாகுது. புதுவாழ்வு அமைத்துத் தருவதாக அப்பா, அம்மா வரச் சொன்னாங்க. நான் வேணாம்ணு சொல்லிட்டேன். நான் இவங்களைப் பாத்துக்கறதுக்காக இங்கையே இருக்கேன்னு சொல்லிட்டேன்" என நம்பிக்கையுடன் பேசினார்.