Published:Updated:

31 மைல் தூரம் ட்ரோனில் வந்த சிறுநீரக உறுப்பு! - உலக வரலாற்றில் இது முதன்முறை

மலையரசு
31 மைல் தூரம் ட்ரோனில் வந்த சிறுநீரக உறுப்பு! - உலக வரலாற்றில் இது முதன்முறை
31 மைல் தூரம் ட்ரோனில் வந்த சிறுநீரக உறுப்பு! - உலக வரலாற்றில் இது முதன்முறை

மக்கள் தொகை அதிகமான இடங்களில் அவசரக்கால தேவைகள் குறிப்பாக மருத்துவ தேவைகள் ஏற்படும்போது ஒரு ஆம்புலன்ஸ் செல்வதற்கு அவ்வளவு சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை மக்கள் தொகை மிகுந்த சிட்டிகளில் சொல்லி மாளாத வகையில் உள்ளது. இதற்கு டெக்னாலஜி மூலம் தீர்வு காணும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக ட்ரோன்கள் இது மாதிரியான அவசரக் கால சேவைகளுக்குப் பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் மருத்துவ சேவையில் ட்ரோன் தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி 8 வருடமாக டயாலிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்குச் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வர வேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக மருத்துவர்கள் ட்ரானை பயன்படுத்தினர். இதற்குத் தகுந்தவாறு மருத்துவமனையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் திட்டமிட்டனர். சிறுநீரகத்தைக் கொண்டு செல்வதற்கு முன்பாக இதே ட்ரோனை பயன்படுத்தி ரத்தம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட இடத்துக்கு டெலிவரி செய்து சோதனை மேற்கொண்டனர். 

இதன்பின்னர்தான் ட்ரோனை பயன்படுத்தினர். அதன்படி மேற்கு பால்டிமோர் சிட்டியில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு இடையேயான சில மைல்களை வெற்றிகரமாகக் கடந்து சிறுநீரக உறுப்பை டெலிவரி செய்தது ட்ரோன். ``உடல் உறுப்புகளை இப்போது கொண்டு செல்லும் முறையை மாற்றியமைப்பதற்கு இது ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் நிறைய மக்கள் பயன்படுவார்கள். அமலுக்கு வருவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம். ஆனால், அதற்கு இதுதான் முதல்படி ஆகும்" என அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஜோசப் தெரிவித்துள்ளார்.