Published:Updated:

`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்

எஸ்.மகேஷ்
`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்
`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்
`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர், சம்பளப் பணத்தில் பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டிவருகிறார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்காக அவர் பெர்ஷனல் லோனுக்கு விண்ணப்பித்தும் உள்ளார். 

மனிதர்கள் பலவிதம், அதில் ஒவ்வொருவரும் ஒருவிதம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். தன்னால் முடிந்த உதவிகளை பலர் செய்துவருகின்றனர். ஆனால், மாதந்தோறும் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை உதவி செய்ய சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் பி.ஜெ.வெங்கடேஸ்வர ராவ் பயன்படுத்திவருகிறார். சமீபத்தில் அவர், 20 ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளார். அதோடு அவர், நிற்காமல்  ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்காக அவர் பெர்ஷனல் லோனுக்கு விண்ணப்பித்தும் உள்ளார். இப்படியொரு மனம் குறிப்பிட்ட சிலருக்குத்தான் வரும். 

அவரிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அமலாபுரம். ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு அப்பா காலத்தில் குடிபெயர்ந்தோம். சென்னை அம்பத்தூர் அயப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் நான் படித்தேன். அங்கு நாங்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் குடியிருந்தோம். அப்பாவுக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை. நான் படித்து முடித்தவுடன் கடந்த 1999-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தேன். ஆயுதப்படைப்பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினேன். 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்தேன். 2017-ல் தலைமைக்காவலராகப் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். காவல்துறையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். 

`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்

கடந்த 2002-ம் ஆண்டு என் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது. எனக்கு எல்லாம் என்தங்கை ஜெயபிரதா என்கிற கருமாரிதான். அவருக்கு உதவி செய்வது ரொம்பப் பிடிக்கும். அவருக்கு திடீரென இதயத்தில் பிரச்னை ஏற்பட்டு 2002-ல் இறந்துவிட்டார். ஜெயபிரதா என்னிடம், `இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது. நாம் மறைந்தபிறகும் வாழ வேண்டும் என்றால் உயிரோடு இருக்கும்போது பலருக்கு உதவ வேண்டும்' என்று அடிக்கடி சொல்வார், அவர் இறந்தபிறகு நானும் உதவி செய்ய ஆரம்பித்தேன். 

ஆரம்பத்தில் முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தேன். அதன்பிறகுதான் ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இந்த ஆண்டு நான் படித்த அயப்பாக்கம் அரசுப் பள்ளியில் பயின்ற 20 மாணவர்களின் கல்லூரிச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என் தங்கை ஜெயபிரதாதான். 

`2002-ல் நடந்த அந்தச் சம்பவம்தான் என்னை இப்படி மாற்றியது!'- திரும்பிப் பார்க்கவைத்த காவலர்

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்கள், கல்லூரிகளில் சேர வழியில்லாமல் கிடைத்த வேலைகளுக்குச் செல்லும் சூழல் உள்ளது. அதைத் தடுக்கத்தான் என்னுடைய சம்பளப் பணத்தை அவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துகிறேன். நான் உதவி செய்வதை என் மனைவி பிரமிளாவும் தடுப்பதில்லை. அவரும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். எனக்கு லட்சுமணா என்கிற மகனும் ரூபா என்கிற மகளும் உள்ளனர். லட்சுமணா 8-ம் வகுப்பும் ரூபா 5-ம் வகுப்பும் படிக்கின்றனர். உதவி செய்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு கண்டிப்பாக உத்தரவாதம். அதற்கு நானே ஓர் உதாரணம்" என்றார் மகிழ்ச்சியுடன்.

அவரிடம் சம்பளப் பணத்தில் உதவி செய்துவிட்டால் உங்கள் குடும்பத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, ``சார், எனக்கு மாதம் 55,000 ரூபாய் சம்பளம். என் மனைவி குடும்பத்தைச் சிக்கனமாக நடத்துவார். இதனால் மாதம் 10,000 ரூபாய் வரை சம்பளத்தில் சேமித்துவிடுவார். அதைவைத்துதான் இதுபோன்ற உதவிகளைச் செய்துவருகிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவையான இதர உதவிகளையும் முடிந்தளவுக்கு செய்துவருகிறேன். நான் உதவி செய்யும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். ஆக வரவேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. அயப்பாக்கம் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் யாராவது, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்க உள்ளேன். இதற்காக பெர்ஷனல் லோனுக்கு விண்ணப்பித்துள்ளேன். 5 லட்சம் ரூபாய்க்கான செக் ரெடியாக உள்ளது.  ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெரும் மாணவருக்கு உடனடியாக அந்தத் தொகையை வழங்குவேன்" என்றார். 

காக்கிக்குள்ளும் ஈரம் இருப்பதை தலைமைக் காவலர் பி.ஜெ.வெங்கடேஸ்வர ராவ் நிஜமாக்கியிருக்கிறார். இவரின் உதவி செய்யும் உள்ளத்தைத் தெரிந்த சக காவல் அதிகாரிகள் மனதாரப் பாராட்டிவருகின்றனர்.