15,600 ஆண்டுகள் பழைமையான மனித கால்தடம்! - அமெரிக்காவின் முதல் மனிதன் | Footprint of 15,600 years old man found in Chile

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/04/2019)

கடைசி தொடர்பு:19:02 (30/04/2019)

15,600 ஆண்டுகள் பழைமையான மனித கால்தடம்! - அமெரிக்காவின் முதல் மனிதன்

நிலவழித் தொடர்பே இல்லாமல், இரண்டு அமெரிக்கக் கண்டங்களும் தனித்துவிடப்பட்டு பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், நிலவழித் தொடர்பற்ற அமெரிக்கக் கண்டத்தில் மனிதர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழத் தொடங்கினார்கள்?

கால்தடம்

Photos Credit: Universidad Austral de Chile

இந்தக் கேள்விக்கான விடை, பல கோணங்களில் பல அனுமானங்களில், பல ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டன. ஆதாரங்களின் அடிப்படையில், 13,200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த க்ளோவிஸ் கலாசாரத்தை அமெரிக்காவின் பழைமையான மனிதர்களாகக் குறிப்பிட்டனர். 2010-ம் ஆண்டு நடந்த ஒரு தொல்லியல் ஆய்வின்போது, அதற்கும் முந்தைய மனிதர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கால்தடங்கள், 2010-ம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவை ஏதாவது விலங்கினத்தின் கால்தடங்களாக இருக்கலாமென்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர். தெற்கு சிலியில் (Chile) கிடைத்த இந்தக் கால் தடத்தை அந்தக் கோணத்தில்தான் ஆராய்ந்தார்கள். 

ஆராய்ச்சி

ஆஸ்டிரா டி சிலி என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலாகோ பஜோ (Pilauco bajo) என்ற ஆய்வு மாணவர்தான் இதைக் கண்டுபிடித்தார். ஒசோர்னோ நகரத்தில் அவர் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இதைக் கண்டுபிடித்தார். இத்தனை ஆண்டுகளாகப் பல ஆய்வாளர்கள் இணைந்து பலகட்ட ஆய்வுகளுக்கு அதை உட்படுத்தினர். இது ஏதேனும் ஒருவகை விலங்கினத்தின் கால் தடமாகக்கூட இருக்கலாம், எதுவாக இருந்தாலும் வெறும் கால் தடத்தை வைத்துக்கொண்டு மனித இனம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அனைத்து விதமான ஆய்வுகளையும் முடித்துவிட்டு, தற்போது அந்தக் கால் தடம் நிச்சயமாக மனித இனத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருடைய கால் தடம்தான் என்பதை உறுதிசெய்துள்ளனர். அமெரிக்காவில் இதற்கு முன்னும்கூடப் பல பழைமையான கால்தடங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த அளவுக்குப் பழைமையான கால் தடம் கிடைத்ததில்லை. ஆகவே, அமெரிக்கக் கண்டங்களில் க்ளோவிஸ் கலாசாரத்தைக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்ததற்கு 2,400 ஆண்டுகள் முன்பாகவே, மனிதர்கள் வாழ்ந்துள்ளதை இந்தக் கால் தடம் நமக்குக் காட்டுகிறது.