உங்கள் பிள்ளைக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்க இவற்றையெல்லாம் செக் பண்ணுங்க! #EducationalTips | Read these tips before going to choose a school for your kids

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (02/05/2019)

கடைசி தொடர்பு:11:25 (02/05/2019)

உங்கள் பிள்ளைக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்க இவற்றையெல்லாம் செக் பண்ணுங்க! #EducationalTips

"நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு எட்டு மணிநேரம் பயிற்சி அளிக்கிறதா என்று பாருங்கள். அதுவே கற்பதற்கு போதுமானது. விளையாட்டு மைதானம் முக்கியமானது. உடலை வலிமையாக்காமல், மூளையை வலிமையூட்ட முடியாது. மைதானம் இருந்தால் மட்டும் போதாது விளையாட அனுமதிக்கவும் வேண்டும்."

உங்கள் பிள்ளைக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்க இவற்றையெல்லாம் செக் பண்ணுங்க! #EducationalTips

10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துவிட்டன. இனி, பிள்ளைகளை அடுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் பரபரப்பாக இருப்பார்கள். இந்தச் சூழலில் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியனிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தோம். 

பள்ளி நெடுஞ்செழியன்10, 11 மற்றும் 12 ஆகிய பொதுத்தேர்வு கொண்ட வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை? 

10, 11 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்குச் செல்லவிருக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொதுத் தேர்வு என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது பயம்தான். அந்த பயம் வெற்றி, தோல்வியை நினைப்பதிலிருந்துதான் வருகிறது. வெற்றி என்பது முக்கியமானதுதான். ஆனாலும், ஏதேனும் ஒரு காரணத்தால் தோல்வி வந்துவிட்டால் துவண்டுவிடக் கூடாத மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பொதுவாகப் பள்ளிகளில் சிலபஸில் உள்ளவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால், மத்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகள் பலவற்றில் சிலபஸ் தாண்டியும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கும் நாம் தயாராக வேண்டும். 

பள்ளியில் பாடம் நடத்தத் தொடங்கும் முதல் நாளிலிருந்தே நாம் கவனத்துடன் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வது மட்டுமே படிக்கும் முறை என்று நினைக்க வேண்டாம். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்கிறீர்கள் என்றால், செல்லும் வழியில் என்னவெல்லாம் இருக்கின்றன, எங்கு திரும்ப வேண்டும் என்பதெல்லாம் வரைபடமாக மனதில் பதிந்துவிடும் அல்லவா. அந்த முறையைக்கூடப் படிப்பதில் பயன்படுத்த முடியும். சிலர், வருடக் கடைசியில் எழுதவிருக்கும் பொதுத் தேர்வை நினைத்து பயந்துகொண்டே படிப்பார்கள். அது தேவையற்றது. அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிட்டால் எந்தக் கவலையும் இல்லை. அதேபோல, சிலரின் வீட்டில் இப்படிப் படி, அப்படிப் படி அப்போதுதான் டாக்டராக முடியும், பொறியாளராக முடியும் என்று சொல்வதால் பயமும் குழப்பமும் வரலாம். உங்கள் கவனம் முழுவதும் தினந்தோறும் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்கு புரிந்துகொண்டு மீண்டும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். 

பள்ளி

பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் அந்தப் பள்ளியில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்?

பெற்றோர்களுக்குப் பெரும் சவாலே, தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளியைத் தேர்வு செய்வதுதான். 50 ஆண்டுகளாகக் கல்வி அளித்துவரும் பள்ளியைத்தான் நான் பரிந்துரைப்பேன். ஏனெனில், அவற்றில்தான் கல்வியை அளிப்பதற்கான அனைத்து வகையான வசதிகளும் சரியாக அமைந்திருக்கும். அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளாகத்தான் இருக்கும். தனியார் பள்ளியைத் தேர்ந்தெடுக்க நினைத்தால், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதியைப் பார்க்க வேண்டியது அவசியம். அடுத்து மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன விதமான ஏற்பாடுகளை அந்தப் பள்ளி செய்துவருகிறது என்பது முக்கியம். 

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளியில் மாணவர்களுக்கு எட்டு மணிநேரம் பயிற்சி அளிக்கிறதா என்று பாருங்கள். அதுவே கற்பதற்கு போதுமானது.விளையாட்டு மைதானம் முக்கியமானது. உடலை வலிமையாக்காமல், மூளையை வலிமையூட்ட முடியாது. மைதானம் இருந்தால் மட்டும் போதாது விளையாட அனுமதிக்கவும் வேண்டும். அடுத்த விஷயம் முக்கியமானது. பெற்றோர்கள் அந்தப் பள்ளியைத் தொடர்புகொள்வதற்கு எவ்வளவு எளிமையான முறையைக் கையாள்கிறது என்பதே அது. வகுப்பில் என்ன நடக்கிறது. உங்கள் பிள்ளையைப் பற்றி ஆசிரியர் என்ன நினைக்கிறார், சக பெற்றோர்களுடன் உரையாடுவது போன்றவற்றுக்கு அந்தப் பள்ளி எளிமையாக அனுமதிக்கிறதா என்றும் பாருங்கள். 

ஒரு பள்ளி தேர்வில் நல்ல ரிசல்ட் கொடுக்கிறது என்பதை மட்டும் ஓர் அளவுகோலாக நினைக்காமல், அந்தப் பள்ளியில் படித்தவர்கள் எத்தனை பேர் உயர்கல்வியில் சாதித்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள். நல்ல கல்வி அளித்தற்குச் சாட்சியங்களில் இதுவும் ஒன்று. சிலர் வீட்டுக்கு அருகில் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்துவிடுவர். அதுவும் தவறு. ஒரு பள்ளியைப் பற்றி மேற்சொன்னவையும் முக்கியம். 


டிரெண்டிங் @ விகடன்