`பாம்பு கடித்தபின் நம் உடலில் என்ன நடக்கும்?' தன் இறுதி நிமிடங்களை தானே எழுதிய ஆய்வாளர்! | Herpetologist who recorded his life's last minutes after his snake bite

வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (03/05/2019)

கடைசி தொடர்பு:09:04 (06/05/2019)

`பாம்பு கடித்தபின் நம் உடலில் என்ன நடக்கும்?' தன் இறுதி நிமிடங்களை தானே எழுதிய ஆய்வாளர்!

ஸ்மிட் தான் பாம்புக்கடிக்கு ஆளானபின், மரணத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் அதைக் கண்டு அஞ்சவில்லை. அதற்கு மாறாகத் தன் பாதிப்புகளைப் பதிவுசெய்து வைத்ததன் மூலம் எதிர்கால ஆய்வுகளுக்கு உதவியுள்ளார்.

`பாம்பு கடித்தபின் நம் உடலில் என்ன நடக்கும்?' தன் இறுதி நிமிடங்களை தானே எழுதிய ஆய்வாளர்!

பாம்புகள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். நஞ்சற்ற பாம்புகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் கண்களுக்குப் பாம்பென்றாலே நஞ்சுதான். அந்த அளவுக்கு மனிதர்களுக்குப் பாம்புகள் மீது பயம். பாம்புகள் எப்போதும் வலிய வந்து யாரையும் தாக்குவதில்லை. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் ஏற்பட்டாலொழிய அவை தாக்கத் தயாராவதுகூட இல்லை. நச்சுப் பாம்புகள் தாக்கினால், பாம்பின் நஞ்சு நம்முள் சென்றால் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும். உண்மையில், அந்த மாற்றங்களை யாரும் அனுபவபூர்வமாகப் பதிவு செய்யவில்லை. அனைத்துமே ஏடுகளில் அடுத்தவர் சொல்லக் கேட்டு பார்த்துத் தெரிந்து எழுதி வைத்தவையே. 

ஒருவேளை, யாரேனும் மெய்யாகவே பாம்புக் கடிக்கு ஆளாகி அதற்குரிய சிகிச்சைகளை எடுக்காமல் தன் உடலில் நடக்கும் மாற்றங்களைப் பதிவு செய்திருந்தால்..!

பாம்பின் நஞ்சு தன் உடலுக்குள் சென்றபின் சிறிது சிறிதாக நடக்கும் மாற்றங்களைச் சாகப்போகும் இறுதி நிமிடம்வரை ஆய்வுப் பதிவுகளாக யாரேனும் செய்து வைத்திருந்தால்..!

பாம்புக்கடி

ஆம், இரண்டையுமே ஒருவர் செய்தார். அது 1957-ம் ஆண்டு. சிகாகோவில் அமைந்திருக்கும் லிங்கன் பூங்காவில் ஊர்வனவியலாளராகப் பணியிலிருந்தார் அந்த மனிதர். அவரது பெயர் கார்ல் பாட்டர்சன் ஸ்மிட் (Karl Patterson Schmidt). அந்தப் பூங்காவுக்குச் சொந்தமான கள அருங்காட்சியகத்தில் 33 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பிரபல ஊர்வன ஆராய்ச்சியாளர். அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் ஒரு பாம்பு கொண்டுவரப்பட்டது. அது அந்தப் பூங்காவின் இயக்குநர் அனுப்பிவைத்தது. அது என்ன வகைப் பாம்பு, அதன் இயல்புகள் போன்றவற்றை ஆராய்ந்து கூறுமாறு ஸ்மிட் உதவியை நாடினார் அந்த இயக்குநர். அந்தப் பாம்புடைய நீளம் 76 சென்டிமீட்டர்.

பல்வேறு நிறங்களிலிருக்கும் பாம்பு வகைகள் குறித்த ஆய்வுசெய்வதில் ஸ்மிட் நிபுணத்துவம் பெற்றவர். அதனால்தான் அந்த ஆப்பிரிக்கப் பச்சைநிறப் பாம்பு வகையை அவரிடம் அனுப்பி வைத்தார் அருங்காட்சியக இயக்குநர். பாவம், தன் பூங்காவின் மிகச் சிறந்த ஆய்வாளரின் உயிரைப் பறிக்கும் எமனைத் தானே அனுப்பி வைப்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. உலகளவிலான ஊர்வனவியல் தொகுப்புகள் பலவற்றை உருவாக்கியிருந்த ஸ்மிட், தன் ஆய்வுகளில் ஈடுபட்டுவிட்டால் தன்னையே மறந்துவிடுமளவுக்கு ஆர்வத்தோடு மூழ்கிவிடுவார்.

இயக்குநர் அனுப்பியிருந்தது, பச்சை நிறத்திலிருந்த ஆப்பிரிக்க மரப் பாம்பு வகையைச் சேர்ந்த பூம்ஸ்லாங் என்ற பாம்பு. மினுமினுக்கும் தோலுடைய இந்தப் பாம்பு தென்னாப்பிரிக்காவில் அதிகம் காணப்படும். இவற்றைத் தன் குறிப்புகளில் எழுதிவைத்தார் ஸ்மிட். அந்தப் பாம்புக்கு மற்ற பாம்புகளுக்கு இருப்பதுபோன்ற கழிவு வெளியேற்றும் குழாய்கள் இல்லாமலிருந்தது அவரிடம் அதை ஆராயும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அதனால் அதன் உடலமைப்பை முழுமையாக ஆராய்வதற்காகத் தன் அருகே கொண்டுவந்து தூக்கிப்பிடித்தார். அதுதான் அவர்செய்த மிகப்பெரிய தவறு. ஏற்கெனவே அரண்டுபோயிருந்த பாம்பு அவருடைய இடதுகைப் பெருவிரலில் கடித்துவிட்டது.

ஊர்வனவியலாளர் கார்ல் பாட்டர்சன் ஸ்மிட்

ஸ்மிட் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமனம் வேறோர் விபரீத ஆசைக்கு இட்டுச்சென்றது. அவர் தன் விரலில் பாம்பு கடித்த அடையாளங்களாகப் பார்த்தபோது அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது, ஏன் அதைச் செய்தார் என்று அவருக்கே தெரியவில்லை. ஒருவேளை மினுமினுக்கும் தோலுடைய அந்தப் பாம்புடைய நஞ்சுக்கு மனிதரைக் கொல்லக்கூடிய அளவுக்கு வீரியமில்லையென்று அவர் நம்பியிருக்கலாம். ஏனென்றால், அப்போதிருந்த பாம்பு நிபுணர்கள் பலரும் அப்படித்தான் நினைத்திருந்தார்கள்.

அவர் கடிபட்டதைக் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்களின்படி, ஸ்மிட் அதிகக் கவனமாகத்தான் இந்தப் பாம்பைக் கையாண்டுள்ளார். இருப்பினும் அது அவரைக் கடித்துள்ளது. ஸ்மிட்டும் அவருடனிருந்த சக ஆய்வாளர்களும் இந்தப் பாம்பை அவ்வளவு ஆபத்தானதாகக் கருதவில்லையென்றே கூறப்படுகிறது.

பாம்பு தம் உடலுக்குள் செலுத்திய நஞ்சு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறிப்பாக எழுதத் தொடங்கினார். ஸ்மிட் தன் வாழ்வின் இறுதி நிமிடங்களை வாழ்ந்துகொண்டிருந்தார். மரணத்தைப் பற்றிய பயம் அவருக்கில்லை. அவருடைய மனம் முழுவதும் நிரம்பியிருந்தது ஒன்று மட்டுமே. பாம்பு கடித்தால் இறந்துவிடுவார்கள். ஆனால், பாம்பு கடித்ததிலிருந்து இறக்கும்வரை என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனுபவபூர்வமாக யாரும் எழுதிவைத்ததில்லை. அதை அவர் செய்ய விரும்பினார். பாம்புக்கடிக்கு ஆளான சிறிது நேரத்திலேயே தன் வீட்டுக்குச் சென்றுவிட்ட அவர், நஞ்சால் தன் உடலில் உண்டாகும் பாதிப்புகளைப் பதிவுசெய்யத் தொடங்கினார்.

பூம்ஸ்லாங் பாம்பு

Photo Courtesy: William Warby

ஸ்மிட் வார்த்தைகளிலேயே அவருடைய இறுதி நிமிடங்கள்

பாம்புக்கடிக்குப் பின்னால் நான் வீட்டுக்குக் கிளம்பினேன். புறநகர்ப் பகுதிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது மாலை 4.30 முதல் 5.30 மணிவரை வாந்தியற்ற வலுவான குமட்டல் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது.

5.30 மணி முதல் 6.30 மணிவரை 101.7 டிகிரி அளவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குக் கடும் குளிரும் உடல் நடுக்கமும் ஏற்பட்டது. 

அதேநேரம், மாலை 5.30 மணிக்கு வாயிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. அந்த ரத்தம் கிருமிகள் காரணமாகப் பல் ஈறுகளிலிருந்து வந்திருக்கலாம். 

வீட்டுக்குச் சென்ற பின் இரவு 8.30 மணிக்கு பாலோடு சேர்த்து வறுத்த டோஸ்ட் இரண்டு துண்டு சாப்பிட்டேன்.

இரவு 9.00 மணி முதல் நள்ளிரவு 12.20 மணிவரை நன்றாகத் தூங்கினேன். 12.20-க்குத் தூக்கம் தெளிந்து எழுந்தபோது சிறுநீர் கழிக்கச் சென்றேன். அதில் சிறிதளவு ரத்தமும் கலந்து வெளியேறியது. அதிகாலை 4.30 மணிக்கு ஒரு குவளை தண்ணீர் குடித்தேன். அதைத் தொடர்ந்து கடும் குமட்டலோடு வாந்தியும் வந்தது. நான் இரவு சாப்பிட்ட இரண்டு டோஸ்ட்டுகள் செரிமானமாகாமல் வாந்தியாக வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் கொஞ்சம் சரியானதுபோல் உணர்ந்தேன். காலை 6.30 மணிவரை நன்றாகத் தூங்கினேன்.

ஸ்மிட் மரணத்தின் தறுவாயிலிருந்த சமயத்தில் அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், அவர் மருத்துவ உதவிகளை மறுத்துவிட்டார். அவர் உணர்ந்துவந்த பாம்புக்கடி அறிகுறிகளைச் சிகிச்சை மாற்றிவிடுமென்றும் அது தன் ஆய்வைப் பாதிக்குமென்றும் அவர் பயந்தார்.

குடும்பத்துடன் ஸ்மிட்

Photo Courtesy: Mister HOP

ஸ்மிட் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன்...

மருத்துவ சிகிச்சைக்கு மாறாக அவர் தன் காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் தன் குறிப்புகளை எழுதத் தொடங்கினார்.

செப்டம்பர் 26-ம் தேதி காலை 6.30 மணிக்கு என் உடலின் வெப்பநிலை 98.2 டிகிரி. 

காலை உணவுக்குத் தானியங்கள், வேகவைத்த முட்டைகள் மற்றும் காபி சாப்பிட்டேன்.

சிறுநீர் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு மூன்று மணிநேரத்திலும் ஒரு அவுன்ஸ் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. என்னுடைய வாய் மற்றும் மூக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் கசியத் தொடங்கியது.

பகல் 1.30 மணியளவில் தன் மதிய உணவை முடித்துக்கொண்டேன். உடனே வாந்தி வந்தது, என் சுயநினைவைச் சிறிது சிறிதாக இழந்துகொண்டிருந்தேன். உதவிக்கு மனைவியை அழைத்தேன். என் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது.

ஸிம்ட் சுயநினைவை இழந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க முயன்றார்கள். நின்றுவிட்டிருந்த உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. அவருடைய சுவாச மண்டலம் செயலிழந்ததால் ஸ்மிட் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சுவாச மண்டலம் செயலிழந்ததற்கு அவரது நுரையீரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவுதான் காரணமென்று உடற்கூறாய்வு அறிக்கை கூறியது. 

அவரது கண்கள், நுரையீரல், சிறுநீரகம், இதயம், மூளை போன்ற உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. அதுதான் அவர் மரணமடையக் காரணம்.

பூம்ஸ்காங் என்ற இந்தப் பாம்புடைய நஞ்சு உடல் முழுவதும் பரவலாக ஊடுருவி ரத்தக்கட்டுகளை உருவாக்குகிறது. அதனால், ரத்தம் தன் உறையும் திறனை இழந்துவிடுகிறது. இதனால், இந்தப் பாம்பிடம் கடிபட்டோர் உடலில் பல உறுப்புகளில் ரத்தம் கசிந்து இறந்துவிடுகின்றனர். இந்த வகை மரப்பாம்பு மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா முழுவதும் காணப்படுகின்றது. சுமார் 72 இன்ச் வரை அதாவது 6 அடிவரை இது வளரக்கூடியது. ஊர்வனவியலாளர் ஸ்மிட் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடந்த அறிவியல் ஆய்வுகள் பூம்ஸ்லாங் (Boomslang) பாம்பு ஆப்பிரிக்காவின் அதிக நஞ்சுள்ள பாம்பு வகைகளில் ஒன்று என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை பச்சோந்திகள், பல்லிகள், தவளைகள், சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உணவாகக் கொள்கின்றன. ஸ்மிட் ஆய்வுசெய்த பாம்பு அளவில் சிறியதாக இருந்ததும், அதன் பல் மூன்று மில்லிமீட்டர் ஆழமுடைய காயத்தை மட்டுமே ஏற்படுத்தியதும், கடிபட்ட ஸ்மிட் ஆரோக்கியமாக இருந்ததுமே அவர் நீண்டநேரம் உயிருடனிருந்ததற்கான காரணங்களாக நம்பப்படுகிறது. ஸ்மிட் காலகட்டத்தில், இந்த வகைப் பாம்பின் நஞ்சுக்கு நஞ்சு முறி மருந்துகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் தன் ஆய்வுமுடிவைக் கைவிட்டுச் சிகிச்சை எடுத்திருந்தாலும் அவரைக் காப்பாற்றியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. 

பாம்புகள் நிபுணர் ஸ்மிட்

ஸ்மிட் தான் பாம்புக்கடிக்கு ஆளானபின், மரணத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் அதைக் கண்டு அஞ்சவில்லை. அதற்கு மாறாகத் தன் பாதிப்புகளைப் பதிவுசெய்து வைத்ததன் மூலம் எதிர்கால ஆய்வுகளுக்கு உதவியுள்ளார். இதுதான் ஆய்வுமனம். ஆய்வாளர்களின் மனம். தன் செயல்கள் எதுவாக இருப்பினும் அதைத் தமக்கு அடுத்ததாக வருபவர்களுக்குப் பயனுள்ள வகையில் பதிவு செய்துவைக்க வேண்டுமென்ற அக்கறை. ஸ்மிட் செய்துவைத்த பதிவுகள் பின்னாளில் பூம்ஸ்லாங் என்ற அந்த ஆப்பிரிக்க மரப்பாம்பு வகையைப் பற்றிய ஆய்வுகளில் பயன்பட்டன. இப்போது அதனால் கடிபட்டால் குணப்படுத்தத் தேவையான நஞ்சு முறி மருந்துகள் இருக்கின்றன. அது பலருடைய உயிரையும் காப்பாற்றியுள்ளது. பாம்புகள் பற்றிய ஆய்வுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல புதிய ஆவணங்களை விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஸ்மிட் கொடுத்துச்சென்ற ஆய்வு அவருடைய பெயரை வரலாற்றில் இடம்பெற வைத்துள்ளது. அவருடைய தைரியமும் ஆராய்ச்சியில் அவருக்கிருந்த ஈடுபாடுமே அதற்குக் காரணம்.


டிரெண்டிங் @ விகடன்