மருத்துவப் பலன்கள், ரெசிப்பிகள், அழகு குறிப்புகள் தரும் நுங்கு! | asian palmyra palm's healthcare and skincare tips

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (03/05/2019)

கடைசி தொடர்பு:18:39 (03/05/2019)

மருத்துவப் பலன்கள், ரெசிப்பிகள், அழகு குறிப்புகள் தரும் நுங்கு!

நுங்குவைச் சாப்பிடுவதால், அழகுக்காகப் பயன்படுத்துவதால், உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

கோடைக்காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கும் நுங்கு, இளநீர் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹீட் ஸ்ட்ரோகிலிருந்து தப்பிக்கலாம். நுங்குவைச் சாப்பிடுவதால், அழகுக்காகப் பயன்படுத்துவதால், உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவப் பயன்கள்: சித்தமருத்துவர் - மு.கார்த்திகேயன்

கோடைக்காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலைப் பாதிக்காமல் காக்கும்.

நுங்கு சாப்பிடும் போது அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு இருப்போம். நுங்குவின் துவர்ப்பான தோல் பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஆகியன நிரம்பியுள்ளன. அதனால் நுங்குவை அதன் தோலுடன் சேர்த்துச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

இயற்கை

நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்குக்  கோடைக்காலத்தில் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதன் மூலம் அம்மை விரைவாகக் குணமாகும். உடலும் வலுப்பெறும்.

கருவுற்ற பெண்களுக்கு குழந்தை வளரத் தொடங்கும் போது பலருக்கும் சாப்பிடும் உணவு செரிமானம் குறைவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்படுகிறது. தகுந்த அளவில் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கருவுற்றிருக்கும் பெண்கள், ஒவ்வாமை பிரச்னை கொண்டவர்கள், வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படும் போதும் குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சுரப்புகளைச் சரி செய்து அடிக்கடி வாந்தி எடுக்கும் பிரச்னையைப் போக்கும்.  

நுங்கில் உள்ள `ஆன்தோசயனின்' எனப்படும் வேதிப் பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே நுங்கினை பெண்கள் அதிகஅளவில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

மருத்துவபலன்

அல்சரால் அவதிப்படுபவர்கள் சீஸன் சமயத்தில் நுங்கினை அதிகளவு சாப்பிடுவதன் மூலம் குடல் புண் சீக்கிரமே ஆறிவிடும். மேலும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளும் நீங்கும்.

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்:

நுங்கு ஜூஸ்:

தேவையானவை:

நுங்கு -  6

சப்ஜா விதை - 2 டேபிள்ஸ்பூன்

தேன் - தேவையான அளவு

நட்ஸ் - 5 

தண்ணீர் - தேவையான அளவு

ஜூஸ்

செய்முறை:

நுங்கைத் தோல் உரித்து அதன் சதைப்பகுதியை தனியே எடுத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து ஜூஸாக்கிக் கொள்ளவும். நுங்கு ஜூஸூடன் சப்ஜா விதை, தேன் நடஸ் சேர்த்துக் கலந்து அரை மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்து கூலிங் ஆனதும் எடுத்துப் பரிமாறவும். இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து உடல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

நுங்கு பால்:

தேவையானவை:

நுங்கு - 10

பால் - 200 மில்லி

மில்க்மெயிட் - 2 டீஸ்பூன்

தேன் - தேவையான அளவு 

ரெசிப்பி

செய்முறை:

நுங்கை தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், மில்க்மெயிட், தேன் சேர்த்து ஒன்றாகக் கலந்தால் நுங்குப் பால் தயார். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விரும்பிச்சாப்பிட அருமையான பானம் இது.

சருமத்திற்கான பலன்கள் - அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

அழகு

நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.

ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள... கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.

தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.

2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க  வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.


டிரெண்டிங் @ விகடன்