முப்பது வருடங்களைக் கடந்தும் மாறாத நேசம்! - பராமரித்தவரை சரியாக அடையாளம் கண்டுகொண்ட யானை | Elephant Recognizes his old zookeeper after 32 years

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (03/05/2019)

முப்பது வருடங்களைக் கடந்தும் மாறாத நேசம்! - பராமரித்தவரை சரியாக அடையாளம் கண்டுகொண்ட யானை

யானை

விலங்கியல் பூங்காவில் தன்னைப் பராமரித்தவரைப் பல வருடங்கள் கழித்து சந்தித்த யானை, அவரைச் சரியாக அடையாளம் கண்டு கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று ஜெர்மனியில் நடந்திருக்கிறது. 1970 முதல் 1980 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஸ்காட்லாந்தில் இருந்த கிளாஸ்கோ விலங்கியல் பூங்காவில் கிரிஸ்டி என்ற பெண் யானை இருந்தது. 1967-ம் ஆண்டு பிறந்த ஆசிய யானையான அதை, பீட்டர் ஆடம்சன் (Peter Adamson) என்பவர் பராமரித்து வந்தார். அதன் பின்னர், 1987-ம் ஆண்டில் கிரிஸ்டி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. பீட்டர் ஆடம்சனுக்கு கிரிஸ்டி ஸ்காட்லாந்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது தெரிந்திருந்தாலும், அது எங்கே சென்றது என்ற தகவல்கள் அவருக்குத் தெரியாமல் இருந்தது.

 பீட்டர் ஆடம்சன்

இந்நிலையில், கிரிஸ்டி தற்போது ஜெர்மனியில் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தார் பீட்டர் ஆடம்சன். தான் பராமரித்த யானையை மீண்டும் சந்திக்க விரும்பினார். அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஜெர்மனியில் உள்ள Neunkirchen விலங்கியல் பூங்காவில் இருந்த கிரிஸ்டியைப் போய் சந்தித்திருக்கிறார். கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆன பின்னரும்கூட அவரைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது கிரிஸ்டி. அவரைத் தனது தும்பிக்கையின் மூலமாக அணைத்து, அன்பை வெளிப்படுத்தியிருக்கிறது. " அவள் என்னை அருகே அனுமதித்து அன்பை வெளிப்படுத்தியது நெகிழ்சியளிக்கும் ஒன்றாக இருந்தது. இந்த நிகழ்வை எனது இதயத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன் " என ஆடம்சன் தெரிவித்திருக்கிறார். யானை, அவரது குரலைவைத்து அடையாளம் கண்டுகொண்டிருக்கலாம் என தற்போது யானையைப் பராமரித்துவருபவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.