`நீ கடிச்சா 8 மணி நேரம்; நான் கடிச்சா 4 மணி நேரம்!' விரியன்களின் சர்வைவல் கதை | the survival story of vipers

வெளியிடப்பட்ட நேரம்: 06:09 (04/05/2019)

கடைசி தொடர்பு:19:35 (14/05/2019)

`நீ கடிச்சா 8 மணி நேரம்; நான் கடிச்சா 4 மணி நேரம்!' விரியன்களின் சர்வைவல் கதை

பாம்புகள் வேண்டுமென்றே யாரையும் கொத்துவது கிடையாது, மனிதர்களும் வேண்டுமென்றே பாம்புகளிடம் கடிபடுபவர்களும் கிடையாது. எல்லா சம்பவங்களும் சர்வைவலை அடிப்படையாக கொண்டே  நடக்கிறது.

`நீ கடிச்சா 8 மணி நேரம்; நான் கடிச்சா 4 மணி நேரம்!' விரியன்களின் சர்வைவல் கதை

ர்வைவல் என்பது ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட்டோம் என்பதில் இல்லை, சாப்பிடாமல் எத்தனை நாள் உயிர் வாழ்ந்தோம் என்பதில் இருக்கிறது. சர்வைவல் தற்காப்பு சார்ந்தது அல்ல, தாக்குதல் தொடர்பானது. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு உயிரினம் மனிதர்கள் மத்தியில் பயத்தை விதைத்திருக்கிறது என்றால் அந்த உயிரினத்தின் வலிமை எப்படிப்பட்டது என யோசித்துக் கொள்ளுங்கள். உலகம் எத்தனையோ கொடுமையான உயிரினங்களையெல்லாம் பார்த்திருக்கிறது. ஆனால், பாம்புகள் அளவுக்கு மனிதர்களை அச்சுறுத்திய ஒரு உயிரினம் கூட பூமியிலில்லை.

பாம்புகளின் இன வரிசைப் பட்டியலில் மோசமானவர்களில் முக்கியமானவர்கள் என்கிற ஒரு வகைப்பாடு இருக்கிறது. ராஜநாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன். இந்த நால்வரும்தான் இந்தியாவின் ‘BIG 4’. இந்த நான்கு தலைக்கட்டில் யார், மனிதனைக் கடித்தாலும், அதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடைசிக் காலம். இதில் கண்ணாடி விரியன் பாம்பும், கட்டுவிரியன் பாம்பும் சர்வைவலில் தனித்தனி ராஜாங்கத்தையே நடத்துபவை.

கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் இரண்டு பாம்புகளும் இரவில் மட்டுமே இரை தேடக் கூடியவை. கட்டுவரையன் என்கிற பெயரே பேச்சு வழக்கில் கட்டுவிரியன் எனப் பெயர்பெற்றது.  கட்டுவிரியனை விடக் கண்ணாடி விரியன் பாம்பு அதிக ஆபத்தானது. கட்டு விரியன் பாம்பின் பல் அளவில் சிறியது. ஆனால், கண்ணாடி விரியன் பாம்பின் பல் அளவில் பெரியது. கண்ணாடி விரியன் ஒருவரைக் கடிக்க நேர்ந்தால் அதன் விஷம்  அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தத்தை உறைய வைத்துவிடும் அளவுக்கு வீரியமானது. அல்லது அதிக ரத்தப் போக்கை ஏற்படுத்திவிடும். ஊசி போன்ற பல்லைக் கொத்துவதற்குப் பயன்படுத்துவதால் விஷத்தை உடனடியாக மனித உடலுக்குள் செலுத்திவிடும். பாம்பு கடித்த நான்கு மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுக்காமல் இருந்தால் அடுத்த கட்டம் மரணம்தான்.

கட்டு விரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணி நேரத்துக்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது. கண்ணாடி விரியன் அவ்வளவு எளிதில் கடிக்கவோ விஷத்தைச் செலுத்தவோ முயற்சி செய்யாது. மாறாக யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலோ தொந்தரவு செய்தாலோ மட்டுமே தாக்கும். பொதுவாக மறைந்து வாழ்கிற உயிரினமாகத்தான் இன்று வரை இருக்கிறது. பாம்புகள் உலகில் ராஜாவான ராஜ நாகம் கடித்து இறந்ததாக அவ்வளவாகச் செய்திகள் இல்லை. ஆனால், கண்ணாடி விரியன் கடித்து இறந்தவர்கள் குறித்த செய்திகள் ஏராளம். வருடத்துக்கு 1000 பேர் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் கடித்து இறக்கிறார்கள் என்கிறது ஒரு தரவு.

சர்வைவல் விரியன் பிரதேர்ஸ்

உணவு விஷயத்தில் இரண்டு பாம்புகளுக்குமே ஒற்றுமை இருக்கிறது. தவளை, பல்லி, எலி எனக் கிடைக்கிற சிறிய உயிரினங்களை தங்களுக்கு உணவாக்கிக் கொள்கின்றன. அடுத்து பசி எடுக்கும்வரை உணவை இரண்டு பாம்புகளுமே எடுத்துக்கொள்ளாது. சில நேரங்களில் மற்ற பாம்புகளையே உண்ணும் பழக்கத்தைக் கொண்டது கண்ணாடி விரியன். கட்டு விரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. சமயங்களில் தன்னுடைய குட்டிகளையே உண்ணும் பழக்கத்தைக் கொண்டது. இவை இரவில் திரியும் பாம்புகள் என்பதால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ, மண், குப்பைகளிலோ பதுங்கிக்கொள்கின்றன. பகலில் சீண்டப்படும்போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்துபோல் சுருட்டிக் கொள்கின்றன. இனப்பெருக்கத்தில் இரண்டும் சற்று வித்தியாசமானவை. கண்ணாடி விரியன் கர்ப்பம் தரித்து குட்டிகளை ஈனும் வகையைச் சார்ந்தது. கட்டு விரியன் பாம்பு முட்டையிட்டு குஞ்சுகளை ஈனும் வகையைச் சார்ந்தது.

இரண்டு பாம்புகளும் மனித நடமாட்டம் இருக்கிற வயல்வெளிகள், சமவெளி பகுதிகளில் வசிக்கக் கூடியவை. வயல்வெளிகளில் இருக்கிற எலிகள் இவற்றின் முக்கிய இரையாக இருக்கிறது. கட்டு விரியன் பாம்புகள் இரவில் மட்டுமே இரை தேடும் வகையைச் சார்ந்தவை. அப்படியான சமயங்களில் மனிதர்கள் தெரியாமல் மிதிப்பதால் கண்ணாடி விரியன் கடித்துவிடுகிறது. கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால் கட்டு விரியன் பாம்பைப் போல வலியோ வேதனையோ இருக்காது என்பதால் அவ்வளவு எளிதில் பாம்பு கடித்ததை உணரமுடியாமல் போய்விடுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மனிதர்களுக்கு அவர்களது சுற்றுப்புறம் நன்கு பழக்கப்பட்டிருப்பதால் டார்ச் லைட் இல்லாமல் இரவில் செல்ல பழகியிருக்கின்றனர். அதனால் இரவில் பாம்புகள் வந்தாலும் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. இதுவே  கிராமப்புற உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

பாம்புகள் வேண்டுமென்றே யாரையும் கொத்துவது கிடையாது, மனிதர்களும் வேண்டுமென்றே பாம்புகளிடம் கடிபடுபவர்களும் கிடையாது. எல்லா சம்பவங்களும் அவரவரின் சர்வைவலை அடிப்படையாகக் கொண்டே  நடக்கின்றன. சர்வைவல் விஷயத்தில் விஷத்துடன் இருப்பவனும் தப்பிப்பான், விழிப்புடன் இருப்பவனும் தப்பிப்பான் எனக்கென்ன என்று இருப்பவனே  பலியாவான். விஷம் இருக்கிறது, விஷம் இல்லை என்பதைக் கடந்து தன் உடலை மூலதனமாக வைத்து  இன்னொரு  உயிரைப் பயமுறுத்த முடியுமென்றால் மனிதனென்ன, விரியனென்ன எல்லாமே மிருகங்கள்தான்.


டிரெண்டிங் @ விகடன்