தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் எப்போதும் முந்துவதன் காரணங்கள் என்னென்ன? - நிபுணர்கள் சொல்கிறார்கள் | why do girls perform better than boys in exams

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (04/05/2019)

கடைசி தொடர்பு:14:28 (04/05/2019)

தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் எப்போதும் முந்துவதன் காரணங்கள் என்னென்ன? - நிபுணர்கள் சொல்கிறார்கள்

''எப்போதுமே பெண் குழந்தைகளுக்கு 'அப்பாவைக் கஷ்டப்படுத்தாம நாம மெரிட்டில் படிக்கணும்' என்கிற எண்ணம் உண்டு. இது மாணவர்களிடம் குறைவு.''

10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் ஒவ்வொரு தடவையும், 'இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்' என்ற செய்தியும் கூடவே வெளியாகும். சில தினங்களுக்கு முன்பு வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில்கூட, மாணவர்கள் 93.3 சதவிகிதம் தேர்ச்சி அடைய, மாணவிகளோ 97.0 சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருந்தார்கள். நேற்று வெளியான சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில்கூட மாணவிகள் 88.7 சதவிகிதம் தேர்ச்சி அடைய மாணவர்கள் 79.4 சதவிகிதம்தான் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இப்படி மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்... கேள்வியை, கல்விப் பணியில் 40 வருட அனுபவமும் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியின் முன்னாள் சீனியர் பிரின்சிபலுமான அஜித் பிரசாத் ஜெயின், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் உயிரியல் ஆசிரியர் எஸ்.என்.ராஜன், பல பள்ளிக்கூடங்களில் சைக்காலஜிஸ்ட்டாகப் பணிபுரியும் எஸ். திவ்யபிரபா ஆகியோரிடம் கேட்டோம். 

மாணவிகள்

''அப்பாவைக் கஷ்டப்படுத்தாம மெரிட்டில் படிக்கணும் என்று மாணவிகள் நினைக்கிறார்கள்.''

                                                                                          -  முன்னாள் சீனியர் பிரின்சிபல் அஜித் பிரசாத் ஜெயின் 

அஜித் பிரசாத் ஜெயின்''இந்தக் காலத்து சமூக வலைதளங்களைத் தாண்டி மாணவர்களிடம் எப்போதுமே கவனச்சிதறல் அதிகமாக இருக்கிறது. இது மாணவிகளிடம், சில வருடங்களுக்கு முன்பு மிக மிகக் குறைவாக இருந்தது. தற்போதும் மாணவர்களைவிடக் குறைவாகவே இருக்கிறது. இது முதல் காரணம்.

இரண்டாவதாக, ஒரு கோல் ஃபிக்ஸ் பண்ணி, அதைச் செய்து காட்டுவேன் என்கிற எண்ணம் மாணவர்களைவிட மாணவிகளுக்கு அதிகம். 

மூன்றாவது காரணத்தை நீங்கள் எப்படி எழுதுவீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது எல்லோரும் அறிந்த விஷயம்தான். ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய பெற்றோர்கள் மகனுக்கு ரிசல்ட் வருவதற்கு முன்னாடியே பெரிய பெரிய கல்லூரிகளில் சீட்டை பிளாக் செய்துவிடுகிறார்கள். என்னுடைய அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன். 99 சதவிகிதம் மதிப்பெண் வாங்கக்கூடிய அளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் 95 சதவிகிதம் மதிப்பெண்தான் வாங்கியிருந்தான். 'உன்னால 99 சதவிகிதம் வாங்க முடியுமே, நீ ஏன் 95 சதவிகிதம் வாங்கினே' என்று கேட்டதற்கு, 'சார், நான் 95 வாங்கினாலும் 100 வாங்கினாலும் மை சீட் இஸ் கன்ஃபார்ம்டு' என்று வெளிப்படையாகச் சொன்னான். இவனைப்போல, இவனுடைய பெற்றோரைப்போல இன்னும் எத்தனை பேர் இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது இல்லையா... இதைப் பணக்காரர்கள் மட்டும் செய்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். பி.சி, எம்.பி.சி என்று கேட்டகிரிகளின் அடிப்படையில் இந்தப் பிரிவு மாணவன் இவ்வளவு மதிப்பெண் எடுத்தாலே கல்லூரிகளில் சீட் கிடைத்துவிடும் என்ற மனப்பான்மையிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் மாணவர்களை, 'இவ்வளவு படித்தால் போதும்; இத்தனை மதிப்பெண் வாங்கினால் போதும் என்பது தேர்ச்சி விகிதத்தில் பின் தங்க வைத்துவிடுகிறது. 

நான்காவதாக, எப்போதுமே பெண் குழந்தைகளுக்கு 'அப்பாவைக் கஷ்டப்படுத்தாம நாம மெரிட்டில் படிக்கணும்' என்கிற எண்ணம் உண்டு. இது மாணவர்களிடம் குறைவு.

ஐந்தாவதாக, ஒரு பாடத்தை பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும்போது 'டியூஷனில் பார்த்துக்கலாம்' என்று நினைப்பான். டியூஷனிலோ 'பள்ளிக்கூடத்துல கவனிச்சுக்கலாம்' என்று நினைப்பான். கடைசியில் இரண்டு இடத்திலுமே கோட்டைவிடுவது மாணவர்கள்தான். ஆனால், மாணவிகள் இரண்டு இடத்திலுமே கவனமாக இருப்பார்கள். 

''படிப்புக்குச் செலவழிக்கும் நேரம் குறைவு.''

                                - ஆசிரியர் எஸ்.என்.ராஜன்

ஆசிரியர் ராஜன்''மாணவர்களுக்குப் படிப்பு விஷயத்தில் மாணவிகளைவிட சீரியஸ்னெஸ் குறைவு. 

ஐக்.யூ,  கிரகிப்புத் தன்மை பெண்களுக்கு இயல்பிலேயே அதிகம். அந்தத் திறமைகள் அவர்களை அதிகமாகத் தேர்ச்சி பெற வைக்கிறது. அந்தக் காலத்தில் வீட்டின் பல பொறுப்புகளைப் பெண்களிடம் கொடுத்ததன் காரணம்கூட இதுதான். 

மாணவிகளுடன் ஒப்பிட்டால், மாணவர்களுடன் படிப்புக்கு செலவழிக்கும் நேரம் குறைவு.''

 

'' 'படி படி' என்கிற தூண்டுதலை மாணவிகள் சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்.''

                                -  சைக்காலஜிஸ்ட் எஸ். திவ்யபிரபா

திவ்யபிரபா''எப்போதுமே தான் செய்கிற விஷயத்தில் முழு கவனத்துடன் இருப்பது, குறிக்கோளில் கவனமாக இருப்பது ஆகியவை மாணவர்களைவிட மாணவிகளிடம் அதிகம். அதனால்தான் தேர்வு என்று வரும்போது பெண்கள் முந்திவிடுகிறார்கள்.

பொதுவாக, ஆண் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களுக்கு கன்ட்ரோல் ஆக மாட்டார்கள். படிப்புக்குச் செலவழிக்கும் நேரத்தைவிட விளையாட்டுக்கு அதிக நேரம் செலவழிப்பார்கள்.

ஒவ்வொரு மாணவருமே ஒவ்வொரு வகை என்றாலும், பொதுவாகப் பார்த்தால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின்  'படி படி' என்கிற தூண்டுதலை மாணவிகள் சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள். மாணவர்களிடம் இது குறைவு. 

மாணவர்களின் கவனம் சுலபமாகச் சிதறிவிடும். மாணவிகளுக்குப் பொறுமை அதிகம். புரியாததையும் முயற்சி செய்து படித்துவிடுவார்கள். இது மாணவர்களிடம் குறைவு. இந்த சின்னச் சின்ன வித்தியாசங்கள்தான் தேர்வு முடிவுகளின்போது தெரிகிறது என்று நினைக்கிறேன்.''


டிரெண்டிங் @ விகடன்