அட்சய திருதியை தினத்தில் தங்கத்தின் விலை குறையுமா? | will Gold Rate be down

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (04/05/2019)

கடைசி தொடர்பு:13:39 (04/05/2019)

அட்சய திருதியை தினத்தில் தங்கத்தின் விலை குறையுமா?

அட்சய திருதியை

ட்சய திருதியை நெருங்கி வரும் வேளையில், ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. வருடம் முழுவதும் தங்கம் வாங்காதவர்கள்கூட, அட்சய திருதியை தினத்தில் தங்க நகைகள் வாங்கலாம் என யோசிப்பார்கள். ஏனெனில், அந்த நாளில் தங்கம் வாங்கினால், வருடம் முழுவதும் தங்கம் சேரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

வருகிற செவ்வாய் கிழமை, மே 7-ம் தேதி அட்சய திருதியை என்பதால், தங்க நகை வாங்குவதற்கு எல்லோரும் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. மே 3-ம் தேதியான நேற்று, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை 24,000 ரூபாய்க்கும் (ஒரு கிராம் - ரூ.2,992) குறைந்து வர்த்தகமானது. ஒரு வாரத்துக்கு முன்பாக இதே சனிக்கிழமை நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,055 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதனுடன் ஒப்பிடும்போது ஒரு பவுன் (22 கேரட்) தங்கத்தின் விலை 504 ரூபாய் குறைந்துள்ளது.  

சர்வதேசப் பொருளாதார சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், தங்கத்தின் விலையும் நேர் எதிராகப் பயணம் செய்யக் கூடியவை. ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்போதும், தங்கத்தின் விலை குறையும். இப்போதும் அந்தச் சூழ்நிலைதான் நிலவி வருகிறது. மே 4-ம் தேதியான இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.17 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை சற்றே பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதே சூழ்நிலை தொடருமானால், அட்சய திருதியை நாளிலும், மக்களால் குறைவான விலையில் தங்கத்தை வாங்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இன்று (4.5.2019) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,012.