வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க...ஏன்னா! #EndemicBirdDay | Today celebrated as a world Endemic Bird Day... Here's you should do

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (04/05/2019)

கடைசி தொடர்பு:16:48 (04/05/2019)

வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க...ஏன்னா! #EndemicBirdDay

றவை நோக்குவர்களும் பறவை ஆர்வலர்களும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பல ஆசைகள். குறிப்பாக ஓராண்டில் முடிந்த அளவில் புதிய பறவைகளைப் பார்க்க வேண்டும் என்று. அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் ebird செயலி. நாம் பார்த்த பறவை, இடம், நேரம் ஆகியவற்றை இதில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதே பறவை வேறு இடத்திலும் பதிவாகி இருக்கும். இதன் மூலம் ஒரு பறவை பயணிக்கும் இடங்களையும், வலசை செல்லும் இடங்களையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். இதனால் எதிர்வரும் பறவைப் பயணங்களில் எங்கே, எப்போது  எந்த வகையான பறவைகளைப் பார்க்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிடலாம்.

பறவை

ஒவ்வோர் ஆண்டும் மே முதல் வாரத்தில் ஒரு நாள் பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெறுகிறது. உலகில் உள்ள புகைப்படக்காரர்கள், பறவையியல் ஆய்வாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், பறவை நோக்குபவர்கள் என 30,000-க்கும் மேற்பட்டோர் இந்த நாளில் களம் இறங்குவார்கள். இது ஒரு 24 மணி நேரக் கணக்கெடுப்பு பணி ஆகும். இந்த ஆண்டு மே 4-ம் தேதி ஆன இன்று நடைபெறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை மாறுபாட்டால் நிலம், நீர் மற்றும் வலசைப்பறவைகளின் எண்ணிக்கை மாறுபடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது சுற்றுப்புறங்களில் உள்ள பறவைகளை தெரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட இந்தியப் பறவைகளை 1000 க்கும் மேற்பட்டோர் ஆவணமாகப் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bird

எப்படி கலந்து கொள்வது?

இந்த தினத்தில் நீங்கள் பார்க்கும் பறவைகளை குறிப்புகளாக எடுத்து வைத்தல் சிறப்பு 

பயன்பாட்டு தளத்திலிருந்து ebird செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டு லாகின் செய்து கொள்ளவேண்டும்

காலை, மாலை பறவைகள் கணக்கெடுப்பு செய்ய சரியான நேரம், உடன் நண்பர்களுடன் செல்வது இன்னும் தனிச் சிறப்பு

உங்கள் வீட்டில் அருகில் உள்ள குளங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்ற இடங்களில் கணக்கெடுப்பு செய்து பறவையின் பெயர், நேரம், இடம், ஆவணப்படுத்தியவரின் பெயர் எனச் செயலியில் பதிவுசெய்யவேண்டும்

http://ebird.org/globalbigday/ என்ற லிங்கில் அப்டேட்களை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

காகம்

இதன் மூலம் பறவைகளின் பரவல், எண்ணிக்கை உயர்வு, அடர்வு போன்றவற்றை தெரிந்துகொண்டு அவற்றின் பாதுகாப்பிற்கும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பிற்கும் உதவும். ஓரிடத்திலிருந்து கொண்டு பறவைகளைப் பார்த்து தொடர்ச்சியாகப் பதிவு செய்தால் மட்டுமே அவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும். நம்முடைய ஒவ்வொரு பதிவும் ஒரு பறவையின் பாதுகாப்பிற்கு உதவும்.