ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S ஏன் வாங்கலாம், ஏன் வாங்க வேண்டாம்... சில காரணங்கள்! | 9 points to know before you buy Xtreme 200S

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/05/2019)

கடைசி தொடர்பு:10:00 (05/05/2019)

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S ஏன் வாங்கலாம், ஏன் வாங்க வேண்டாம்... சில காரணங்கள்!

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S ஏன் வாங்கலாம்,  ஏன் வாங்க வேண்டாம்... சில காரணங்கள்!

ஹீரோவில் புது வரவாக விற்பனைக்கு வந்துள்ளது, எக்ஸ்ட்ரீம் 200S. கரிஸ்மா மூலம் ஃபுல்ஃபேரிங் பைக்குக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த ஹீரோ, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஃபுல்பேரிங் பைக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை அடிப்படையாகவைத்து உருவாகியிருக்கும் இந்த பைக்கை ஏன் வாங்கலாம், ஏன் வாங்கக் கூடாது என்று 5 காரணங்களைப் பார்ப்போம்.

எக்ஸ்ட்ரீம் 200S

வாங்கத் தூண்டும் விஷயங்கள்

1. ஸ்டைல்

ஒரு சாலையில் எத்தனை பைக் போனாலும் சரி, ஃபுல்ஃபேரிங் பைக்குகள் போகும்போது ஒரு நொடி தலை திரும்பாமல் இருக்காது. ஃபேரிங் என்றால் பெர்ஃபாமென்ஸ் மட்டுமில்லை ஸ்டைலும் கூட. எக்ஸ்ட்ரீம் 200S பைக்குக்கு நேர்த்தியான, ஓவர்டோஸ் இல்லாத சமத்தான டிசைனைக் கொடுத்துள்ளார்கள். ஸ்டிக்கரிங் பெரிதாகக் கிடையாது, சென்டர் பேனலில் கார்பன் ஃபைபர் லுக், ஸ்லிம்மான LED ஹெட்லைட், ஃபேரிங்கில் ஸ்டைலாக ஃபின்ஸ், அகலமான ஹேண்டில்பார் மற்றும் தடினமான டயர் எனக் கச்சிதம் காட்டியுள்ளது ஹீரோ. எங்கேயும் ஓவர்டோஸ் கிடையாது. சிவப்பு, கறுப்பு மற்றும் பிரவுன் என மூன்று நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது. மூன்று நிறங்களும் அருமை என்றாலும் சிவப்பு நிறம் கூடுதலாக ஈர்க்கிறது.

கரிஸ்மாவை நினைவுபடுத்தும் ஃபேரிங் ஸ்டைல்

2.  ஃபிரேம்

எக்ஸ்ட்ரீம் 200R, எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S என ஒரே ஃபிரேமில் நான்கு வித்தியாசமான பைக்குகளைக் கட்டமைத்துள்ளார்கள். நான்கு பைக்குகளிலும் குறை கூற முடியாத பாகம் ஃபிரேம். எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை சிட்டியில் ஓட்டிப் பார்த்தோம். டிராஃபிக்கில் அருமையான ஹேண்ட்லிங் கொடுத்தது. நெடுஞ்சாலையில் வேகமாகப் போகும்போதும் ஸ்டேபிளாக இருந்தது. இதே ஃபிரேம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் ஆஃப்ரோடு செய்யவும் அருமையாக இருக்கிறது. 200T பைக்கில் பெரிய பேனியர்களையும், லக்கேஜையும் தூக்கிக்கொண்டு தொலைதூரப் பயணங்களுக்குப் போக எந்தச் சலனமும் இல்லாமல் எடையைத் தாக்குப்பிடிக்கிறது இந்த ஃபிரேம். எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக்கில் ஓட்டியபோது, கார்னர்களில் நம்பிக்கையோடு வளைய முடிந்தது. அதிலும் ஃபாஸ்ட் கார்னர்களின் இந்த ஃபிரேம் கொடுக்கும் ஸ்டெபிளிட்டி ஹீரோவின் இன்ஜினீயரிங் அற்புதம். ஒரே ஃபிரேம் பல பைக். எல்லாமே சூப்பர். ஹீரோவின் டயமண்ட் ஃபிரேமே, லவ் யூ 3000.

எல்லா பயன்பாடுகளுக்கும் பொருந்தும் ஃபிரேம் டிசைன்

3. இன்ஜின்

200R-ல் இருக்கும் அதே இன்ஜின்தான். 18.4bhp பவர் மற்றும் 17.1Nm டார்க்கைத் தருகிறது. இன்ஜின் செம ஸ்மூத், வைப்ரேஷன் கிடையாது. டிராக்கில் ஓட்டியபோது 4000rpm-ல் ஃபுட்ரெஸ்ட்டில் லேசாக வைப்ரேஷன் வர ஆரம்பித்தாலும் 4500rpm கடந்ததும் வைப்ரேஷன் காணாமல் போய்விட்டது. இன்ஜின் ஸ்மூத்தாக மட்டுமில்லை ரிலாக்ஸ்டாகவும் இருந்தது. ரேஸ் டிராக்கில் ஓட்டும்போது, இன்ஜின் போரடித்துவிடும். ஆனால், சிட்டியில் ஓட்டுவதற்கு சுறுசுறுப்பாகவும், மைலேஜ் அதிகமாகவும் கிடைக்கும். எக்ஸ்ட்ரீம் 200S பைக்கில் பவர் டூ வெயிட் ரேஷியோ ஜிக்ஸர் SF பைக்கைவிட அதிகம். R15S பைக்குக்கு நிகரானது.

ப்ளூடூத் வசதியுடன் கூடிய TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

4. வசதிகள்

தற்போது, இந்தியாவில் ப்ளூடூத் வசதி இருக்கும் ஒரே பைக் இதுதான். கால் அலெர்ட், ப்ளூடூத் நேவிகேஷன் போன்ற செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகளுடன் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் இருக்கும் ஒரே பைக் இதுதான்.  சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் ரிமைண்டர், போட்டியாளர்களின் பைக் எதிலுமே கிடையாது. கியர் பொசிஷன் மற்றும் 2 ட்ரிப் மீட்டர் ஜிக்ஸரில் உண்டு. ஆனால், R15S பைக்கில் கிடையாது. 

சரியான விலை

5. விலை

VFM என்பதை முதலில் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய நிறுவனமே ஹீரோதான். விலையில் தவறு செய்வார்களா என்ன! எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைவிட 200S ரூ. 4,000 விலை அதிகம். இந்த விலைக்கு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், LED லைட், பேரிங் போன்றவற்றைப் பொருத்தியிருக்கிறார்கள். தற்போது, 200S உடன் போட்டிபோடும் பைக்குகளாக இருப்பது சுஸூகி ஜிக்ஸர் SF மற்றும் யமஹா R15S. ரூ.98,500 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் ஜிக்ஸரைவிட ரூ.424 மட்டுமே விலை அதிகம். R15S பைக்கைவிட ரூ.18,500 விலை குறைவு.

இதுவும் முக்கியம்தான்!

1. ஸ்போர்ட்ஸ் பைக் கிடையாது

என்னதான் ஸ்போர்ட்ஸ் பைக் போல ஃபேரிங், நம்பகத் தன்மையான சேஸியைk கொடுத்திருந்தாலும், ஒரு டிராக் பைக்கை அனுபவிப்பது போன்ற ஃபீல் உங்களுக்குக் கிடைக்காது. டிராக்கின் 2-வது லேப்பிலேயே பைக் போரடித்துவிடும். நன்றாகக் குனிந்து, எதிர்kகாற்று இல்லாமல், டிராக்கில் பழக்கப்பட்டவர் என்றாலும்கூட, இந்த பைக்கில் 125 கி.மீ வேகம் தாண்டி போகமுடியாது. நெடுஞ்சாலையில் 120 கி.மீ வேகத்தைத் தொட வேண்டும் என்றால், அதிக தூரம் போக வேண்டும்.

ஸ்போர்டியாக இருப்பதெல்லாம் ஸ்போர்ட்ஸ் பைக் கிடையாது

2. எர்கானமிக் குறைபாடுகள்

பைக்கில் சில எர்கானமிக் குறைபாடுகளும் உள்ளன. ஃபேரிங் பைக்குகளில் கண்ணாடியை ஃபேரிங்கில் பொருத்துவதால், பின்பக்கம் வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும். 200S பைக்கில் கண்ணாடிகள் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டுள்ளதால், தோள்பட்டைகள் பாதி கண்ணாடியை மறைத்துக்கொள்கின்றன. முன்பக்கம் இருக்கும் இடது ஃபுட்பெக் சைடு ஸ்டாண்டு போடுவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. கியர் லீவரின் டிராவல் அதிகமாக இருப்பதால், பைக்கின் பிக்கப்பை அனுபவிக்க முடியவில்லை.

ஹேண்டில்பாரில் மிரர்

3. ப்ரீமியம்

இந்த பைக்கை ஹீரோ, ப்ரீமியம் கம்ப்யூட்டர் என்று பொசிஷன் செய்துள்ளது. பைக்கின் கட்டுமானத் தரம் சிறப்பாகவும், டிசைன் அழகாகவும் இருந்தாலும், ப்ரீமியம் ஃபீல் கிடைக்கவில்லை. பெயின்ட் தரம் அருமை, ஆனால், ஜிக்ஸரில் கொடுக்கப்பட்டது போல ஸ்பிளிட் சீட், மற்றும் ஸ்டிக்கரிங் வேலைப்பாடுகள் கொடுத்திருந்தால் இன்னும் பைக்கை ப்ரீமியமாக்கியிருக்கலாம். ஃபுட்பெக்ஸின் டிசைனும், தரமும் சுமார்தான். பைக்கை உன்னிப்பாகக் கவனித்தால் ஃபுட்பெக், ஃபிரேம் போன்ற சில இடங்களில் வெல்டுகள் பார்க்க எதையோ அப்பிவைத்தது போல இருக்கிறது.

சரியாக ஃபினிஷ் செய்யப்படாத வெல்டிங்

4. விநியோகம்

ஹீரோ ஒரு விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், அது பைக்கின் விநியோகம்தான். ஹீரோவின் எந்த பைக்காக இருந்தாலும் விற்பனைக்கு வந்தபிறகு, தமிழ்நாட்டில் உள்ள ஷோரூம்களுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகின்றன. Xtreme மற்றும் Xpulse பைக்குகள் மே மாத இறுதிக்குள் அனைத்து ஷோரூம்களிலும் வந்துவிடும் என்று கூறியுள்ளது ஹீரோ. இம்முறையாவது விநியோகத்தை  வேகப்படுத்துகிறார்களா?!


டிரெண்டிங் @ விகடன்