செதில், தந்தம், கொம்பு... கறுப்புச் சந்தையில் கல்லா கட்டும் விலங்குகளின் உறுப்புகள்! | Some of the most trafficked animal parts worldwide

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (05/05/2019)

கடைசி தொடர்பு:15:39 (05/05/2019)

செதில், தந்தம், கொம்பு... கறுப்புச் சந்தையில் கல்லா கட்டும் விலங்குகளின் உறுப்புகள்!

உலகம் முழுவதும் பல்வேறு விலங்குகளின் உறுப்புகள் சட்ட விரோதமாகக் கடத்தப்படுகின்றன. அதில் சிலவற்றின் மதிப்பு தங்கத்தை விடவும் அதிகம்.

செதில், தந்தம், கொம்பு... கறுப்புச் சந்தையில் கல்லா கட்டும் விலங்குகளின் உறுப்புகள்!

யற்கை ஒவ்வொரு விலங்குக்கும் கொடுத்திருக்கும் உறுப்புகள் ஏதோ ஒரு வகையில் அவற்றுக்குத் தேவைப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிடம் இருந்து உறுப்புகளை மனிதன் திருடுவது காலம் காலமாக நடந்து வருகிறது. உலகத்தின் பார்வையில் சில விலங்குகளின் உறுப்புகள் சாதாரணமான ஒன்றாகத் தெரிந்தாலும் கள்ளச்சந்தையில் அவற்றுக்கு இருக்கும் மதிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. விலங்குகளிடம் இருக்கும் அந்த உறுப்புகள் தங்கத்தை விடவும் பல மடங்கு விலையுயர்ந்தவை என்பது கடத்தல்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

உறுப்புகளுக்காகத் தொடர்ந்து வேட்டையாடப்படுவதால் பல விலங்கு முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் இருக்கின்றன. உலகம் முழுவதும் கடத்தலைத் தடுக்க எவ்வளவோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதை எப்படியாவது முறியடித்து விடுகிறார்கள் கடத்தல்காரர்கள். இப்படி உலகம் முழுக்க டன் கணக்கில் உயிருடனோ, கொல்லப்பட்டோ கடத்தப்படும் விலங்குகளின் எண்ணிக்கையும் உறுப்புகளின் பட்டியலும் பெரிது. தற்போது எந்த விலங்கு உறுப்புகள் அதிகமாகக் கடத்தலுக்குள்ளாகின்றன? அவற்றை எந்தத் தேவைக்காகக் கடத்துகிறார்கள்?

எறும்புத்தின்னி செதில்

எறும்புத்தின்னி  விலங்கு

பார்ப்பதற்குச் சாதுவான விலங்காகத் தோற்றமளிக்கும் எறும்புத்தின்னிதான் இன்றைக்கு உலகில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகளில் முதலிடம் பிடிக்கிறது. எறும்புத்தின்னியின் உடலில் காணப்படும் செதில்கள்தான் கடத்தல்காரர்களின் முதல் இலக்காக இருக்கிறது. மேலும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் கொல்லப்படுகிறது. இவற்றின் உறுப்புகளுக்கான சந்தை உலகம் முழுவதும் இருந்தாலும் மிக முக்கியமான சந்தை சீனாதான். கடந்த 2013-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தரை தட்டி நின்றது. அதை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் சுமார் 10 டன் அளவுக்கு எறும்புத்தின்னியின் இறைச்சி பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.

எறும்புத்தின்னி செதில்

கடந்த மாதம் கூட சிங்கப்பூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள 25 டன் எடை எறும்புத்தின்னி செதில்கள் அடங்கிய இரண்டு கன்டெயினர்கள் பிடிபட்டன. சீன பாரம்பர்ய மருத்துவத்தில் இந்த செதில்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும் பல நோய்களைக் குணப்படுத்தும் என்றும் நம்பப்படுவதால் இவை அதிகமாகக் கடத்தப்படுகின்றன. இவை அங்கே கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனையாகின்றன. இப்படி உறுப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் கொல்லப்படும் எறும்புத்தின்னிகளின் எண்ணிக்கை மட்டுமே பல லட்சங்களைத் தாண்டும். 

யானைத் தந்தம்

யானைத் தந்தம்

யானைகளின் தந்தத்துக்குக் கள்ளச் சந்தையில் இருக்கும் கிராக்கி குறைவதேயில்லை. எந்த நிலையில் இருந்தாலும் விலை போகும் பொருள் அது. யானைத் தந்தம் பெரும்பாலும் விலை உயர்ந்த கைவினைப் பொருள்கள் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு. யானைத் தந்தத்தைப் பொறுத்தவரைச் சீனாவே மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. அங்கே பல வருடங்களாக அரசே யானைத் தந்த சந்தைக்கு அனுமதி அளித்திருந்தது. பின்னர் யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் 2017-ம் ஆண்டில் அதற்கு முடிவு கட்டியது. வளர்ப்பு யானைகளிடம் இருந்தும் தந்தம் வெட்டியெடுக்கப்படுவதுண்டு. ஆனால் அவை அதற்காகப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் என்பதால் சிக்கல் எதுவும் கிடையாது. ஆனால் காட்டு யானைகளைக் கொல்வதுதான் கடத்தல்காரர்கள் கடைப்பிடிக்கும் வழியாக இருக்கிறது. துப்பாக்கியால் நெத்தியைக் குறிபார்த்து ஒரே சுடு, யானை நிலத்தில் விழுந்து அடங்கும். பின்னர் எது தேவையோ... தந்தம், தோல் என வெட்டியெடுப்பார்கள். பின்னர் அவற்றைத் தேவை இருக்கும் இடத்துக்குக் கடத்துவார்கள்.

யானைத் தந்தம்

இப்படி தந்தத்துக்காக ஒவ்வொரு நாளும் சராசரியாக நூறு யானைகள் கொல்லப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் யானைகளின் எண்ணிக்கை 62% அளவுக்குக் குறைந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். 

காண்டாமிருகக் கொம்பு

காண்டாமிருகம்

காண்டாமிருகத்தின் கொம்பு உருவத்தில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம் ஆனால் சந்தை மதிப்பு என்று வந்து விட்டால் தங்கம் கூட இதற்குப் பின்னால்தான் நிற்கும். காண்டாமிருக கொம்பு கள்ளச் சந்தையில் கிலோ 50 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. உலக அளவில் இதற்கான மிகப்பெரிய சந்தை எது வென்று பார்த்தால் அது வியட்நாம் நாடுதான். அந்நாட்டில் காண்டாமிருக கொம்பை வைத்திருப்பது என்பது பெருமைக்குரிய அடையாளம்.

காண்டாமிருகக் கொம்பு

மேலும் சீன பாரம்பர்ய மருத்துவ முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் இருப்பது மனிதனின் நகத்தில் இருப்பதைப் போன்ற கெரட்டின் என்ற பொருள் மட்டுமே. அதற்கு எந்த வித மருத்துவ குணங்களும் இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டாலும்கூட வேட்டையாடுபவர்கள் நிறுத்துவதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்பிரிக்காவில் பத்து லட்சம் காண்டாமிருகங்கள் வாழ்ந்து வந்தன. ஆனால் வேகமாக வேட்டையாடப்பட்டதன் காரணமாக அவற்றின் எண்ணிக்கை தற்போது பத்தாயிரத்துக்கும் கீழே குறைந்திருக்கிறது. இவையெல்லாம் கடத்தல்காரர்களின் பட்டியலில் இருக்கும் ஒரு சில உறுப்புகள்தான். இவை தவிர்த்து புலிகள், சிறுத்தைகள், என வன விலங்குகள் தொடங்கி நட்சத்திர ஆமை, கடல் அட்டை என எந்த உயிரினங்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.


டிரெண்டிங் @ விகடன்