அட்சய திருதியை தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | atchaya thiruthiyai Gold buying tips

வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (06/05/2019)

கடைசி தொடர்பு:11:12 (06/05/2019)

அட்சய திருதியை தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நகைக் கடைகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் அட்சய திருதியை மாதிரியான தினங்களில், தங்கம் வாங்கும்போது, எப்போதும் இருக்கும் கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.

அட்சய திருதியை தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ங்கம் வாங்குவதற்கென்றே இருக்கும் ஒரு திருவிழா என்றால் அது அட்சய திருதியைதான். இதோ வரும் மே 7-ம் தேதி, அந்த அட்சயதிருதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆயிரங்கள், லட்சங்கள் என்று கொடுத்து தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் மக்களே, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற எடை மற்றும் தரத்தில் அந்தத் தங்கம் இருக்கிறதா என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்ததில்லை என்றால்... இனிமேல் யோசியுங்கள். ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும், கவனித்து தங்கம் வாங்குங்கள். நகைக் கடைகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் அட்சய திருதியை மாதிரியான தினங்களில், தங்கம் வாங்கும்போது, எப்போதும் இருக்கும் கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.

அடிப்படையே ஹால்மார்க்தான்!

அட்சய திருதியை

`ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் முத்திரை. வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை தங்கத்தின் தரத்திற்கான முன்னிலைப்படுத்தப்படுகிறது. 22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் ஆபரணத்தில், 7.328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 0.672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காகச் செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் இனி ஜாக்கிரதையாக இருங்கள்.  

எடையில் ஏமாற்றம்!
இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படிப் பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்கம் அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் ஒருமுறைக்கு நான்குமுறை எடையைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

கண்டுபிடிக்கும் வழிகள்!

அட்சய திருதியை

நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். உதாரணமாக, தங்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எண்  958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என்று அர்த்தம். அதுவே 916 என்றால் - 22 காரட் தங்கம், 875 என்றால் - 21 காரட் தங்கம், 750 என்றால் - 18 காரட் தங்கம், 708 என்றால் - 17 காரட் தங்கம், 585 என்றால் - 14  காரட் தங்கம், 375 என்றால் - 9 காரட் தங்கம் என்று அர்த்தம். தங்கத்தின் மதிப்பீடும், ஹால் மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக.. `A’ என இருந்தால், அந்தத் தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். `B’ - 2001, ‘C’ - 2002, ‘D’ - 2003, ‘E’ - 2004, ‘F’ - 2005, ‘G’  - 2006, ‘H’ - 2007, ‘J’ - 2008. இதுபோல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும். ‘U’ என இருந்தால் 2019-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தங்கம் என்று அர்த்தம். மேலும் நகை வியாபாரிக்குரிய அடையாள குறியீடு இருக்க வேண்டும். 

எக்ஸ்ஆர்எஃப் மெசின்!
தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று எக்ஸ்.ஆர்.எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்துத் தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். பெரிய கடைகளில் இந்த மெசின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை. நீங்கள் வாங்கும் தங்கத்தை எக்ஸ்.ஆர்.எஃப் மெசினில் வைத்துப் பரிசோதித்த பிறகு வாங்குவது நல்லது. 

அட்சய திருதியை

புகார் செய்யுங்கள்!
தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையத்திடம் meenu@bis.org.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தங்களுக்கு அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.
 


டிரெண்டிங் @ விகடன்