''கிலியூட்டும்... சிரிப்பூட்டும்..!'' - புதுவை ஸ்பெஷல் 'மஸ்கராத்' #MyVikatan

''கிலியூட்டும்... சிரிப்பூட்டும்..!'' - புதுவை ஸ்பெஷல் 'மஸ்கராத்' #MyVikatan
``கடற்கரையிலுள்ள பூச்சிக்காரனைக் கூப்பிடவா" எனக் கூறி உணவு உண்ண மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தாய்மார்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அழகிய வண்ணமயமான ஆடைகளில் நடனமாடினாலும் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கணம் பயப்பட வைப்பது நடனக் கலைஞர்கள் அணிந்திருக்கும் முகமூடிகள்தாம். முதலில் மட்டுமே பயம், அடுத்த சில நிமிடங்களில் நடனக் குழுவினருடன் குழந்தைகளும் நடனமாடுவார்கள். இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்களையும் நடனமாட வைப்பதே இந்த மஸ்கராத் நடனத்தின் சிறப்பு.

14-ம் நூற்றாண்டில் ஐரோப்பா நாடுகளில் உள்ள ராஜ குடும்பத்தினரை மகிழ்விக்க பல்வேறு குறும்பு அசைவுகளுடன் இந்த மஸ்கராத் நடனம் நடத்தப்பட்டது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நடனமாக இருந்தாலும் கூட பிரான்ஸ் நாட்டினரே இந்த நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அகோரமான உருவம் மற்றும் விலங்குகளின் முகமூடி அணிந்த உடையுடன் ஆடுவதே இந்த நடனத்தின் சிறப்பு.

மஸ்கராத் நடனத்தில் ஆண், பெண், கரடி நாய், குரங்கு, சேவல், பேய், மிக்கிமவுஸ் உட்பட பல்வேறு உருவங்களின் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அணிந்திருக்கும் முகமூடிகளின் உருவத்திற்கு ஏற்றாற்போல் உடல் அசைவுகளுடன் பார்வையாளர்களை பயமுறுத்தி மகிழ்விப்பதுதான் இந்த நடனத்தின் சிறப்பு. மேலும் விலங்குகளின் பாய்ச்சல், கர்ணம் போன்ற சாகச செயல்களும் நடனத்தில் அதிகம் காணப்படுவதால் ஆண்களின் பங்களிப்பே அதிகமாக இருக்கும்.

புதுச்சேரி மாநில பாரம்பார்ய நடனமாக மஸ்கராத் சிறந்து விளங்குவதால் அரசு விழாக்களில் இந்த நடனத்தின் பங்கு கண்டிப்பாக இருக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகள், கோயில் விழா மற்றும் அரசியல் மாநாடு, ஊர்வலம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்த நடனம் நடத்தப்படுகிறது. பொது இடங்களில் நடத்தப்படும் இந்த நடனத்தைப் பார்த்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு கொள்ளைப் பிரியம் அவர்கள் கேமராக்கள் க்ளிக், க்ளிக் சத்தத்துடன் நடனம் முடியும் வரை படமெடுக்கும்.