இதுதான் புதிய ஸ்கார்ப்பியோவா..? டெஸ்ட்டிங்கில் புதிய மஹிந்திரா எஸ்யூவி! | Mahindra's New SUV Spotted Testing... Is this the New Scorpio?

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (06/05/2019)

கடைசி தொடர்பு:14:05 (06/05/2019)

இதுதான் புதிய ஸ்கார்ப்பியோவா..? டெஸ்ட்டிங்கில் புதிய மஹிந்திரா எஸ்யூவி!

செங்கல்பட்டு அருகே டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் எம்.அர்ஜூன். தற்போது விற்பனையில் இருக்கும் மாடல், கடந்த 2017-ம் ஆண்டு பேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. இதில் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது மஹிந்திரா?

மராத்ஸோ, ஆல்ட்டுராஸ், XUV3OO, TUV3OO பேஸ்லிஃப்ட்... கடந்த 8 மாதங்களில் மஹிந்திரா, போட்டிமிகுந்த இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்திய கார்கள்! இந்த இடைப்பட்ட காலத்தில், தொழில்நுட்ப ரீதியில் ஃபோர்டு நிறுவனத்துடன் கூட்டணியும் அமைந்திருக்கிறது; மேலும் நடந்துமுடிந்த ஜெனிவா மோட்டார் ஷோ 2019-ல் பினின்ஃபரினா பட்டிஸ்ட்டா காரையும் காட்சிபடுத்தியிருந்தது. இப்படி 360 டிகிரியில் இயங்கிக்கொண்டிருக்கும் மஹிந்திரா, நடப்பு ஆண்டில் வரப்போகும் க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு கோட்பாடுகளுக்கு ஏற்றபடி, ஸ்கார்ப்பியோ உட்பட தனது தயாரிப்புகளை மேம்படுத்தும் பணிகளில் அதி தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது.

மஹிந்திரா

புதிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், இரண்டாம் தலைமுறை தார் மற்றும் XUV5OO, BS-6 விதிகளுக்குட்பட்ட XUV3OO என இந்தப் பணிகளின் பட்டியலும் நீள்கிறது. தற்போது அதில் மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோவும் இணைந்திருக்கிறது. செங்கல்பட்டு அருகே டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் எம்.அர்ஜூன். தற்போது விற்பனையில் இருக்கும் மாடல், கடந்த 2017-ம் ஆண்டு பேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. இதில் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது மஹிந்திரா?

ஸ்கார்ப்பியோ

Z101 என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்டிருக்கும் இது, மராத்ஸோவுக்கு அடுத்தபடியாக Mahindra North American Technical Centre மற்றும் Mahindra Research Valley ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கும் இரண்டாவது மாடல். புதிய ஸ்கார்ப்பியோவும் தற்போதைய மாடல் போலவே லேடர் ஃப்ரேம் கட்டுமானத்தையே கொண்டிருக்கும் எனத் தகவல் வந்துள்ளது. கட்டுமஸ்தான டிசைன்தான் இந்த எஸ்யூவியின் அசுர பலம் என்பதால், அது புதிய மாடலிலும் தொடரும் என நம்பலாம். ஆனால், சிறப்பான ஏரோடைனமிக்ஸுக்காக, முன்பைவிட இதன் உயரம் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

ஸ்கார்ப்பியோவின் கேபினில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதி இருந்தாலும், தரம் என்பது ஒரு மைனஸாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தக்குறை புதிய மாடலில் களையப்படலாம். கால ஓட்டத்துக்கு ஏற்றபடி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பயன்படுத்தப்படும். புதிய பாதுகாப்பு விதிகளை மனதில் வைத்துப் பார்க்கும்போது, கடைசி வரிசை இருக்கை Front Facing முறையில் மட்டுமே இருக்கலாம். தற்போதைய மாடல் போலவே, இங்கும் ஸ்பேர் வீல் காருக்கு அடியேதான் இடம் பெற்றிருக்கிறது.  

டீசல் எஸ்யூவி

அடுத்த தலைமுறை XUV5OO எஸ்யூவியில் பொருத்தப்பட உள்ள முற்றிலும் புதிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான், மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோவில் பொருத்தப்படும். முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினைவிட இது 80கிலோ குறைவான எடையைக் கொண்டிருக்கிறது. இது 160bhp பவரை வெளிப்படுத்தும் வகையில், BS-6 மாசு விதிகளுக்கு ஏற்றபடி டியூன் செய்யப்படும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீதான வரவேற்பை வைத்துப் பார்க்கும்போது, வழக்கமான 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.

டாடா, கியா, எம்ஜி

4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஆப்ஷனல்தான். அடுத்த ஆண்டில் அறிமுகமாகப்போகும் இந்த எஸ்யூவி, டாடா ஹெக்ஸா தவிர MG ஹெக்டர் - Kia SP Signature கான்செப்ட் - டாடா பஸ்ஸார்டு எனப் புதிய போட்டியாளர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதிய க்ராஷ் டெஸ்ட் மற்றும் மாசு விதிகளுக்கு உடன்பட்டு புதிய ஸ்கார்ப்பியோ வடிவமைக்கப்படும் என்பதால், இதன் விலை நிச்சயம் தற்போதைய மாடலைவிட அதிகமாகவே இருக்கும். ஆனால், மராத்ஸோ போலவே இதுவும் சர்வதேச சந்தையை மனதில்வைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்