`இந்தப் பசிதான் யானைகளின் துயரங்களுக்குத் தொடக்கப்புள்ளி!' யானைகளின் சர்வைவல் கதை | The survival story of elephants

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (06/05/2019)

கடைசி தொடர்பு:20:21 (07/05/2019)

`இந்தப் பசிதான் யானைகளின் துயரங்களுக்குத் தொடக்கப்புள்ளி!' யானைகளின் சர்வைவல் கதை

பசி... இந்த ஒரே காரணம்தான் இன்றைக்கு யானைகள் சந்திக்கும் எல்லாத் துயரங்களுக்கும் காரணம். ஆனால், அது யானையின் பசி அல்ல.

`இந்தப் பசிதான் யானைகளின் துயரங்களுக்குத் தொடக்கப்புள்ளி!' யானைகளின் சர்வைவல் கதை

ர்வைவலில் எந்தவோர் உயிரினமும் துரோகங்களையும் துயரங்களையும் சந்தித்தே ஆக வேண்டும். சர்வைவல், துரோகிகளை உருவாக்கும், காயங்களைக் கொடுக்கும், நினைத்துப் பார்க்க முடியாத துரோகங்களை பரிசளிக்கும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்தையும் கடந்து வந்தாக வேண்டும். தேங்கி நிற்கிற எந்தவோர் உயிரினமும் மிக நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கின்றன.

சர்வைவல் உலகில் யானைகள் அளவிற்குத் துரோகங்களை சந்தித்த உயிரினம் ஒன்று இல்லை. உலகில் யானையை வைத்து சர்வைவ் செய்த மன்னர்கள் இருக்கிறார்கள், மனிதர்கள் இருக்கிறார்கள், நாடுகள் இருக்கின்றன. ஆனால் மனிதர்களை வைத்து சர்வைவல் ஆகும் தன்மை யானைகளிடம் இல்லை. மனிதனும் அதற்குத் தயாராக இல்லை. யானை இனம் சந்தித்த மிகப் பெரிய துரோகம் இது.

யானை குறித்து எவ்வளவோ பேசியாகிவிட்டது, பல நாள்களாகப் பேசு பொருளாக இருந்திருக்கிறது. சின்னதம்பி யானை குறித்த விஷயத்தில் யானைக்குத் தெரியாத விஷயங்களைக் கூட சமூகம் பேசி அலசி ஆராய்ந்து பிறகு அப்படியே விட்டுவிட்டது. உண்மையில் பசிதான் யானையின் முதல் எதிரி. யானை ஒரு நாளைக்கு 100-லிருந்து 200 கிலோ அளவிற்கு உணவு உட்கொள்ளவேண்டும். இன்றைய காலகட்டத்தில் 6,000 கிலோ எடைகொண்ட ஓர் உயிரினம் ஒரு நாளைக்கு 200 கிலோ உணவைத் தேடி அலைந்தாக வேண்டும். யானையின் உருவ அமைப்பும் அதன் மெக்கானிசமும் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. அவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. இவை ஊருக்குள் வருவதற்கும் பயிர்களை நாசம் செய்வதற்கும் அந்த 200 கிலோ உணவே காரணமாக இருக்கிறது. மதுக்கரை மகாராஜா இறந்து போனதற்கும் சின்னத்தம்பி இப்போது கரோலில் கம்பி எண்ணுவதற்கும் இதுவே ஆரம்ப காரணமாக இருக்கிறது.

கும்கி யானை

ஒரு யானை வருடத்திற்கு 700 சதுர கிலோ மீட்டர்கள் வரை உணவிற்காகப் பயணித்தாக வேண்டும். அதனுடைய மூளையில் மென்டல் மேப் என்று சொல்லக் கூடிய வழித்தடம் வாழையடி வாழையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதற்கு வலசைப் பாதை என்று பெயர். சர்வைவலில் இவற்றுக்கு முதல் சறுக்கலே இந்த வலசைப் பாதைதான். சென்ற வருடம் இருந்த வலசைப் பாதை இந்த வருடம் அடைக்கப்பட்டிருக்கும். முள்வேலியாகவோ, மின்சாரவேலியாகவோ மாறியிருக்கும். அல்லது தார்சாலை ஆகியிருக்கும். அந்தப் பாதையைக் கடந்தால்தான் அடுத்த 500 சதுரகிலோ மீட்டர்கள் அவற்றால் பயணிக்க முடியும். பாதியில் பாதை அடைக்கப்படுவதால் அவை மனதளவிலும் செயல்திறன் அளவிலும் குழம்பிவிடுகின்றன. இந்த இடத்தில் குழம்புகிற எல்லா யானைகளும் திசைமாறி ஊருக்குள் வந்துவிடுகின்றன. அப்படி வழிமாறி வந்து மனிதர்களிடம் சிக்கி கொள்கிற ஒவ்வொரு யானையுமே சின்னதம்பிதான்.

யானையின் சர்வைவலில் பலமும் பலவீனமும் அதன் தந்தம்தான். மற்ற உயிரினங்கள் இன்னோர் உயிரினத்தின் பசியிடமிருந்து தப்பிப்பிழைத்து ஓடியாக வேண்டும், ஆனால் இதுவோ மனிதர்களின் ஆசையிலிருந்து தப்பிப்பிழைத்து ஓடியாக வேண்டும். உயிரினங்களின் முதல் தற்காப்பே ஒளிந்துகொள்வதுதான். அதுவும் யானை விஷயத்தில் சாத்தியமில்லை. எளிதில் எங்கும் ஒளிந்துகொள்ள இயலாது. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருப்பவை சிறிய தந்தங்கள் உள்ளவையாகவோ அல்லது தந்தங்கள் இல்லாதவையாகவோ உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகி தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. தந்தமில்லாத யானையை அடுத்தடுத்த தலைமுறை பார்க்கவே முடியாது என்பது யானைகளுக்கு நிகழ்த்தப்பட்ட இன்னொரு துரோகம்.

Elephant

தரையில் வாழும் பாலூட்டிகளில் யானையின் மூளையே மிகவும் பெரியது. இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. இதனால்தான் யானைகள் நினைவாற்றல் மிக்கவையாக இருக்கின்றன. யானைகளின் மூளையும் அதன் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும், கற்றுக் கொள்ளவும் கூடியவை. உயிரினங்களிடம் இருக்கிற ஒரு பலவீனத்தைக் கண்டுபிடித்துவிட்டாலே மனிதன் அதை அடிமையாக மாற்றிவிடுவான். முக்கியமான இன்னொரு விஷயம் மனித மூளையின் எடை 1.5 கிலோ மட்டும்தான். யானைக்குப் பல பலவீனங்கள் இருக்கின்றன. சொல்வதைக் கேட்பதால் யானையை எளிதாகப் பிச்சை எடுக்க வைக்கலாம், கும்கியாக மாற்றலாம், சர்க்கஸில் பயன்படுத்தலாம், மரம் தூக்கப் பயன்படுத்தலாம். உலகத்திலேயே தான் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்பதே தெரியாமல் கடைசி வரை உயிரைக் கொடுத்து உழைத்து இறந்து போகும் உயிரினங்களில் யானையும் ஒன்று.

இவை மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விடக் கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும்.

Indian Eephant - இந்தப் பசிதான் யானையின் முதல் எதிரி

பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த அவற்றால் மனித இனத்தைச் சார்ந்து வாழமுடியவில்லை என்பதுதான் சர்வைவல் கதைகளில் இருக்கிற மிகப்பெரிய முரண். கண்ணுக்கு முன் நடப்பது துரோகம் எனத் தெரியாமலே ரயிலில் அடிப்பட்டுச் சாகிறது, மின்வேலியில் அடிப்பட்டுச் சாகிறது. நம்பி ஏமாந்து போவதில் யானைக்கு நிகர் வேறு உயிரினம் இல்லை. தன்னைப் போலத்தான் எல்லா உயிரினங்களும் என நினைத்து விடுகிறது.

உலகம் உருவான பொழுது பெரிய பெரிய காடுகள் இருந்தன. அந்தக் காடுகளுக்கென்று தனித்தனியான உயிரினங்கள் வாழ்ந்தன. அப்படிப் வாழ்ந்த ஒன்றுதான் யானை. இன்று இப்படியான ஒரு நிலைக்கு யானைகள் தள்ளப்படும் எனத் தெரிந்திருந்தால் கடவுள் யானைகளை அல்ல, மனிதனையே படைத்திருக்கமாட்டார். ஒவ்வொரு நாளும் பெரும்பசியோடு நடந்த போராட்டத்தில் நூற்றாண்டு காலமாக அதற்குத்தான் வெற்றி. ஆனால், தற்போது அவற்றை வணிகமாக்கிய மனிதனின் பணப்பசிக்கு முன்னர் நிற்கமுடியாமல் சரிந்துவிழுந்து கொண்டிருக்கிறது.