இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் கதையை முடித்தது எப்படி?-ரகசியம் சொல்லும் கூகுளின் முன்னாள் பொறியாளர் | Former Google engineer tells how thy plan to kill Microsoft’s Internet Explorer

வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (06/05/2019)

கடைசி தொடர்பு:18:48 (06/05/2019)

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் கதையை முடித்தது எப்படி?-ரகசியம் சொல்லும் கூகுளின் முன்னாள் பொறியாளர்

இன்டர்நெட்

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இன்டர்நெட் என்றாலே பலருக்கு கம்ப்யூட்டரில் இருக்கும் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர்தான் ஞாபகத்துக்கு வரும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது இணையம் என்ற விஷயம் அறிமுகமாகிப் பல வருடங்கள் வரைக்கும் பிரவுசர்களின் ஜாம்பவானாக இருந்து வந்தது.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் குரோம் என்ற பிரவுசரை அறிமுகப்படுத்திய பின்னர் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இன்றைக்கு உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது குரோம். அதே வேளையில் தற்போது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் பயன்பாடு என்பது பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களை தன் பக்கம் இழுக்கக் கூகுள் எப்படி வலை விரித்தது என்ற ரகசியத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார் கூகுளின் முன்னாள் பணியாளர் ஒருவர். அதைச் செய்து முடிக்கப் பல பொறியாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். அதில் ஒருவரான கிறிஸ் ஸக்காரியாஸ் (Chris Zacharias) என்பவர் அந்த ரகசியத்தை `தி வெர்ஜ்' இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இன்டர்நெட்

அந்தத் திட்டத்தின்படி கடந்த 2009-ம் ஆண்டில் யூடியூபில் மைக்ரோசாஃப்ட் பிரவுசருக்கான ஆதரவை விரைவில் நிறுத்தப் போவதாக ஒரு எச்சரிக்கையை அவர்கள் தோன்ற வைத்திருக்கிறார்கள். ``எங்களுடைய திட்டம் மிகவும் எளிமையானது. அதன்படி வீடியோ ப்ளேயரின் மேல் பக்கத்தில் ஒரு சிறிய எச்சரிக்கையைப் பயனாளர்களுக்குக் காட்ட முடிவு செய்தோம். அது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 6 பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும்" என்று கிறிஸ் ஸக்காரியாஸ் தெரிவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் யூடியூப் தளத்தைப் பார்வையிடுபவர்களில் 18% பேர் Internet Explorer 6 பயன்படுத்தி வந்தனர். 2001-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்தப் பதிப்பு பல வருடங்கள் கழித்தும் பிரபலமானதாகவே இருந்து வந்தது. பின்னர் இதுபோன்ற எச்சரிக்கையின் காரணமாக அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் படிப்படியாக வெளியேற ஆரம்பித்தார்கள், அப்படி வெளியேறியவர்களை பல்வேறு வழிகள் மூலமாக குரோம் பிரவுசர் பக்கமாக வளைத்துப் போட்டது கூகுள்.