8 அணிகளுடன் அக்டோபரில் ஆரம்பமாகிறது X1 ரேஸிங் லீக்! | X1 racing league scheduled to starts in October 2019

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (07/05/2019)

கடைசி தொடர்பு:07:15 (07/05/2019)

8 அணிகளுடன் அக்டோபரில் ஆரம்பமாகிறது X1 ரேஸிங் லீக்!

இந்தியாவின் டாப் கார் ரேஸர்களான அர்மான் இப்ராஹிம் மற்றும் ஆதித்தியா படேல் இருவரும் சேர்ந்து புதிய ரேஸ் தொடரை நடத்தப்போவதாகக் கடந்த ஆண்டே அறிவித்திருந்தார்கள். ஐபிஎல், ஐஎஸ்எல் போல இந்திய நகரங்களை மையப்படுத்திய 2 சீட் கார் ரேஸான Xtreme1 அல்லது X1 ரேஸிங் லீக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாகத் தற்போது அறிவித்துள்ளார்கள். 

X1 ரேஸிங் லீக்

F1 போல டிராக் மற்றும் ஸ்ட்ரீட் சர்க்யூட் இரண்டிலும் நடைபெறவிருக்கும் இந்த ரேஸில், இந்திய நகரங்களின் பெயர்களில் மொத்தம் 8 டீம்கள் போட்டிபோட உள்ளன. ஒவ்வொரு டீமிலும் 2 கார் மற்றும் 4 டிரைவர்கள் இருப்பார்கள். ரேஸ்கள் வார இறுதி நாள்களில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டியும் 45 நிமிடங்கள் நடைபெறும். ஒரு நாளைக்கு மூன்று போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்கள். டிராக் ரேஸ்கள், டெல்லி புத் சர்க்யூட்டிலும், சென்னை MMRT ரேஸ் டிராக்கிலும் நடைபெற உள்ளன. ஸ்ட்ரீட் சர்க்யூட் ரேஸ்கள் எங்கே நடைபெறப்போகின்றன என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

ஆதித்யா படேல்/அர்மான் இப்ராஹிம் 

இந்தப் போட்டி இந்தியாவின் ரேஸிங் அமைப்பான FMSCI-ன் விதிமுறைகளின் கீழ் நடைபெற உள்ளது. ரேஸ்களுக்கான விளம்பர உரிமை, ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு, ஃப்ரான்ச்சைஸ் போன்ற அனைத்தும் FMSCI-ன் கீழ் வரவுள்ளன. X1 ரேஸில் இந்திய ரேஸர்கள் மட்டுமில்லாமல் F1, ஃபார்முலா E, லி மேன்ஸ், இண்டி 500 மற்றும் நாஸ்கார் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற ரேஸர்களும் போட்டிபோட உள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் ஒரு வெளிநாட்டு ஆண் டிரைவர், வெளிநாட்டு பெண் டிரைவர், சர்வதேச அளவில் போட்டிபோடும் இந்திய டிரைவர் மற்றும் இந்திய அளவில் போட்டிபோடும் டிரைவர் என மொத்தம் 4 டிரைவர்கள்.

பெண்களுக்கென தனி கேட்டகரி கிடையாது. ஆண்கள் போட்டியிடும் அதே போட்டிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள். சர்வதேச அளவில் போட்டிபோடும் ரேஸர்களுடன், இந்திய ரேஸர்கள் போட்டிபோடுவதால், இது F1 போன்ற அதிவேக கார் ரேஸில் இந்தியர்கள் நுழைவதற்குப் பயிற்சியாக அமையும். பார்வையாளர்களுக்கும் ரேஸ்கள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்கிறது X1 டீம்.