``4 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிப்பு!” - வெளிநாட்டுப் பயணிகளிடம் வரவேற்பை பெறும் இ-விசா | India's immigration issued 25 lakh e-Visa in 2018

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (07/05/2019)

``4 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிப்பு!” - வெளிநாட்டுப் பயணிகளிடம் வரவேற்பை பெறும் இ-விசா

வெளிநாட்டுப் பயணிகள்

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது போல, வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவை, இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரங்களை, வரலாறு சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒருபுறம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவினம் குறைவு என்பதால், மருத்துவச் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில், இ-விசா திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போது அந்தத் திட்டத்தின் கீழ் 40 நாடுகள் மட்டுமே இணைக்கப்பட்டன. ஆனால் தற்போது மொத்தம் 166 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இ-விசா திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

இ-விசா திட்டத்தின் மூலம் வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 5.29 லட்சமாக இருந்தது. 2016-ம் ஆண்டில் 10.80 லட்சமாக அதிகரித்தது. 2017-ல் 57% அதிகரித்து 16.90 லட்சமாக உயர்ந்தது. 2018-ல் அது 25 லட்சமாக அதிகரித்திருக்கிறது. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 5 மடங்கு அதிகமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 கோடி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை ஈர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் மேலும் பல நாடுகளை இ-விசா திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்றும், அதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு யோசனைகளை சுற்றுலாத் துறை முன்வைத்திருக்கிறது.