'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ராவின் வித்தியாச அலங்காரத்துக்கு என்ன காரணம்? | Reason behind the different costume selection of Priyanka Chopra for Met Gala 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (07/05/2019)

கடைசி தொடர்பு:17:41 (07/05/2019)

'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ராவின் வித்தியாச அலங்காரத்துக்கு என்ன காரணம்?

2017-ம் நடைபெற்ற மெட்காலாவில்தான் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் முதல்முறையாகச் சந்தித்தனர். தங்களின் காதல் பயணம் தொடங்கிய இடத்தில், இன்று கணவன்-மனைவியாகக் கலந்துகொண்ட இந்த ஆண்டு, மிகவும் ஸ்பெஷல் என்று கூறி இருவரும் பூரித்தனர்.

'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ராவின் வித்தியாச அலங்காரத்துக்கு என்ன காரணம்?

விதவிதமான, வித்தியாச ஆடைகளை உடுத்திக்கொண்டு சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் ஹாலிவுட் பிரபலங்களை `க்ளிக்' செய்ய, நூற்றுக்கணக்கான கேமரா கண்கள் அழகிய மாலைப்பொழுதில் காத்துக்கிடந்தன. `மெட் காலா' எனும் இந்தக் கண்கவர் திருவிழா, ஆண்டுதோறும் மே மாதம் முதல் திங்கள்கிழமை அன்று நியூயார்க்கில் உள்ள Metropolitan Museum of Art's Costume Institute-ல் நடைபெறும். நிதி திரட்டும் விழாவான இதில், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வித்தியாச உடை மற்றும் ஒப்பனை செய்து வருவது வழக்கம். இந்த ஆண்டு மே 6-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவில், பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டனர். இதில் பிரியங்கா அணிந்திருந்த உடை மற்றும் ஒப்பனை பலரால் விமர்சிக்கப்பட்டன.

மெட்காலா

ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு தீம்களின் கீழ் உடைகளைத் தேர்வுசெய்து உடுத்திவரும் பிரபலங்களுக்கு இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தீம், Camp: Notes on Fashion. இது, 1964-ம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் Susan Sontag என்பவரால் எழுதப்பட்ட `Notes on Camp' எனும் கட்டுரையைச் சார்ந்தே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதில், `கேம்ப் அல்லது முகாமின் சாரம் இயற்கைக்கு அப்பாற்பட்டது. செயற்கைத்தனமும் மிகைப்படுத்துதலும் இருப்பது' என்று குறிப்பிட்டிருப்பார். அதன்படி பிரியங்கா உடுத்தியிருந்த காஸ்ட்யூம் பலரை வியப்புக்குள்ளாக்கினாலும், நெட்டிசன்களால் ட்ரோல் செய்யவும் தூண்டியது. பிரபல டிசைனர் பிராண்டான `டியோர் (Dior)' வடிவமைப்பில் உருவான உடைகளைத்தான் பிரியங்கா மற்றும் அவரின் கணவர் நிக் ஜோனஸ் தேர்வுசெய்தனர்.

Priyanka Chopra

`கூண்டு' வடிவ `கார்செட்' வண்ண இறகுகளால் நிரப்பப்பட்ட Cape மற்றும் ஸ்கர்ட், ஆங்காங்கே வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட முற்றிலும் வித்தியாசமான ஆடையை உடுத்தியிருந்தார் பிரியங்கா. உடையை மேட்ச் செய்யும்விதமாக இவரின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைதான் மீம் கன்டன்ட்டின் ஹைலைட்ஸ். நன்கு களைந்த சுருள் முடி, அதன்மேல் முள்கள் வடிவ கிரீடம், சில்வர் வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்கள் மற்றும் காலணிகள் என ஜொலித்தார் பிரியங்கா. வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்ட சட்டை, டை, கைகளில் நீண்டிருக்கும் ஸ்கார்ஃப், வெள்ளி ஷூக்கள் அணிந்து பிரியங்காவுக்கு நிகராகவே நிக் ஜோனஸின் காஸ்ட்யூமும் இருந்தது.

Priyanka and Nick

2017-ம் நடைபெற்ற மெட் காலாவில்தான் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் முதல்முறையாகச் சந்தித்தனர். தங்களின் காதல் பயணம் தொடங்கிய இடத்தில், இன்று கணவன்-மனைவியாகக் கலந்துகொண்ட இந்த ஆண்டு, மிகவும் ஸ்பெஷல் என்று கூறி இருவரும் பூரித்தனர்.

Deepika Padukone

பிரபல அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் Zac Posen கைவண்ணத்தில் உருவான பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து `பார்பி' தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்தார் தீபிகா படுகோன். உடுத்திய உடைக்கு மேட்சாக வைர காதணி மற்றும் பிரேஸ்லெட் அணிந்து காமிக்ஸ் கதாபாத்திர தேவதைபோலவே தோற்றமளித்தார்.

MetGala2019

மாறுபட்ட ஆடை தேர்வுகளுக்குப் பேர்போன அமெரிக்கப் பாடகி லேடி காகா (Lady Gaga), பிங்க் மற்றும் கறுப்பு நிறங்களில் பல வித்தியாச உடைகளை உடுத்தி வந்திருந்தார். பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மஞ்சள் நிற கவுனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அமெரிக்க ராப்பர் கார்டி பி (Cardi B), கேட்டி பெர்ரி, கிம் கார்தர்ஷியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பிரமாண்டமான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.


டிரெண்டிங் @ விகடன்