``தமிழர்களைப் புறக்கணிக்கிறார் மோடி" - உழவர் உழைப்பாளர் கட்சி சாடல்! | modi didn't visit gaja cyclone why says ku.sellamuthu

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (08/05/2019)

``தமிழர்களைப் புறக்கணிக்கிறார் மோடி" - உழவர் உழைப்பாளர் கட்சி சாடல்!

ங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் சுமார் 170 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. ஆக்ரோஷமாக வந்த புயல் மரங்கள், சாலையில் இருந்த வாகனங்கள், கட்டடங்களின்  மேற்கூரைகள் ஆகியவற்றைத் தனது வேகத்தில் தூக்கி வாரிக்கொண்டு சென்றது. புயலுடன் மழையும் பெய்தது. கடலோரப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவைத் தாக்கும் மிகப் பெரும் கோடைப் புயல் இது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளைக் கடந்த 6-ம் தேதி ஆய்வு செய்தார். அதற்கான ஆதரவுக் குரல்கள் எழுந்தாலும், தமிழகத்தில் இருந்து மோடிக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழாமல் இல்லை. 

மோடி

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, ``பிரதமர் மோடி மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்கிறார். அவரது செயல் ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும்படி இருக்கிறது. ஒடிசா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, 9 மணி நேரத்தில் ஓடிச்சென்று பார்வையிடுகிறார். அதைத் தவறு என்று சொல்லவில்லை. ஒதுக்கப்பட்ட பணத்துக்கு மேல் 1,000 கோடியை அப்போதே அறிவிக்கிறார். அதேபோல கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட வந்திருக்க வேண்டும். டெல்டா மக்கள் வீடுகளை இழந்து, பொருள்களை இழந்து, விவசாயத்தை இழந்து தவித்தனர். அவர்களுக்கான நிதி உதவிகள்கூட இன்று வரை சரியாக கிடைக்கவில்லை. தமிழகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறார், மோடி. இதற்கெல்லாம் நிச்சயம் அவர் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்." என்றார்.