பிரேக் கேலிப்பர் போல்ட்டில் கோளாறு - ரீகால் செய்யப்படும் 7000 புல்லட் பைக்குகள்! | Royal enfield recalls 7000 bullet over brake fault

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (09/05/2019)

கடைசி தொடர்பு:13:30 (09/05/2019)

பிரேக் கேலிப்பர் போல்ட்டில் கோளாறு - ரீகால் செய்யப்படும் 7000 புல்லட் பைக்குகள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 7000 புல்லட் பைக்குகளை ரீ-கால் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 20, 2019 முதல் ஏப்ரல் 30,2019 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புல்லட் 350, புல்லட்  350 ES மற்றும் புல்லட் 500 பைக்குகளின் பிரேக் கேலிப்பர் போல்ட்டில் கோளாறு இருப்பதால், அந்த பைக்குகளை மட்டும் ரீகால் செய்வதாக அறிவித்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

புல்லட்

இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரேக் கேலிப்பர் போல்ட்டில் வைக்கப்படும் டார்க்கின் அளவு, எங்களின் தர நிர்ணய அளவுகளின்படி இல்லை. அந்தப் பாகத்தின் முக்கியத்துவத்தை கருத்தில்கொள்ளும்போது, அதில் எவ்வித பின்னடைவும் இருக்கக் கூடாது'' எனக் கூறியுள்ளது. இதன் வெளிப்பாடாக, பாதிக்கப்பட்ட 7000 பைக்குகளின் உரிமையாளர்களையும் இந்நிறுவனம் நேரடியாக அழைத்து, பிரேக் கேலிப்பர் போல்ட்டை செக் செய்து, தேவைப்பட்டால் இலவசமாக மாற்றித் தரப்படும் எனக் கூறியுள்ளது. 

புல்லட்  350 மற்றும் 350 ES பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 346 சிசி கார்புரேட்டட் இன்ஜின், 19.8bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது; இதுவே புல்லட் 500 பைக்கிலிருக்கும் 499சிசி ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இன்ஜின், 27.2bhp பவர் மற்றும் 4.13kgm டார்க்கையும் தருகிறது. இந்த இரண்டு இன்ஜின்களுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே 1,21,660 ரூபாய் (350 ஸ்டாண்டர்டு), 1,35,415 ரூபாய் (350ES), 1,88,141 ரூபாய் (புல்லட்) ஆகும். லேட்டஸ்ட் விதிகளுக்கு ஏற்ப, சமீபத்தில்தான் இந்த பைக்கில் ஏபிஎஸ் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2020-ல் இருந்து BS-VI விதிகள் அமலுக்கு வரவிருப்பதால்,  அதற்கேற்ப பைக்குகளை மாற்றியமைப்பதில் தற்போது அதிக கவனம்செலுத்திவருகிறது ராயல் என்ஃபீல்டு. .