26.5bhp பவர், ஆயில் கூல்டு இன்ஜின்... விற்பனைக்கு வரப்போகிறது 250சிசி ஜிக்ஸர்! | what to expect on upcoming Gixxer 250

வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (09/05/2019)

கடைசி தொடர்பு:10:21 (09/05/2019)

26.5bhp பவர், ஆயில் கூல்டு இன்ஜின்... விற்பனைக்கு வரப்போகிறது 250சிசி ஜிக்ஸர்!

GSX-250R பைக்கை ஜிக்ஸர் 250 என்ற பெயரில் சுஸூகி வெளியிடப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன

இந்தியாவில் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட் மற்றும் 155சிசி பைக் செக்மென்ட்டில் அளவான வாகனங்களோடு (ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஆக்ஸஸ், பர்க்மேன் ஸ்ட்ரீட், இன்ட்ரூடர்), டூ-வீலர் சந்தையில் தனக்கென ஓர் இடத்தைக்கொண்டுள்ளது சுஸூகி. 2014-ம் ஆண்டில் நேக்கட் பைக்கான ஜிக்ஸரையும், 2015-ம் ஆண்டில் ஃபுல் ஃபேரிங்கொண்ட ஜிக்ஸர் SF பைக்கையும், இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவை பைக் பிரியர்களிடையில் விலை, ஓட்டுதல் தரம், ஸ்டைல் ஆகியவற்றில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து புதிய கலர் ஆப்ஷன்/கிராஃபிக்ஸ், சிங்கிள் சேனல் ABS, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என இந்த பைக்குகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது சுஸூகி.

ஜிக்ஸர் 250 டீஸர்

கடந்த 2016-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற CIMA மோட்டார் சைக்கிள் எக்ஸ்போவில் GSX-250R எனும் 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது. இந்தியாவுக்கு வருமா என எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக்குறித்து எந்தத் தகவலும் வெளியிடாமல் இருந்தது சுஸூகி. கடந்த ஆண்டு, அப்பாச்சி RTR 160 4V, யமஹா FZS-Fi V3.0, பஜாஜ் பல்ஸர் 160NS Twin Disc, ஹோண்டா CB ஹார்னெட் 160 ABS என 150-160சிசி பைக் செக்மென்ட் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில், புதிய அல்லது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜிக்ஸர்குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 

GSX250R

ஹோண்டா CBR 250R பைக்கின் மறுஅறிமுகம், யமஹா களமிறக்கிய FZ-25 மற்றும் ஃபேஸர் 25, ஹீரோவின் எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் வரிசை பைக்குகள், கேடிஎம்மின் டியூக் 250 என 250சிசி பைக் செக்மென்ட் மீண்டெழுந்திருக்கும் வேளையில், சுஸூகியிடமிருந்து ஸ்வீட் சர்ப்ரைஸ் வந்துள்ளது. GSX-250R பைக்கை ஜிக்ஸர் 250 என்ற பெயரில் சுஸூகி வெளியிடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வரும் மே 20, 2019 அன்று இந்த பைக் விற்பனைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் டீஸர் படத்தை வெளியிட்டுள்ளது சுஸூகி. இது பைக் பிரியர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் விற்பனையாகும் GSX205R மாடலுடன் ஒப்பிடும்போது, இந்திய மாடலில் சில வித்தியாசங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது, சீனாவில் விற்பனை செய்யப்படும் GSX-250R பைக்கில் லிக்விட் கூலிங் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான பேரலல் ட்வின் சிலிண்டர் 250சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி இருக்கிறது. Kayaba சஸ்பென்ஷன், ரேடியல் டயர்கள், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், Bosch ABS, LED DRL & டெயில் லைட், டிஜிட்டல் மீட்டர், ஸ்ப்ளிட் சீட் மற்றும் ஹேண்டில்பார் உண்டு.

இந்திய மாடலில் டவின் சிலிண்டருக்குப் பதிலாக சிங்கள் சிலிண்டர் - 4 வால்வு - ஆயில் கூல்டு Fi இன்ஜின் வரும் என்றும் இது 26.5bhp சக்தியை வெளிப்படுத்தும் என்றும் தகவல் வந்துள்ளன. டூயல் போர்டு எக்ஸாஸ்ட், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக், டூயல் சேனல் ABS என சிறப்பம்சங்களில் நிறைய மாற்றங்கள் இருக்கும். 1.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளிவர வாய்ப்புள்ளது. இதே செக்மென்ட்டில் இருக்கும் மற்ற பைக்குகளுக்கு விலையிலும் பர்ஃபாமன்ஸிலும் கடும் போட்டியாளராக GSX-250R இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.


டிரெண்டிங் @ விகடன்