`ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்; 3 மணி நேர சிகிச்சை!' - ஸ்கின் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிங்கத்துக்கு உதவிய மருத்துவமனை | A Lion With Skin Cancer Has Received Radiation Therapy In Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (09/05/2019)

`ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்; 3 மணி நேர சிகிச்சை!' - ஸ்கின் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிங்கத்துக்கு உதவிய மருத்துவமனை

சிங்கத்தை வைத்து ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தால், அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அச்சப்படுவார்கள். அதனால், அந்த மருத்துவமனை நிர்வாகம் வித்தியாசமான முடிவு எடுத்தது. 

தென்னாப்பிரிக்காவில் இருக்கிறது `லாரி பார்க் ஜூ' (Lory Park Zoo) என்கிற விலங்குகள் பூங்கா. இங்கு 16 வயதான கயோஸ் என்ற ஆண் சிங்கத்துக்கு மூக்குப் பகுதியில் `தோல் புற்றுநோய்' வந்திருக்கிறது. இதையடுத்து, அந்தப் பூங்காவின் உரிமையாளர் காரா ஹெயான்ஸ் சிங்கத்துக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அந்தப் பகுதியில் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென தனியாக மருத்துவமனை எதுவும் இல்லாததால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

சிங்கத்துக்கு புற்றுநோய் சிகிச்சை

(Photo Credit: Kara Heynis)

ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. சிங்கத்தை வைத்து ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தால், அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அச்சப்படுவார்கள் என்பதுதான் அது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதே பிரச்னை என்றால், சிகிச்சைக்காக தங்கும் அறையையும் யாரும் பகிர்ந்துகொள்வார்களா என்பது அடுத்த சிக்கல். இதனால் மருத்துவமனை நிர்வாகம் ஒரு முடிவு செய்தது. 

சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சிங்கம்

(Photo Credit: Kara Heynis)

சிங்கத்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குச் சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர். மேலும், சிகிச்சை அளித்து அதேநாளில் மீண்டும் பூங்காவுக்கே கொண்டு செல்லவும் முடிவு செய்தனர். அதோடு, சிங்கத்துக்குச் சிகிச்சை அளிக்கும் தகவல் அங்குள்ள நோயாளிகளுக்குத் தெரியாமல் இருக்க மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அவசர சிகிச்சைப் பிரிவு அறைக்குக் கொண்டு சென்றனர். இப்படி ஒரு சிங்கத்து சிகிச்சையளிக்க ஒட்டுமொத்த மருத்துவமனையும் உதவியது. 

காலை 10.30 மணிக்குப் பூங்காவிலிருந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சிங்கம், சிகிச்சை முடிந்து 1.15 மணிக்கெல்லாம் மீண்டும் பூங்கா திரும்பிவிட்டது.  

சிங்கத்துக்கு புற்றுநோய் சிகிச்சை

(Photo Credit: Kara Heynis)

ஐந்து பேர் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு, சிங்கத்தின் உடல் நிலை தேறி வருகிறது. முதல் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட சிகிச்சை இன்னும் சில நாள்களில் அளிக்க உள்ளனர்.

இது குறித்து சிங்கத்தின் காப்பாளர் காரா ஹெயான்ஸ் பேசுகையில், ``புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு மிகப்பெரியதுதான். ஆனால், அந்தச் சிங்கமும் என்னுடைய குழந்தை போலத்தான். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்" என்று கூறி அங்கிருந்தவர்களைக் கண் கலங்க வைத்திருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க