ஏபிஎஸ் வேரியன்ட்டுடன் வருகிறது மோஜோ UT300 - கடைசி முயற்சி கைகொடுக்குமா! | Mahindra Mojo UT300 ABS variant to be launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (09/05/2019)

கடைசி தொடர்பு:22:15 (09/05/2019)

ஏபிஎஸ் வேரியன்ட்டுடன் வருகிறது மோஜோ UT300 - கடைசி முயற்சி கைகொடுக்குமா!

இந்தியாவில் யுட்டிலிட்டி மற்றும் கமர்ஷியல் வாகனப் பிரிவில் அசைக்க முடியாத தூணாக இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். இருப்பினும் போட்டி மிகுந்த டூ-வீலர் செக்மென்ட்டில் இந்நிறுவனத்தால் வலுவாகக் கால் ஊன்ற முடியவில்லை. டியூரோ, ரோடியோ, கஸ்ட்டோ, சென்ட்யூரோ, பென்ட்டீரோ எனப் பல பட்ஜட் கிளாஸ் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்தும், பெரிய பலன் இல்லை. மோஜோ, மஹிந்திராவுக்கு கொஞ்சம் பெயர் வாங்கிக்கொடுத்த பைக் எனச் சொல்லாம்.

5 ஆண்டுக்கால டெஸ்ட்டிங்குக்குப் பிறகு, 2015-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது மோஜோ. XT300 (USD ஃபோர்க், டூயல் எக்ஸாஸ்ட் பைப், FI இன்ஜின், பைரலி டியூப்லெஸ் டயர்கள்) மற்றும் UT300 (டெலிஸ்கோபிக் ஃபோர்க், சிங்கிள் எக்ஸாஸ்ட் பைப், கார்புரேட்டட் இன்ஜின், MRF டியூப்லெஸ் டயர்கள்) என 2 வேரியன்ட்களில் தற்போது விற்பனையில் உள்ளது. 

மஹிந்திரா மோஜோ

தற்போது மோஜோவின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது மஹிந்திரா. அதன்படி UT300 பைக்கில் ABS வேரியன்ட்டை, இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்பீடோமீட்டரில் ஏபிஎஸ் இண்டிகேட்டர், முன்பக்க டிஸ்க்கில் ஏபிஎஸ் வசதி மட்டுமில்லை, கூடவே UT300 வேரியன்ட்டில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், LED DRL போன்ற வசதிகளும் வழங்கப்படும் எனத் தெரிந்துள்ளது. XT300 வேரியன்ட்டை விடக் குறைவான விலையில் கிடைக்கும் UT வேரியன்ட் பழைய BS-4 இன்ஜினுடன் விற்பனைக்கு வரும். இந்த இன்ஜின் 22.8bhp பவர் மற்றும் 2.52kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. மோஜோ UT300 வேரியன்ட்டின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 1.58 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 நவம்பர் மாதத்தில் வெறும் 5 பைக்குகளே விற்பனையானதாகத் தகவல் வெளியான நிலையில், தனது கம்யூட்டர் பைக்குகளுடன் ஒப்பிடும்போது மோஜோவில் விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் தருவதில் மஹிந்திரா சறுக்கியதே மோஜோவின் தோல்விக்கான காரணங்களில் பிரதானமானது. Paytm கேஷ்பேக் மற்றும் 75,000 ரூபாய் வரை தள்ளுபடி எனப் பல சலுகைகள் தந்தும், இந்த டூரர் பைக்கின் விற்பனை அதிகரிக்கவில்லை. ஜூன் மாதத்தில் வரப்போகும் இந்தப் புதிய ஏபிஎஸ் வேரியன்ட்டாவது, இந்த நிறுவனத்துக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.