தர்பூசணி, முட்டை, தக்காளி... இவற்றில் எதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது?! | Don't store these goods in your fridge

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (10/05/2019)

கடைசி தொடர்பு:10:23 (10/05/2019)

தர்பூசணி, முட்டை, தக்காளி... இவற்றில் எதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது?!

கடந்த 2016-ம் ஆண்டு தக்காளிகளை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியது. தக்காளியைக் கடையில் வாங்குவதிலிருந்து அதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது வரை, முழுமையாக அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

தர்பூசணி, முட்டை, தக்காளி... இவற்றில் எதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது?!

ஃப்ரிட்ஜிற்கு உள்ளே சென்று அமர்ந்து கொள்ளும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க நீர்ச்சத்துள்ள பல பழங்களை உண்போம். இன்னும் சிலர் நுங்கு, தர்பூசணி, குளிர்பானங்கள் எனப் பலவற்றையும் வாங்கிவந்து ஃப்ரிட்ஜிற்குள் அடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அப்படி வைப்போரில் சிலருக்கு பொருள்களை எவ்வளவு நாள் வைக்கவேண்டும் என்று தெரிந்திருக்கும். இன்னும் சிலருக்கோ, முட்டை, தக்காளி உள்ளிட்ட பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகாது என்ற நம்பிக்கையுடன் பல நாள்கள் வைக்கும் பழக்கமும் உண்டு. 

முட்டை -  தக்காளி

ஃப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்குத்தான் தீங்கு விளையும். எப்படி சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தராதோ, அதேபோல நாம் வீட்டு உணவுத்தேவைக்கு வாங்கும் பொருள்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. இதில் பூண்டு, பிரட், வெங்காயம், தேன் எனப் பல பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது எனத் தெரிந்திருக்கும். ஆனால் நாம் வாங்கும் முட்டை, தர்பூசணி, தக்காளியையும்கூட ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.  

2015-ம் ஆண்டு ஐரோப்பிய விஞ்ஞானிகள் முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று கண்டறிந்து ஓர் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருந்தனர். மற்றது ஓ.கே, முட்டை ஏன் வைக்கக் கூடாது என்று உங்களுக்குத் தோன்றலாம். அறை வெப்பநிலையில் வைக்கும் முட்டைகளை விட, ஃப்ரிட்ஜில் வைத்துப் பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய் விடும். அதிலும் குளிர்ச்சியான இடங்களில் வைத்துப் பராமரிக்கும்போது பால் போல திரிந்து விடும்.  

ஐரோப்பிய முட்டை மார்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, உடனே அறையின் வெப்பநிலைக்குக் கொண்டு வரும்போது, ஃப்ரிட்ஜினுள் உள்ள வாயுக்கள் முட்டையுடன் வினை புரியும். அந்த வாயுக்கள் முட்டையின் மேல் ஈரமாகப் படரும். அதிகமாகப் படர்ந்த ஈரமானது, முட்டை ஓட்டின் சிறு துளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்கிறது. 

முட்டை

இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து விடுவது அல்லது முட்டையை அறை வெப்பநிலையிலேயே வைத்து பராமரிப்பது நல்லது. நாம் வாங்கும் முட்டைகளில் கெட்டுப்போன முட்டைகள் இருந்தால் (தெரிந்தோ, தெரியாமலோ) அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைக்கும்போது, கெட்டுப்போன முட்டையில் இருக்கும் சால்மோனெல்லா எனும் பாக்டீரியா மற்ற முட்டைகளுக்கும் பரவி மற்ற முட்டைகளையும் கெட்டுப்போக வைத்துவிடும். இதைத் தவிர்க்க அறை வெப்பநிலையில் முட்டைகளை வைப்பதே நல்லது. கெட்டுப்போன முட்டையைக் கண்டறிய, பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு, அதில் முட்டைகளைப் போட வேண்டும். முட்டைகள் மிதக்க ஆரம்பித்தால், அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.  

அதேபோல தர்பூசணியை பலரும் வெட்டி ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. பாதி வெட்டிவிட்டு மீத பழத்தை கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால், அப்படி ஃப்ரிட்ஜில் வைத்தால், அப்படியே சுருங்கி, அதில் உள்ள சத்துகள் போய்விடும். எனவே முடிந்த வரை வாங்கிய தர்பூசணியைப் பாதுகாத்து வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, அவ்வப்போதே காலி செய்துவிடுவது நல்லது.

தர்பூசணி

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள்கள் பாழாகாமல் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். மாறாக அதன் சுவை முற்றிலும் மாறி, ருசியற்றதாகி விடும். எனவே எப்போதும் தக்காளியை வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பாதுகாத்து பயன்படுத்துவது நல்லது.

கடந்த 2016-ம் ஆண்டு தக்காளிகளை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியது. தக்காளியைக் கடையில் வாங்குவதிலிருந்து அதை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது வரை தொடர்ச்சியாக அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட தக்காளியைக் குளிரூட்டும்போது தக்காளியில் உள்ள என்சைம்கள் செயலிழக்கின்றன. இந்த என்சைம்கள்தான் நொதித்தலுக்கு உதவும். ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளியில் இருந்த என்சைம்கள் அப்படியே இருந்திருக்கிறது. இந்த ஒப்பீடுகளின் முடிவில் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தக்காளி

அதில், `தக்காளி அறுவடைக்கு முன்னர் வரை அதன் மரபணுக்களில் எந்தவிதமான வித்தியாசமும் தெரிவதில்லை. அறுவடைக்குப் பின்னர் குளிரில் வைக்கப்படுவதால், அதன் சுவை மட்டுமல்லாமல் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகிவிடுகிறது. இதனால் தக்காளி கனிவது தாமதமாகும். இந்தத் தாமதப்படும் நேரத்தில்தான் என்சைம்கள் தங்களின் வேதித் தன்மையை இழக்கின்றன. குளிரின் தன்மை குறைவாக வைக்கும்போது தக்காளி தோல் கெட்டியாவது தடுக்கப்படும். ஆனால் பழத்தின் சுவை குறைவது மட்டும் நிச்சயம். தக்காளியின் சுவையை அதிலுள்ள அமிலம், சர்க்கரை உள்ளிட்ட 15 முதல் 20 விதமான மூலக்கூறுகள்தான் தீர்மானிக்கின்றன. குளிரில் தக்காளிகளை சேமிப்பதால் இனிப்பு மற்றும் அமிலத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. ஆனால், தக்காளிப் பழத்தின் வாசனை இல்லாமல் போய்விடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுதவிர ஊறுகாய், உருளைக்கிழங்கு எனப் பல பொருள்களை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 


டிரெண்டிங் @ விகடன்