Published:Updated:

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan
தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

மாலை மசங்கவும், தூரத்தில் மதுரை முக்தீஸ்வரர் கோயில் பக்கமிருந்து கைவண்டி ஒன்று வருகிறது. தெப்பக்குளத்தின் வடக்குக்கரையில் மொய்த்துக்கிடக்கும் பானிபூரி, தந்தூரி துரிதங்களுக்கு இடையே தனது வண்டியை நிறுத்திப் பதறாமல் வியாபாரம் செய்கிறார், புட்டுக்கடை பாஸ்கர். ஐந்தாறு புட்டு வகைகள், பாசிப்பயறு, பருத்திப்பால்.. அவ்வளவுதான் கடைச்சரக்கு!

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

அரிசிப்புட்டு, கேழ்வரகுப்புட்டு, கம்புப்புட்டு, சோளப்புட்டு, கோதுமைப்புட்டு, திணைப்புட்டு, நெய்ப்புட்டு, எண்ணெய்ப்புட்டு ஒவ்வொன்றும் 30 ரூபாய். அத்தனையையும் கலந்து சிறுதானியப்புட்டு தருகிறார். 35 ரூபாய். நல்ல பசியோடு செல்பவர்கள் எந்த வகைப் புட்டையும் முழுதாய் ஒரு கை பார்க்கலாம். நல்லெண்ணெய் வாசம் நாசியைத் துளைத்து கரையெங்கும் கலந்து வீசுகின்றது. சூடான புட்டு.. அதை நனைத்தபடியே ஊறும் நல்லெண்ணெய்.. எச்சில் சொட்ட வைக்கும் நாட்டுச் சர்க்கரை.. பதமாய் பற்களையும் நாவையும் கடந்துசென்று விருந்துதரும் தேங்காய்ப்பூ.. இவையாவும்  இடப்பட்ட வாழை இலையின் பசுமை ருசி.. எல்லாம் சேர்ந்து குளக்கரையின் இதமான காற்றும், இதயத்துக்கு இன்பச் சுவை. ஒவ்வொரு சேர்மானமும் உடலின் பாகங்களுக்கு வலுசேர்ப்பவை. பாஸ்கர், புட்டுகளை பார்சல் கட்டித் தருகின்ற அழகே தனி.

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

இவரின் மனைவிதான் இந்தப் புட்டுக்கடைக்கு வித்திட்டவர். வெளியிடங்களுக்குச் சமையல் உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்த இந்தத் தம்பதி சுயமாகத் தொழில் செய்யலாம் என யோசித்தபோது, மனைவி சொன்ன யோசனையே, இந்தப் புட்டுக்கடை. ``எண்ணெயில பொரிக்கிற ஐட்டங்கள் எதையுமே தொடக்கூடாதுன்னு முதல்லயே தீர்மானிச்சுட்டோம். காசுக் கொடுத்து நம்மகிட்ட சாப்பிட வர்றாங்க. அவங்களோட ஆரோக்கியத்துக்கு நாமதானே பொறுப்பு. ஃபாஸ்ட்புட் எல்லாமே இப்போதைக்குப் பசியாத்தும். ஆனா, வயதாக ஆக நோய்க்கு முதல் காரணமா அதுதான் வந்து நிக்கும். நாங்க இந்தக் கடையில விற்கிற எல்லாமே நமக்கான உணவுகள்தான். மண்ணுக்கே உரிய மகத்தானவை” என்கிறார் பாஸ்கர். இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முடித்திருக்கிறார்.

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

புட்டு மட்டுமல்ல. பருத்திப்பாலும் ஆசம் ரகம்! `மழைவேண்டி யாகம் வளர்த்த பிரியாணி அண்டாவின்’ மினியேச்சர். அதில், நீர் நிரப்பிக் கொதிக்க விட்டு, அதில் பருத்திப்பால் சட்டியை வைக்கிறார். வெந்நீர் சூட்டில் பருத்திப்பால் கதகதக்கிறது. கிளாஸ் பால், பத்து ரூபாய். ஏலக்காயும் தேங்காய்த் துருவலும் மிதந்து நீந்தி நாக்கில் வழிந்து செல்கிற சுவை, சில மணிநேரங்களுக்கு மூளையில் நிலைத்திருக்கும். பருத்திப்பால் அருந்திய ஆரோக்கியம் சில ஆண்டு காலத்துக்கு உடம்புக்குள் நிலைத்திருக்கும். ``சாப்பிடுறவங்களோட உடல் ஆரோக்கியத்துக்கு எங்களால உத்திரவாதம் தர முடியும். ஃபாஸ்ட்புட் பக்கம் நிக்கிற நிறைய பேர் இந்தப் பக்கம் வரலைன்னாலும்கூட நல்ல உணவை விக்கிறோம். ஆரோக்கியம் தர்றோம்ங்கிற நிம்மதி போதும், எங்களுக்கு” என்கிறார் பாஸ்கரின் மனைவி. இவர் ப்ளஸ் 2 வரை படித்திருக்கிறார். இருவருக்கும் மூன்று வயது வித்தியாசம்.

தெப்பக்குளம் முழுவதும் வீசும் நவதானிய வாசம் - மதுரையில் மிஸ் பண்ணக்கூடாத புட்டுக்கடை #MyVikatan

இரண்டு ஆண்டுகளுக்குமுன் கடை நடத்தத் தொடங்கியவர்கள், சமீபமாகத்தான் மாலைநேரக் கடையாக மாற்றியுள்ளனர். அதுவரை காலை, மாலை இருவேளைகளிலும் கடை இருந்து வந்துள்ளது. குளக்கரையில் வாக்கிங், ரன்னிங் உள்ளிட்ட உடற்பயிற்சி செய்பவர்களுக்காக காலைக் கடை நடத்தி வந்திருக்கின்றனர். ஆள்பற்றாக்குறை, இடுபொருள் தயாரிப்புக்குப் போதிய நேரம் இல்லாதது போன்ற காரணங்களால் இரண்டுவேளைக் கடையை மாலைநேரக் கடையாகச் சுருக்கிக்கொண்டார். 

நடுத்தர, முதிய வயதினரே இந்தக் கடையின் வாடிக்கையாளர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்பு முற்றிலும் சென்றடையவில்லையோ என்ற வருத்தம் எனக்குள் எழுந்தது. தம்பதி மனத்திலும் அந்த வருத்தம் இருந்ததை  உரையாடல் மூலம் உணரமுடிந்தது.  

`கடையை விரிவுசெய்தால் இன்னும் என்னென்ன ஐட்டங்கள் சேர்ப்பீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ``கருப்பட்டிப் பணியாரம்” என்று ரேபிட் ஃபயர் போல விடை வந்தது. இவர்களுக்குக் குட்டிச்செல்லமும் இருக்கிறாள். எல்.கே.ஜியாம். `என்ன படிக்க வைக்க ஆசை?’ எனக் கேட்டதற்கு, ``அவளோட முடிவுதான். வளர்ந்ததும் அவ இஷ்டப்படுற படிப்புக்கும், வாழ்க்கைக்கும் நாங்க உறுதுணையாய் இருப்போம்” என்றனர், இருவரும். நல்ல பெற்றோராகவும் மின்னி ஒளிருகின்றனர், இந்தப் புட்டுக்கடை தம்பதி.

தெப்பக்குளம் போனால் ஒரு எட்டு.. அட, தெப்பக்குளத்துக்கே ஒரு எட்டு போய்வாருங்களேன், புட்டுகள் சுடச்சுடக் காத்திருக்கும். பாஸ்கர் புட்டுக்கடையை விஜயம் செய்து விருந்துண்ணுங்கள். முன்பசிக்குப் பாசிப்பயறு அல்லது பருத்திப்பால். மெயின் பசிக்குப் புட்டு வகை ஏதேனும் ஒன்று. வாழ்வின் ஆரோக்கியம் அந்த நொடிகளிலிருந்து தொடங்குவது, உறுதி. நெவர் மிஸ் தட்!

அடுத்த கட்டுரைக்கு