சென்னை டு மைசூர்... வழி பெங்களூரு... தென்னிந்தியர்களின் `செல்ல' சதாப்திக்கு 25 வயது! | Chennai to Mysore Shatabdi Express turns 25 today

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (11/05/2019)

கடைசி தொடர்பு:12:00 (11/05/2019)

சென்னை டு மைசூர்... வழி பெங்களூரு... தென்னிந்தியர்களின் `செல்ல' சதாப்திக்கு 25 வயது!

1994-ம் ஆண்டு, மே 11-ம் தேதி முதல் சதாப்தி ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு (Train No. 12007/12008) இயக்கப்பட்டது. வழி பெங்களூரு... தென்னிந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் என்ற பெருமைகொண்டது இந்த சதாப்தி.

சென்னை டு மைசூர்... வழி பெங்களூரு... தென்னிந்தியர்களின் `செல்ல' சதாப்திக்கு 25 வயது!

ந்தியாவின் ரயில்கள் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஆமைபோல ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ராஜ்தானி ரயில் மட்டுமே 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அதுவும், தண்டவாளத்தின் பலத்தைப் பொறுத்து ஒருசில இடங்களில் இந்த வேகத்தில் இயக்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த மாதவ்ராவ் சிந்தியாவுக்கு இந்திய ரயில்வேயை நவீனமாக மாற்ற வேண்டும் என்பதுகுறித்த சிந்தனை மேலோங்கியிருந்தது. அவரின் சிந்தையில் உதித்ததுதான் சதாப்தி ரயில்.

இந்தியாவில் 1988-ம் ஆண்டு முதல் சதாப்தி ரயில் டெல்லி - ஜான்சி இடையே ஓடத் தொடங்கியது. எப்போதுமே தென்னிந்தியாவுக்கு ஸ்பீடு ரயில்கள் தாமதமாகத்தான் அறிமுகமாகும். சதாப்தி ரயிலும் அதற்கு விதிவிலக்கல்ல. வட இந்தியாவின் பல நகரங்களை இணைத்த பிறகே, தென்னிந்தியாவுக்கு முதல் சதாப்தி ரயில் வந்தது. 1994-ம் ஆண்டு, மே 11-ம் தேதி முதல் சதாப்தி ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு (Train No. 12007/12008) இயக்கப்பட்டது. வழி பெங்களூரு... தென்னிந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் என்ற பெருமைகொண்டது இந்த சதாப்தி.

ரயிலின் உட்புறத் தோற்றம்

இந்தக் காலகட்டத்தில் ரயில்கள் சராசரியாக 60 கிலோமீட்டர் வேகத்தில்தான் இயக்கப்பட்டன. சதாப்தியின் சராசரி வேகம் 72 கிலோமீட்டர். காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில், மதியம் 1 மணிக்கு மைசூரை (497 கிலோ மீட்டர்) எட்டிவிடும். பெங்களூருவுக்கு நாலரை மணி நேரம்தான். அதாவது 10.50 மணிக்குப் போய்விடும். காலையில் இதில் ஏறினால், வேலையை முடித்துவிட்டு இரவு இதே ரயிலில் சென்னை திரும்பிவிடலாம். தனியார் துறை அதிகாரிகளுக்கு இந்த ரயில் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தென்னிந்தியாவில் முழுவதும் ஏ.சி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ரயில் என்பதால், வெகுவிரைவிலேயே சென்னை, மைசூர், பெங்களூர்வாசிகளின் செல்ல ரயிலாக மாறிவிட்டது சதாப்தி. 

முதலில் 10 கோச்களுடன் ஓடிக்கொண்டிருந்த சதாப்தி ரயில், இப்போது 16 கோச்களுடன் ஓடுகிறது. தொலைக்காட்சி வசதிகொண்ட ஓர் அனுபூதி கோச்சும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. அனுபூதி ரயில் பெட்டி ஒன்றைத் தயாரிக்க இரண்டரை கோடி செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுபூதி பெட்டி மற்ற பெட்டிகளிலிருந்து தனித்துத் தெரியும். பெங்களூரில் மட்டும் நிறுத்தப்பட்ட ரயில், 2016-ம் ஆண்டு முதல் காட்பாடியிலும் நின்று பயணிகளை ஏற்றிக்கொள்கிறது. சென்னையிலிருந்து விமானத்தில் பெங்களூருக்குச் சென்றால், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமானநிலையத்துக்குச் செல்ல வேண்டும். இதையெல்லாம் கணக்கில்கொண்டால், சதாப்தியில் நாலரை மணி நேரத்தில் பெங்களுருக்குச் சென்றுவிடலாம். 

சதாப்தி ரயில்

சென்னை - மைசூர் சதாப்தி ரயிலில் பயணிப்பதை வழக்கமாகக்கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அதில், ஒரு பயணி டெக்கான் ஹெரால்டிடம் பேசுகையில், ``பெங்களூரு போகணும்னா இந்த ரயிலில்தான் போவேன். 15 வருஷமா இந்த ரயிலைத் தவிர வேறு எதிலும் பெங்களூரு சென்றதில்லை. இப்போ பெங்களூரு ரொம்பப் பெரிய நகரமாயிட்டு. அதனால, கூடுதலா ஒரு இடத்துல ரயிலை நிப்பாட்டலாம். கே.ஆர்.புரத்துல ரயிலை நிறுத்தினால் ஒயிட் ஃபீல்ட், மாண்யா டெக்னோ பார்க் பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, இது பிரெஸ்டீஜியஸ் ரயில். தற்போது இந்தியாவில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சதாப்தியின் ரயிலின் வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும். ரயில் பெட்டிகளில் வைஃபை வசதி ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

தென்னிந்தியாவின் முதல் சதாப்திக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்