தனியார் பள்ளியில் அட்மிஷனுக்கு முன் செக் பண்ண வேண்டிய 10 விஷயங்கள்! #GoodParenting | Know these things before selecting a school for your children

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (11/05/2019)

கடைசி தொடர்பு:15:10 (11/05/2019)

தனியார் பள்ளியில் அட்மிஷனுக்கு முன் செக் பண்ண வேண்டிய 10 விஷயங்கள்! #GoodParenting

"9 மணிக்கு பள்ளித் தொடங்குகிறது என்றால், வாகனம் இரண்டு முறை செல்ல வேண்டும் என்பதால், குழந்தையை 7.30க்கே கொண்டு வந்து, ஒன்றரை மணி நேரம் காத்திருக்கச் செய்வதும் சில பள்ளிகளில் நடக்கும். இதனால், காலை - மதியம் சாப்பாட்டுக்கான நேரம் அதிகரித்து, குழந்தைகள் சோர்ந்துவிடுவர்."

னியார் பள்ளிகள் வசீகரமான விளம்பரங்களால், பெற்றோர்களை ஈர்த்துவருகின்றன. அவற்றைப் பார்த்து அந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவும் செய்கிறார்கள் பெற்றோர்கள். சேர்த்த பின்புதான் விளம்பரத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் பள்ளியில் நடைமுறையில் இருப்பதில்லை என்று தெரிய வருகிறது. தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் விஜயகுமார். 

தனியார் பள்ளி

1. மாணவர்களுக்கு நாம் அளிக்கும் பெரும் சொத்து கல்விதான். அந்தச் சொத்தைத் தரும் பள்ளியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் விஷயமாக, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பள்ளி அரசின் அனுமதியை முறையாகப் பெற்று இயங்குகிறதா என்பதைப் பரிசோதியுங்கள். சில பள்ளிகளில் விதிகளை மீறி, ஒரே கட்டடத்தில் இரண்டு மூன்று பள்ளிக்கான அனுமதியை வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கவனம் தேவை. தமிழ்நாடு அரசின் கல்வித் துறை இணையத்தளத்தில் அதை நீங்கள் செக் செய்ய முடியும். 

பேராசிரியர் விஜயகுமார்2. அந்தத் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி என்னவென்று பாருங்கள். ஏனெனில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி என்றால், நிச்சயம் பி.எட் முடித்திருக்க வேண்டும் என்பதுடன், ஆசிரியர் தகுதித் தேர்வான TET எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பல தனியார் பள்ளிகளில் சம்பளம் குறைவாகக் கொடுக்கலாம் என்பதால், ஆசிரியர் பயிற்சி எடுக்காதவர்களையும் ஆசிரியர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களால், சிறந்த கல்வியை உங்கள் பிள்ளைக்கு அளிக்க முடியாது. 

3. தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு (School Management Committee) அமைக்கப்பட வேண்டும். அதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஊரின் முக்கியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும். அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, பள்ளியின் செயல்பாடுகளைப் பற்றி உரையாட வேண்டும். விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் பள்ளியின் குறைகள் சரி செய்யப்பட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தனியார் பள்ளியில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். 

4. பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும். உங்கள் குழந்தை படிக்கவிருக்கும் வகுப்பறையில் போதுமான வெளிச்சம், காற்று வருகிறதா... மாடியில் வகுப்பறை என்றால், இருபுறமும் பாதுகாப்பான தடுப்புள்ள படிக்கட்டுகள் உள்ளனவா... பள்ளியில் எதிர்பாராத விதமாக ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால், வெளியேற போதுமான வழிகள் இருக்கின்றனவா... என்பதையெல்லாம் பரிசோதிப்பது அவசியம். 

5. அந்தப் பள்ளியை பெற்றோர்கள் தொடர்புகொள்ளும் சூழலை எளிமையானதாக வைத்துள்ளதா என்பதும் முக்கியம். அப்போதுதான் உங்கள் குழந்தையைப் பற்றியும் பள்ளியின் செயல்பாடுகள் பற்றியும் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியும். பாராட்டும் அம்சங்கள் இருந்தால் பாராட்டவும் முடியும். 

தனியார் பள்ளி

6. குழந்தையின் கல்வியில் உடல்நலக் கல்வியும் முக்கியமானது. எனவே, அந்தப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இருக்கிறதா... மேலும் விளையாட்டுப் பாட வேளைகள் ஒதுக்கி, விளையாட அனுமதிக்கப்படுகின்றனரா என்பதையும் செக் செய்யுங்கள். ஏனெனில், பல பள்ளிகளில் மைதானம் இருக்கும் ஆனால், விளையாட அனுமதிப்பதில்லை. 

7. வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வாகனம் எது... அது முறையான பராமரிப்பில் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். மேலும், பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வானங்கள் இருக்கின்றனவா என்பதும் முக்கியம். ஏனெனில், ஒரே வாகனத்தில் அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதைப் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்க முடியும். அதேபோல, 9 மணிக்கு பள்ளித் தொடங்குகிறது என்றால், வாகனம் இரண்டு முறை செல்ல வேண்டும் என்பதால், குழந்தையை 7.30க்கே கொண்டு வந்து, ஒன்றரை மணி நேரம் காத்திருக்கச் செய்வதும் சில பள்ளிகளில் நடக்கும். இதனால், காலை - மதியம் சாப்பாட்டுக்கான நேரம் அதிகரித்து, குழந்தைகள் சோர்ந்துவிடுவர். 

8. பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கழிவறைகள் இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும், மேலும், அவை சுகாதாரமாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்று செக் பண்ணுவதும் அவசியம். மாணவரின் உடல்நலக் குறைபாடு என்பதில் அசுத்தமான கழிவறைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. 

9. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதற்கான பட்டியலை அரசு அளித்திருக்கிறது. அதன்படி உங்கள் பிள்ளையைச் சேர்க்கவிருக்கும் பள்ளி வசூல் செய்கிறதா அல்லது கூடுதலாக கட்டணம் கேட்கின்றனரா என்பதையும் பாருங்கள். 

10. கல்வி உரிமைச் சட்டப்படி, 25 சதவிகித இடங்கள் ஏழை எளியவர்களுக்கு ஒதுக்கச் சொல்லியுள்ளது அரசு. நீங்கள் அரசு வரையறுத்திருக்கும் நிலையில் இருந்தால், அதன்படி சேர்க்க வலியுறுத்துங்கள்.


டிரெண்டிங் @ விகடன்