Published:Updated:

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan
பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

வருடம்1876. சென்னை மாகாணபெரும்பஞ்சம்,லட்சக்கணக்கானமக்களைகாவுவாங்கியது.முதல் இந்தியசுதந்திரப்போரை நடத்தியிருந்த இந்திய மக்களைத் தனதுநேரடிமுடியாட்சியின்கீழ்கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அதுவரை இருந்தகம்பெனியின் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஒருபடி மேலே சென்று, நேரடியாக மக்களைச் சுரண்ட அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதிக ஏற்றுமதி காரணமாக, உணவுப்பொருள்கள் தட்டுப்பாடுஏற்பட்டு, பதுக்கல்கள் தாராளமானது.எளியவர்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போக, பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. கூடவே பருவமழையும் பொய்த்துப்போக, 1876 - 78 ஆண்டுகளில் சென்னை மாகாணம் பெரும் பஞ்சத்தை சந்தித்தது.

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

50 முதல் 52 லட்சம் பேர் வரை மாண்டதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கணக்கு சொன்னாலும், கோடியைத் தாண்டியது பட்டினிச்சாவு என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பஞ்சத்தால் ஒரு புறம் மக்களின் இறப்பு, மறுபுறம் விளைச்சல் இல்லாமல் ஏற்றுமதி தடைபட்டிருக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்க்க, அணைகள், நீர் நிலைகளை அதிகரித்து, பருவமழை கைகொடுக்காத காலங்களில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக நிதியையும் ஒதுக்கியது பிரிட்டிஷ் அரசு. அதன் விளைவாகக் கட்டப்பட்டதே முல்லைப் பெரியாறு அணை.!

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

பொறியியல் அதிசயம் :

”முல்லைப் பெரியாறு அணை, பொறியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உறுதியும், நவீன தொழில்நுட்பமும், பொறியியல் உலகில் ஆச்சர்யமாகப் பேசப்படும். அதிசயமாகப் பார்க்கப்படும். காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையே!” என்று அணை திறப்புவிழாவில் பேசினார் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்ட் வென்லாக்.

கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் அமைந்திருக்கும் முல்லைப்பெரியாறு அணையில், புவி ஈர்ப்புவிசை, கன அடிக்கு 145 பவுண்டாக இருக்கும் என்பதால், இந்த அணையை ’ எடை ஈர்ப்பு அணை’ (Gravity Dam). என்கிறார்கள் பொறியியலாளர்கள்.

ஓடும் தண்ணீருக்குக் குறுக்கே அணை கட்டினால் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நோக்கமாக நிறைவேறாது. அந்தத் தண்ணீரை, ஓங்கி உயர்ந்துள்ள மேற்குத் தொடர்ச்சிமலையைக் கடந்து கிழக்கே கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அதற்காக, மலையில் ஒரு சுரங்கம் அமைக்க வேண்டும் என முடிவெடுத்தார் பென்னிகுவிக். அதற்காக, வடக்கு பக்கம் இருந்தும் தெற்குப் பக்கம் இருந்தும் மலையைக் குடையும் வேலை துவங்கியது. மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகரிக்கும்போது வடக்குப் பக்கம் சுரங்கம் தோண்டும் பணி தடைபடும். அந்த நேரத்தில், தெற்குப் பக்கம் சுரங்கப் பணிகள் நடைபெறும். தொழில்நுட்பங்களும் செயற்கைக்கோள்களும் இல்லாத அந்தக் காலத்தில், எதிர் எதிர் பக்கங்களில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கங்கள் சரியாக இணைக்கப்பட்டது பெரும் அதிசயமே! சுரங்கம் தோண்டுவதற்காக நோபல் எக்ஸ்ப்ளோசிவ் கம்பெனியிடம் இருந்து உயர் ரக வெடி மருந்துகள் வாங்கியுள்ளார் பென்னிகுவிக்.

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

கல்லணையின் தொழில்நுட்பம் :

சங்கத் தமிழனின் அடையாளமாக விளங்கும் கல்லணையின் தொழில்நுட்பம் பற்றி, ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன், கல்லணையை தி கிரேட் அனகட் (The Great Anacut) எனக் குறிப்பிடுகிறார். அவரின் ஆய்வறிக்கையைப் படித்த கர்னல் ஜான் பென்னிகுவிக், தமிழர்கள் பயன்படுத்தும் சுண்ணாம்புக் கலவையால் ஆன ’சுர்க்கி’ கொண்டு முல்லைப்பெரியாறு அணையைக் கட்ட திட்டமிடுகிறார். கூடவே, அக்காலகட்டத்தில் பிரபலமான போர்ட்லேண்ட் சிமெண்டும் பயன்படுத்தப்பட்டது.

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan

” நாங்கள் முதலில் செய்தது வானிலைகுறித்த ஆராய்ச்சிதான். ஏனென்றால், அந்த இடம் இயல்பான தட்பவெப்பநிலை கொண்டது அல்ல. அணை கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே, ஏரிப்பகுதியிலும் ஆற்றுப்பகுதியிலும் என இரண்டு வானிலை ஆய்வு மையங்கள் அமைத்து முழுமையாக தரவுகளைச் சேகரித்துக்கொண்டோம். அந்தத் தரவுகள் எங்களுக்கு பேருதவியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், பாறை ஒன்றை எடுத்து துளையிட்டு, அதில் கான்கிரீட் - சுர்க்கி கலந்த கலவையைப் போட்டு காயவைத்து, அதன் உறுதித் தன்மையை ஆராய்ந்த பின்னரே அந்தக் கலவையை அணை கட்ட பயன்படுத்தினோம்.” என்றுஆவணங்களில் பதிவுசெய்திருக்கிறார் பென்னிகுவிக்.

தட்பவெப்பநிலை, காலநிலை காரணமாக, வருடத்திற்கு ஆறு முதல் ஒன்பது மாதங்கள் மட்டுமே கட்டுமானப்பணியில் ஈடுபட முடிந்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிமுடிக்க முழுமையாக ஒன்பதுவருடங்கள் பிடித்திருக்கிறது. மொத்தம் 483 பேர் நோயாலும், விபத்தாலும் தங்கள் இன்னுயிரை அணை கட்டுமானப்பணியின்போது தியாகம் செய்திருக்கிறார்கள். அதில், ஆங்கிலேயர்களும் அடக்கம் என்கிறதுஆவணங்கள்.

நடுக்காட்டில் மின்சாரம் :

கட்டுமானப் பணிக்காக ஆறு கான்கிரீட் கலவை இயந்திரங்கள் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன. அவை இயங்கத் தேவையான மின்சாரம், வேகமெடுத்து ஓடும் பெரியாற்றில் அமைக்கப்பட்ட சிறு அனல்மின் நிலையத்தில் இருந்து பெறப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக சிறு மின் நிலையம் ஒன்றையும், பவர் ஸ்டேஷன் ஒன்றையும் அந்த நடுகட்டில், அணைக்கு அருகே அமைத்திருக்கிறார் பென்னிகுவிக்.

கட்டுமானப்பொருள்களை அணை கட்டும் இடத்திற்கு எடுத்துவருவது பெரும் சவாலான விஷயமாக இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து குமுளி வரை தொங்குபாலம் ஒன்றுஅமைக்கப்பட்டிருக்கிறது. மிக செங்குத்தான சரிவுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இந்த தொங்குபாலம் அமைக்க, மலைச் சரிவுகளைக் கணக்கிட்டு கம்பங்கள் அமைக்க ’Eckhold Omnimeter’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பொறியியலின் அதிசயம் முல்லைப் பெரியாறு அணை! - ஏன் தெரியுமா? #MyVikatan


1868ல் ஜெர்மன் பொறியாளரான சார்லஸ் ஏ.சி. எக்கோல்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவி, முதன் முதலாக இங்குதான் பயன்படுத்தப்பட்டது கூடுதல் சுவாரஸ்யமான தகவல். தொங்குபாலத்தில் வந்திறங்கும் பொருள்களை அணைப்பகுதிக்குக் கொண்டுவர சிறிய மின்சார ரயில் மற்றும் பெரியாற்றில் பயணிக்கக்கூடிய மிதவைப் படகு ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் அடர் காட்டில் அமைத்திருக்கிறார் பென்னிகுவிக் என்பது ஆச்சர்யமான ஒன்று என்றே வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கலவை இயந்திரமும் சிறு மின்நிலையமும், மிதவைப் படகும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இன்றும் முல்லைப் பெரியாறு அணையின் அருகே கிடக்கிறது. அதனைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என்பது முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் கனவாக உள்ளது.

”அடர் வனத்தில், கடுமையான தட்பவெப்ப நிலையில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடத்தில், நம் பிரிட்டிஷ் இன்ஜினீயர், இந்திய மக்களுக்குச் செய்த வரலாற்றுச் சாதனை இது. பிரிட்டிஷ் மற்றும் இந்திய கட்டுமானத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து இரண்டையும் இணைத்து, புதிய யுக்தியைக் கையாண்டிருப்பது பொறியியல் அதிசயம்.” என்று கூறியிருக்கிறார் இங்கிலாந்துப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான ஓல்ஃப் பேரி.

பென்னிகுவிக்கின் மகத்தான பணிகளை ஆராய்ந்த இங்கிலாந்துப் பொறியாளர்கள் கூட்டமைப்பு, அவருக்கு உயரிய விருது வழங்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி, அவருக்கு ”ஸ்டார் ஆஃப் இந்தியா” என்ற விருது வழங்கி சிறப்பித்தது.

ஒற்றை அணையால் ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். பஞ்சம் நீங்கி, விவசாயம் செழிக்கக் காரணமாக இருக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக பென்னி, பென்னிகுவிக், ஜான் பென்னி என தேனிவட்டாரங்களில் வீட்டில் ஒருவருக்கு பெயர் வைப்பது இன்றும் வழக்கமாக இருக்கிறது. ஜனவரி 15-ம் தேதி பென்னிகுவிக்கின் பிறந்தநாள். அன்று அவருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள் மக்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் கடவுளின் படம் இருக்கிறதோ இல்லையோ, முல்லைப் பெரியாறு அணையின் படமும், பென்னிகுவிக்கின் படமும் நிச்சயம் இருக்கும். நூற்றாண்டைக் கடந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார், பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.

 

அடுத்த கட்டுரைக்கு