பறவை, விமானம், ஸ்டேம்ப்... உடல் வழியே பயணிக்கும் ‘டிராவல்’ டாட்டூகள்! | Travel Tattoo trends

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (12/05/2019)

கடைசி தொடர்பு:10:18 (13/05/2019)

பறவை, விமானம், ஸ்டேம்ப்... உடல் வழியே பயணிக்கும் ‘டிராவல்’ டாட்டூகள்!

பயணத்தைக் குறிக்கும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது காம்பஸ். வழியறிய பயன்படுத்தப்பட்ட இந்தப் பொருள், இன்று டிராவல் டாட்டூ டிசைன்களில் சேர்ந்திருக்கிறது. இருபாலருக்கும் பொருந்தும் இந்த டாட்டூக்களில், இன்றைய டாட்டூயிஸ்ட்கள் அவர்களின் எண்ணக் கலவை கலந்து, அழகான டாட்டூக்களாக்கி இருக்கிறார்கள். அதே போல...

பறவை, விமானம், ஸ்டேம்ப்... உடல் வழியே பயணிக்கும் ‘டிராவல்’ டாட்டூகள்!

ஆயுள் உள்ள வரை, உடலுடன் உறவாடும் டாட்டூக்களில், ஒருவர் தன் கனவின் வெளிப்பாட்டைக் கலப்பது பெரிய விஷயம். இன்று பெரும்பாலானவர்கள் பயணத்தை, பயணிப்பதை கொண்டாட்டமாகப் பார்க்கிறார்கள். பயணத்தின் வழியே உலகை ரசிக்க முனைகிறார்கள். அதை அப்படியே டாட்டூக்களாக்கி மகிழ்கிறார்கள். பயணத்தை, பயணிப்பதை பெரும் கனவாகக் கொண்டு வாழ்பவர்கள், தன் உடலை டிராவல் டாட்டூக்களுக்காகத் தாரை வார்க்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பறவைகள், உலக வரைபடம், காம்பஸ், தென்னை மரம் போன்ற பயணம் சார்ந்த அனைத்து ஐகான்களையும், விதம் விதமான டிசைன்களில் டிராவல் டாட்டூக்களாக்க முடியும் என்பதுதான் இதன் ஹைலைட்.

உடலை ஆளும் விமானங்கள்!

டிராவல் டாட்டூ

பயணத்தின்மீது அகலமான பார்வை கொண்டவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் டாட்டூகளாக இன்று விமானங்களே இருக்கின்றன. விமானங்களை விதம் விதமான டிசைன்களில் வரைந்துகொள்ள பயணக் காதலர்கள் ஆர்வப்படுகிறார்கள். அதனால் விமான டாட்டூகளை அப்படியே வரைந்துகொள்ளாமல், அதில் வித்தியாசம் காட்டுவது இன்றைய டாட்டூயிஸ்ட்களின் ஸ்டைலாகவே இருக்கிறது. சாதாரணமாகவே எல்லோருக்கும் ஜன்னல் ஓர இருக்கை என்றால் பேரார்வம்தான். அதுவும் விமானத்தில் ஜன்னல் ஓர பயணம் என்றால், அது ஆனந்தத்திலும் பேரானந்தமல்லவா? அதை அப்படியே பிரதிபலிக்கும் விமானத்தின் ஜன்னல் டாட்டூஸ் இன்று பிரபலம். விமான டாட்டூகளில் இருக்கும் சிறப்பு, இதை உடலின் எந்தப் பாகங்களில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பதுதான். ஆனால், ஜன்னல் டாட்டூகளை கைகளில் வாட்ச் அணியும் இடத்தில் போட்டுக்கொள்வது கூடுதல் அழகை அந்த டாட்டூவுக்கு வழங்கும்.

வாவ் சொல்ல வைக்கும் டிராவலிங் ஸ்டேம்ப்!

டிராவல் டாட்டூ

உலகத்தை அடிக்கடி சுற்றிப்பார்க்க பயணிப்பவர்களுக்கானது இந்த டிராவலிங் ஸ்டேம்ப் டாட்டூ. இதன் கான்சப்ட் கொஞ்சம் வித்தியாசமானது. பயணக் காதலர்கள் அவர்களின் பாஸ்போர்ட் ஸ்டேம்ப் விவரங்களை, அந்தந்த நாட்டு ஸ்டேம்ப் இங்க் வண்ணங்களிலேயே டாட்டூ போட்டுக்கொள்வதுதான் இதில் இருக்கும் அழகான விஷயம். நீங்கள் பயணத்தின் மீது தீராத காதல் கொண்டவர் என்பதை இந்த ஸ்டேம்ப் டாட்டூ பளிச்சென்று உணர்த்தும். இந்த வகையான டாட்டூ இப்போதுதான் பெரிதும் விரும்பப்படுகிறது, பிரபலமாகியும் வருகிறது. இந்த வகை டாட்டூகளுக்கு தனி ஸ்டைல் இருப்பதே அதற்கு மிக முக்கிய காரணம். உடலில் எப்போதும் ஆடைகளால் மறைக்கப்படும் இடங்கள் அல்லாமல், கண்களுக்கு புலப்படும் இடத்தில் இந்த டாட்டூகளை வரைந்து கொள்ளலாம். 

பறவைகள்போல பறக்க..!

டிராவல் டாட்டூ

இன்று வரை சுதந்திரத்துக்குப் பறவைகளைத்தான் உதாரணமாகக் கொள்கிறோம். டிராவல் டாட்டூகளிலும் பறவைகளின் ஐகான்தான் பிரதானமாக இருக்கின்றன. பறவைகளின் டாட்டூகளைப் பெரிதும் விரும்புவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதில் இருக்கும் இன்னொரு சாதகமான விஷயம், பறவைகளை டாட்டூகளாக்கிக் கொள்ளும்போது பயணம் என்ற அர்த்தத்தை மட்டும் அல்லாமல், நான் சுதந்திரமானவள் என்கிற அர்த்தத்தையும் அது கொடுப்பதாக அமைகிறது. பறவைகளை மட்டுமே டாட்டூவாக்குவதை பெரும்பாலானவர்கள் விரும்பினாலும், வித்தியாசமானவர்கள் ஆகாயத்தில் இருக்கும் மேகங்கள், அதனூடே பறக்கும் விமானம், விமானத்துடன் பறக்கும் பறவைகள் என ஒரு காட்சியை டாட்டூவாக்குவதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். இந்த டாட்டூக்களுக்கு தோள்பட்டைகள் சரியான இடமாக அறியப்படுகின்றன. 

டாட்டூகளின் மின்னும் உலகத்தின் வரைபடம்!
உலக வரைபடத்தை டாட்டூ ஆக்குவதில் இருக்கும் சுவாரஸ்யம் என்னவெனில், மினிமலிஸ்ட் டிராவல் டாட்டூவாகவும், முதுகுப்பகுதியில் பெரிய அளவிலான டாட்டூகளாகவும் உலக வரைபடத்தையும் வரைய முடியும் என்பதுதான். இந்த டாட்டூ எல்லோருக்குமான சிறந்த தேர்வாக இருக்கிறது. வெறுமனே லைன்களாக மட்டுமே உலக வரைபடத்தை வரையாமல், வண்ணங்களில் உலக நாடுகளை வித்தியாசப்படுத்துவது, ரங்கோலி கான்சப்ட்களில் வரைபடத்தினுள் வரைவது என டாட்டூயிஸ்ட்கள் இதில் வித்தியாசம் காட்டுகிறார்கள். பார்ப்பதற்கு உலக வரைபடம் எனத் தெரிந்தாலும், அதில் ஒரு கான்சப்ட் இருப்பதைப் பார்த்தவுடன் உணர முடியும். முழங்காலுக்குக் கீழே இருக்கும் பின்கால் பகுதி, முதுகு, முழங்கைக்குக் கீழ் இருக்கும் பகுதி போன்றவை இந்த டாட்டூகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

டிராவல் டாட்டூ

பயணத்தைக் குறிக்கும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது காம்பஸ். வழியறிய பயன்படுத்தப்பட்ட இந்தப் பொருள், இன்று டாட்டூ டிசைன்களில் சேர்ந்திருக்கிறது. இருபாலருக்கும் பொருந்தும் இந்த டாட்டூகளில், இன்றைய டாட்டூயிஸ்ட்கள் அவர்களின் எண்ணக் கலவை கலந்து, அழகான டாட்டூகளாக்கி இருக்கிறார்கள். அதே போல, அம்புக்குறியும் டிராவல் டாட்டூகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 'யு மூவ் ஃபார்வேர்டு' என்பதற்கான அர்த்தமாக அம்புக்குறிகள் இருந்தாலும், அதில் டிராவல் விஷயங்களைச் சேர்த்து டிராவல் டாட்டூகள் வரையப்படுகின்றன. அதேபோலத்தான் கடல் அலை டாட்டூ, தென்னை மர டாட்டூ. இவ்விரண்டும் கணுக்கால் பகுதிகளில் போடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வளவு சொல்லிவிட்டோம். நீங்கள் எப்போது அழகழகான டிராவல் டாட்டூகளை உங்கள் உடல் வழியே பயணிக்க அனுமதிக்கப் போகிறீர்கள்!


டிரெண்டிங் @ விகடன்