84 கி.மீ நீள ஏரி... 6.4 கி.மீ தூர பசுமை ரயில்பாதை... அதிசய ரகசிய இடங்கள்! | secret places in the world

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:13 (13/05/2019)

84 கி.மீ நீள ஏரி... 6.4 கி.மீ தூர பசுமை ரயில்பாதை... அதிசய ரகசிய இடங்கள்!

கேபிள் கார் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சிகரத்தின் கீழ் விரிந்திருக்கும் சீயல்ப் ஏரியின் அழகில் மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. சிகரத்தின் மேல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு...

84 கி.மீ நீள ஏரி... 6.4 கி.மீ தூர பசுமை ரயில்பாதை... அதிசய ரகசிய இடங்கள்!

ரகசியம் என்றாலே அதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற துடிப்பு, நம் எல்லோரிடமும் இருக்கும். அதற்காக மெனக்கெட்டுத் தெரிந்துகொள்பவர்கள் சிலரே. ஆர்வத்துடன்கூடிய மெனக்கெடலுடனும் தேடுகிற முனைப்புடனும் பயணிப்பவர்கள்தான், உலகில் உள்ள ரகசியமான, அதிகமாக யாரும் பயணித்திடாத இடங்களுக்குச் சென்று நீங்கா நினைவுகளுடன் வீடு திரும்புகிறார்கள். இவர்கள், செம்மறி ஆட்டுக் கூட்டம்போல இல்லாமல், தன் வழி தனி வழி என  ரகசிய சுற்றுலாத்தலங்களைத் தேடித் தேடிச் சென்று பார்த்து ரசிக்கிறார்கள். உலகின் அதிசயங்கள் ஏழு என்பதை நாம் அறிவோம்.  உலகின் அனைத்துத் திசைகளிலும் இயற்கை அமைத்திருக்கும் அதிசயமான ரகசிய இடங்களுக்கு முன்னால் இந்த ஏழு அதிசயங்களும் அடிபணிந்துவிடும் என்பதுதான் உண்மை.

க்ளெவென் ரயில்நிலையம், உக்ரைன்

ரகசிய

உக்ரைன் நாட்டில் உள்ள க்ளெவென் ரயில்நிலையமும் அதன் ரயில்பாதையும், ரகசிய சுற்றுலாத்தலங்களின் ரம்மியத்தைச் சற்று அதிகமாகவே பெற்றிருக்கின்றன. க்ளெவென் மற்றும் ஆர்ஜிவ் என்கிற இரண்டு ரயில்நிலையங்களுக்கு இடையே 6.4 கி.மீ நீளம்கொண்ட ரயில்பாதை இது. இதில் சரக்கு ரயில் தினமும் மூன்று முறை சென்று வருகிறது. இதில் என்ன  அதியசம் இருக்கிறது என்கிறீர்களா. இந்த ரயில் பாதையில் சுமார் 3 கி.மீ தொலைவு வரை பச்சைப் பசேலெனெ தாவரங்கள் ஒரு குழாய்போல வளர்ந்து பசுமைப் போர்வையைப் போர்த்தியிருக்கிறது. 

அந்தப் பசுங்குழாயின் நடுவில்தான் இந்த ரயில் தினமும் பயணிக்கிறது. சிறிது நேரம் கண்களை மூடி க்ளெவெனுக்குச் செல்லுங்கள். அந்த ரம்மியமான காட்சி, உங்களின் மனக்கண்ணில் அழகாக விரியும். நண்பர்களுடன், தன் துணையுடன், காதலன் காதலியுடன் என இந்த ரயில்பாதையில் கைகோத்து நடந்தால் கிடைக்கும் ஆனந்தத்தை, நிச்சயம் உங்களால் உணர முடிகிறதுதானே! இந்த இடம், காதலர்களுக்கென்றே சுவாரஸ்யமான செய்தி ஒன்றைத் தாங்கி நிற்கிறது. இங்கு தன் காதலன் மற்றும் காதலியுடன் வந்து காதலைப் பரிமாறிக்கொண்டால், அவர்களின் காதல் ஆயுள்வரை நீடிக்குமாம். புகைப்படக் கலைஞர்களுக்கும் இந்த இடம் மெகா விருந்தாக இருக்கும்.

சிகரத்தின் உயரத்தில் ஏஸெர் க்ளிப் ரெஸ்டாரன்ட், ஸ்விட்சர்லாந்து

ரகசிய

ஆழமான பள்ளத்தாக்குகள், பரவசம் தரும் பசுமை படர்ந்த வெளிகள், திரும்பும் திசையெங்கும் உயரமான சிகரங்கள் என இருக்கும் இடத்தின் பரவசத்தை அனுபவிக்க ஏதுவாக ஓர் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்தானே. அப்படியான இடம்தான் ஏஸெர் ரெஸ்டாரன்ட் (Aescher mountain restaurant). இது ஸ்விட்சர்லாந்தில் உள்ள வாஸ்ராவன் சிகரத்தின் 2,500 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிகரத்தின் கீழ் இருக்கும் வாஸ்ராவன் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதி இருக்கும் இடத்துக்கு அருகில்  உள்ள எபேநல்ப் ரயில்நிலையம் வரை கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன. மேகங்களைக் கிழித்துக்கொண்டு செல்லும் இந்த கேபிள் கார்களில் சுமார் மூன்று மணி நேரம் பயணிப்பது சிலிர்ப்பான அனுபவம். 

கேபிள் கார் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், சிகரத்தின் கீழ் விரிந்திருக்கும் சீயல்ப் ஏரியின் அழகில் மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. சிகரத்தின் மேல் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நடந்து பயணிப்பது அலாதியான இன்பம். மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் உணவுக்கும் நீருக்கும் பிரச்னையாக இருக்குமோ என்றெல்லாம் பயம்கொள்ளத் தேவையில்லை. உணவுச் சமாசாரங்களிலும் குடிக்கும் நீரிலும் பிரச்னை எதுவுமில்லை. ஆனால், குளிப்பதற்கு அதிகமாகத் தண்ணீர் செலவழிக்க முடியாத நிலை காணப்படுகிறது.  

திங்க்லவட் ஏரி, ஐரோப்பா

ரகசிய

சிறிய அளவிலான ஏரி என்றாலே அதில் குதித்து விளையாடத் தோன்றும்... 84 கி.மீட்டர் நீளமான ஏரி என்றால் அதன் விசாலமான அழகையும், அங்கு பரவிக் கிடக்கும் ரம்மியமான காட்சிகளையும் காண்பதற்கும், அதில் விளையாடி மகிழ்வதற்கும் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. பெரும்பாலானவர்களால் அறியப்படாத அதிசயமாக இருக்கும் இந்த திங்க்லவட் ஏரி, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐலேண்டில் உள்ள திங்க்வெலிர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. இங்கு இயற்கை வெகுவாக அமைத்திருக்கும் ஏரிகளிலேயே அதிக நீளமுள்ள மிகப்பெரிய ஏரி இதுதான். மீன் பிடிக்கும் ஆர்வம்கொண்டவர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த இடமாக இந்த ஏரி விளங்குகிறது.குறைந்தபட்சம் 34 மீட்டர், அதிகபட்சமாக 114 மீட்டர் ஆழத்துடன் விளங்கும் இந்த ஏரியில் மிதந்து விளையாடுவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டிருப்பது சிறப்பு. 

லொபோடென் ஐலேண்டு, நார்வே.

இதேபோல நார்வேயில் உள்ள லொபோடென் ஐலேண்டிலும் அழகின் ஆர்ப்பாட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. மக்களால் அறியப்பட்டும் அதிகமானவர்களின் கால் தடங்கள் பதியாத இந்த இடத்தில் பெரும்பாலான மலைகள் கடலுக்குள் மிதந்துவருவதைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, பிரமிப்பில் நம் கண்கள் விரியும். குட்டிக்குட்டித் தீவுகள், அதை ஒவ்வொன்றையும் இணைக்கும் மிக  நீளமான பாலம் என, அழகுசூழ் நகரமாக இந்த இடம் மிளிர்கிறது. 

பேஸ்டெய் பாலம், ஜெர்மனி

ரகசிய

அடுத்த ரகசிய இடமாகக் கருதப்படும் இடம், பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு நகரமான புரோவென்ஸ். வசீகரிக்கும் வண்ணங்களில் ஒன்றான லாவண்டர் நிறத்திலான லாவண்டர் மலர்களின் தோட்டம், இந்த நகரம் முழுவதிலும் தங்களின் வசீகரத்தைப் பரப்பியிருக்கின்றன. ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலம் பிரான்ஸில் சம்மர் சீஸன் என்பதால், அந்த நாளில் மலர்கள் பூத்துக் குலுங்குமாம்.

இதேபோல மற்றுமோர் அறியப்படாத இடமாகத் திகழ்கிறது ஜெர்மனி நாட்டில் உள்ள பேஸ்டெய் பாலம். எல்பே ஆற்றுக்குக் குறுக்காக கடல்மட்டத்திலிருந்து 305 மீட்டர் உயரத்தில் எல்பே ஸ்டாண்ட்ஸ்டோன் மலை மீது இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் நெடும்பாறைகளை இணைப்பதற்கு, 1824-ம் ஆண்டு மரத்தினால் பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிறகு, பயணிகளின் வசதிக்காக 1851-ம் ஆண்டு பேஸ்டெய் பாலத்தின் அமைப்பிலேயே,  அனைத்து இணைப்பு மரப்பாலங்களும் கற்களால் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு பிரமிப்பைத்தரும் இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் இறுதியில் ஜெயிப்பது இயற்கையே என்பதற்கு இந்த இடங்களே சாட்சி!


டிரெண்டிங் @ விகடன்