மரங்களை காதலிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்... சோலைவனமான தஞ்சாவூர் கிராமம்! #MyVikatan

மரங்களை காதலிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்... சோலைவனமான தஞ்சாவூர் கிராமம்! #MyVikatan
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மரங்களின் மீது அளவில்லா காதல் கொண்டவர். இதனால் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு நூற்றுக்கணக்கான மரங்களை உருவாக்கியுள்ளார். இவர் பணிபுரியும் பள்ளியில் மரங்களே இல்லாமல் வெட்ட வெளியாக இருந்திருக்கிறது. உடனே களத்தில் இறங்கிய இவர் மாணவர்களின் உதவியோடு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார் இப்போது 30-க்கும் மேற்பட்ட மரங்கள் இயற்கை சூழ பள்ளிக்கு நிழலைத் தந்துவருகிறது.

இதேபோல் ஏரி, குளம், கோயில் உள்ளிட்ட இடங்களிலும் மரங்களை உருவாக்கியுள்ளார். தமிழக பாரம்பர்ய மரக்கன்றுகளான வேம்பு, புங்கை, பாதாம் உள்ளிட்ட ரகங்களைப் பதியம் போட்டுக் கன்று உருவாக்குவதோடு அவற்றை மரம் வளர்க்க ஆர்வம் காட்டுபவர்களிடம் பணம் ஏதும் வாங்கிக்கொள்ளாமல் இலவசமாகக் கொடுத்து வருகிறார்.

வாத்தியாராக இருந்துகொண்டு மரம், செடி என இருக்கிறானே என இவரின் பெற்றோர் கவலைகொள்ள, மரம் இருந்தால்தான் நல்ல மழை பொழியும், மழை பெய்தால் நிலமும் விவசாயிகள் வாழ்வும் மலரும் அப்பதான் இந்த நாடே நன்றாக இருக்கும். வாத்தியாராக இருக்கும் நான் இதைச் செய்யவில்லையென்றால் வேறு யார் செய்வது என எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் மரங்களை உருவாக்கி வரும் இவரை ஊரே பாராட்டுகிறார்கள்.