119 கி.மீ வேகம்... கின்னஸ் சாதனை படைத்த உலகின் வேகமான ஆட்டோ! | Fastest auto rickshaw in the world clocks 119.5kph, sets land speed record

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:20 (15/05/2019)

119 கி.மீ வேகம்... கின்னஸ் சாதனை படைத்த உலகின் வேகமான ஆட்டோ!

நம் ஊர் சாலைகளில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையாகப் போக்குவரத்து நெரிசலில் புகுந்து, மின்னல் வேகத்தில் செல்லும் ஒரே வாகனம் ஆட்டோ. ஆட்டோ என்றாலே அல்லுதான் என்பதை நிரூபிக்கத் தனது ஆட்டோவில் மணிக்கு 119 கி.மீ வேகத்தில் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர்.

கின்னஸ் சாதனை படைத்த ஆட்டோ மற்றும் ஓட்டுநர்

`ஓரம் போ' படத்தில் வரும் ஆர்யாவின் அசல் ரூபமான இவரின் பெயர் மேட் எவரார்டு. 46 வயது தொழிலதிபரான மேட் லண்டனின் எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2017-ல் ஒரு ஈபே விற்பனையாளரிடமிருந்து பேங்காக் டக் டக் என்று குறிப்பிடப்படும் 1971-ல் தயாரான வின்டேஜ் ஆட்டோவை 3000 யூரோக்களுக்கு (ரூ 2.71 லட்சம்) வாங்கியுள்ளார். தனது ஆட்டோவில் இருந்த 300 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜினுக்குப் பதில் டைஹாட்ஸு காரின் 1.3 லி FI இன்ஜின், அகலமான வீல்கள், இரண்டு ரேடியேட்டர், வீல் ஆர்க் எக்ஸ்டென்சன், ஓவர் ஹால்ட் சஸ்பென்ஷன்ஸ், டாஷ்போர்டு, சீட் எனக் கிட்டத்தட்ட 20,000 யூரோக்கள் (ரூ 18.25 லட்சம் ) செலவழித்து சாதா ஆட்டோவை சீட்டாவாக மாற்றியுள்ளார்.

பலமுறை தீவிர சோதனைகளுக்குப் பிறகு யார்க் நகரில் உள்ள எல்விங்டன் விமான தளத்தில் இந்த உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஆட்டோ எவரார்டு 110 கி.மீ வேகத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 119 கி.மீ வேகம் தொட்டு உலக சாதனையை படைத்துள்ளார். மேட்டுக்கு இந்த வேகம் போதாதாம். ``145 கி.மீ வேகத்தைத் தொட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சீக்கிரமே இந்த ஆட்டோவை 160 கி.மீ வேகம் போவதற்கு டியூன் செய்துவிடுவேன்'' என்று சாதனையை முடித்துவிட்டுக் கூறியிருக்கிறார். ஃபன்னுக்காக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் (எ) பாட்சா, சந்துரு (எ) ஆட்டோ சந்துரு, அண்ணாதுரை (எ) ஆட்டோ அண்ணா வரிசையில் இன்னொரு ஆட்டோ பிரியர்.