இந்தியாவின் முதல் கனெக்டட் கார் MG ஹெக்டரில் வேறென்ன ஸ்பெஷல்?! | MG Hector officially unveiled in India

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (15/05/2019)

கடைசி தொடர்பு:19:13 (15/05/2019)

இந்தியாவின் முதல் கனெக்டட் கார் MG ஹெக்டரில் வேறென்ன ஸ்பெஷல்?!

MG ஹெக்டரின் முதல் சிறப்பம்சமே இதுதான் தற்போது இந்தியாவின் ஒரே இன்டர்நெட் கார். MG யின் பிரேத்யேக i-smart next gen இணையதள அமைப்பு, இந்த காருக்கு இந்தியச் சந்தையில் புது அடையாளத்தைக் கொடுத்துள்ளது.

இந்தியாவின் முதல் கனெக்டட் கார் MG ஹெக்டரில் வேறென்ன ஸ்பெஷல்?!

ந்தியாவின் முதல் கனெக்டட் காராக வரவிருக்கும் ஹெக்டர் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரின் முழுத் தகவல்களையும் இன்று மும்பையில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது MG மோட்டார்ஸ் நிறுவனம். அடுத்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரின் இன்ஜின், இன்டீரியர், பவர் மற்றும் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப்போகிறது போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

MG ஹெக்டர்

முதல் இன்டர்நெட் கார்    

MG ஹெக்டரின் முதல் சிறப்பம்சமே இதுதான் தற்போது இந்தியாவின் ஒரே இன்டர்நெட் கார். MG யின் பிரேத்யேக i-smart next gen இணையதள அமைப்பு, இந்த காருக்கு இந்தியச் சந்தையில் புது அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் மொபைல் ஆப் மூலம் உபயோகிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் WIFI வசதியோடு மியூசிக், வானிலை, GPS நேவிகேஷன், கால் ஃபெசிலிட்டி, இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வசதிகளும் தரப்பட்டுள்ளன. i smart தொழில்நுட்பம் 5G சிஸ்டம் கொண்ட இன்பில்ட் சிம் மற்றும் வாய்ஸ் ரெகக்னிஷன் மூலம் இயங்குகிறது. 

iSmart

டிசைன் 

MG ஹெக்டரின் வெளிப்புறத் தோற்றம் F-35 ரக விமானத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதிக வளைவு நெளிவுகள் ஏதுமின்றி சமத்தான அதேசமயம் கட்டுமஸ்தான தோற்றத்துடன் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,655 மிமீ நீளம் மற்றும் 2750 மிமீ அகலம் கொண்டுள்ளது ஹெக்டர். செக்மென்ட்டிலேயே பெரிய வீல் பேஸ் இருப்பதால் இடவசதிக்கு எவ்வித பஞ்சமும் வைக்காது என்பதில் சந்தேகமே இல்லை.

ஹைப்ரிட் தொழில்நுட்பம்

இன்ஜின், பவர் மற்றும் பர்ஃபார்மன்ஸ்

ஹெக்டரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் ஃபியட்டின் 2 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு இன்ஜின்கள் வரவுள்ளன. பெட்ரோல் வேரியன்ட் 143bhp பவர் மற்றும் 250Nm டார்க்கையும், டீசல் வேரியன்ட் 170bhp பவர் மற்றும் 350Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டுமே பிஎஸ் IV இன்ஜின்கள். டீசல் மாடல் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உடனும், பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடனும் வருகிறது. இந்தியாவின் முதல்  48V ஹைபிரிட் எஸ்யூவி எனும் பெருமையோடு வெளிவருகிறது ஹெக்டர். இதில் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் மூலம் உருவாகும் மின்சாரத்தைச் சேமிக்க லித்தியன் அயான் பேட்டரி அமைப்பைக் கொடுத்துள்ளார்கள்.

ஹெக்டர் இன்ஜின்

இன்டீரியர்

உட்புறத்தில் முழுக் கறுப்பு இன்டீரியர் வருகிறது. ismart வசதி கொண்ட 10.4 இன்ச் டச் ஸ்கிரீன் செங்குத்தாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன் டேப்லெட் போன்ற அமைப்பையே MG கொடுத்துள்ளது. மேலும், ஸ்பீடோமீட்டரில்  ஓட்டுநருக்கு அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக அளிக்கும் வகையில் 7 இன்ச் டிஸ்ப்ளே தரப்பட்டுள்ளது. செக்மென்ட்டிலேயே பெரிய பூட் ஸ்பேஸ் 587 லிட்டர், பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற இருக்கைகளில் பவர் அட்ஜஸ்டபிள் வசதி, பின்புறம் 60-40 ஃபோல்டிங் சீட் கொடுத்துள்ளார்கள்.

இன்டீரியர்

பாதுகாப்பு

ஹெக்டர் காரில் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது MG நிறுவனம். ஸ்டாண்டர்டு வசதிகளான ABS, EBD, ESP, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், அனைத்துச் சீட்டிற்கும் 3 பாய்ன்ட் சீட் பெல்ட்டுகள், பின்புற டிஸ்க் பிரேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, குழந்தைகள் சீட்டுக்கான ISOFIX மவுன்ட்டுகள், ஹீட்டட் மிரர், டயர் பிரஷர் மானிட்டர் எனப் பாதுகாப்பு வசதிகளைப் பெரிய பட்டியலாகவே போடலாம். மேலும், ப்ரொஜக்டர் ஹெட்லைட், LED DRL, முன்புறம் மற்றும் பின்புறப் பனி விளக்குகள், ப்ளோட்டிங் டிசைனில் இண்டிகேட்டர்கள், மற்றும் டிக்கி கதவுக்கு பவர் டோர் போன்ற வசதிகளைக் கொடுத்துள்ளார்கள்.

எக்ஸ்டீரியர்

விலை

MG ஹெக்டர் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்ட்டிலும், 5 நிறங்களிலும் வரவிருக்கிறது. ஜூன் மாதம் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. காரின் விலை 16 முதல் 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை இந்தியாவில் 10 லட்சம் கிலோமீட்டர்கள் வரை ஓட்டி டெஸ்ட் செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் 250 டீலர்களை நாடு முழுவதும் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். ஹெக்டார் விற்பனைக்கு வரும்போது டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV 300, ஹூண்டாய் க்ரெட்டா, போன்ற கார்களுக்குப் போட்டியாளராக இருக்கப்போகிறது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் கியா மோட்டார்ஸின் புதிய காரும் இதே செக்மென்ட்டில் போட்டிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்