அக்டோபர் மாதத்துக்குள் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா H-RV! | Honda's new suv HRV will launch confirmed before October

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (16/05/2019)

கடைசி தொடர்பு:20:45 (16/05/2019)

அக்டோபர் மாதத்துக்குள் விற்பனைக்கு வருகிறது ஹோண்டா H-RV!

சென்னையில் உள்ள ஹோண்டா கார் டீலரான டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ் 1 லட்சம் ஹோண்டா கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை பதித்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ''ஹோண்டாவின் புதிய HRV காம்பாக்ட் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதத்துக்குள் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷரத் விஜயராகவன்.

சுந்தரம் ஹோண்டா

டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஹோண்டா கார் டீலராக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை டெல்லியில் உள்ள டாடா டீலர் மட்டுமே 1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ள நிலையில் ஹோண்டாவில் 1 லட்சம் மைல்கல்லைப் பதித்த ஒரே நிறுவனம் சுந்தரம் மோட்டார்ஸ். ஆட்டோமொபைல் துறையில் பெரும்பகுதியாக இருக்கும் சர்வீஸ் துறையில் சுந்தரம் மோட்டார்ஸ் இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. 1946-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டு இந்நிறுவனம் பிரீமியர், ஃபியட், ஜெனரல் மோட்டார்ஸ், மெர்சிடீஸ் பென்ஸ் எனப் பல கார் டீலர்ஷிப்பில் கால்பதித்துள்ளது. 1998-ல் இந்தியாவில் ஆரம்பித்த முதல் ஹோண்டா டீலர் இந்நிறுவனம்தான்.

டீலர்ஷிப் பற்றிப் பேசிய விஜயராகவன், ``எஸ்யூவிகள் தற்போது அதிகம் விற்பனையாகும் நிலையில் ஹேரியர், க்ரெட்டா போல ஹோண்டாவின் H-RV காம்பேக்ட் எஸ்யூவி அக்டோபர் மாதத்துக்குள் விற்பனைக்கு வரும்'' என்று கூறினார். புதிய HRV, எல்ஈடி ஹெட்லைட், 17 இன்ச் அலாய் வீல், 130bhp பவர் மற்றும் 155Nm டார்க் தரும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன. மேலும், புதிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காரின் விலை இன்னும் வெளிவராத நிலையில் ரூ.12 முதல் 18 லட்சம் வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharath Vijayaraghavan, Executive Director, Sundaram Motors / S. Ram, Joint Managing Director, Sundaram Motors

தற்போது ஹோண்டாவின் விற்பனையில் 45 சதவிகிதம் ஹோண்டா சிட்டி விற்பனையாகிறது. அதைத் தொடர்ந்து அமேஸ் மற்றும் ஜாஸ் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக உள்ளன. சுந்தரம் மோட்டார்ஸில் தற்போது 12 ஷோரூம்கள், 337 சர்வீஸ் பே, 50,000 சதுர அடிக்கு மேற்பட்ட ஒர்க் ஷாப் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 புதிய ஷோரூம்களையும், அடுத்த ஆண்டில் 3 புதிய ஷோரூம்களையும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.