ஏ.சி. வெடிக்குமா... பாதுகாப்பது எப்படி? நிபுணரின் பதில்! | How to properly maintain AC to avoid accidents

வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (17/05/2019)

கடைசி தொடர்பு:10:12 (17/05/2019)

ஏ.சி. வெடிக்குமா... பாதுகாப்பது எப்படி? நிபுணரின் பதில்!

தொடக்கத்தில்  ஏ.சிகளில் தரம் உயர்ந்த காப்பரையே பயன்படுத்தி வந்தார்கள். எனவே அவை அதிக காலத்துக்கு பிரச்னை இல்லாமல் உழைத்தன. ஆனால் சமீப காலமாக நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அலுமினியத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் சென்னை பொன்ற வெப்பம் அதிகமான நகரங்களுக்கு அவை ஏற்றவை அல்ல, அதனால் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது

ஏ.சி. வெடிக்குமா... பாதுகாப்பது எப்படி? நிபுணரின் பதில்!

ல வருடங்களுக்கு முன்னால் வரை ஏ.சி என்பது வீட்டுக்குத் தேவைப்படும் ஆடம்பரமான பொருள்களில் ஒன்றாகவே இருந்தது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில், அலுவலகங்களில் மட்டுமே காணப்பட்ட ஏ.சி-யை இப்போது சாதாரண வீடுகளிலேயே பார்க்க முடிகிறது. தற்போது தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் வீடுகளில் ஏ.சி-யின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அறையைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் ஏ.சியானது சில நேரங்களில் விபத்துகளையும் ஏற்படுத்தி விடுகிறது. நேற்றுமுன்தினம் காலை திண்டிவனத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதுபோன்ற விபத்து ஒன்றில் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுமட்டுமன்றி முன்னர் நடந்த சில விபத்துகளிலும் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதுபோல  ஏ.சி தீப்பிடிக்கக் காரணம் என்ன? அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி  ஏ.சி டெக்னீஷியன் ஏ.ஜி பிஜிலியிடம் கேட்டோம். 

``ஏ.சியில் தீப்பிடிக்கக் காரணம் என்ன?"

கண்டன்ஸர் - ஏ சி

``ஒரு ஏ.சியின் கண்டன்ஸரில் உருவாகும் அதீத வெப்பமோ அல்லது கம்ப்ரஸரில் உருவாகும் அதீத அழுத்தமோ தீப்பிடிக்க ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு ஏ.சியை எடுத்துக்கொண்டால் வீட்டுக்கு வெளியே கம்ப்ரஸர் மற்றும் கண்டன்ஸர் என இரண்டு அமைப்புகள் இருக்கும். இதில் கம்ப்ரஸர் கேஸை அதிக அழுத்தத்தில் கண்டன்ஸருக்கு அனுப்பும் வேலையைச் செய்யும். பின்னர் அங்கிருந்து வீட்டுக்குள் இருக்கும் அமைப்புக்குள் வரும் கேஸ் மீண்டும் கம்ப்ரஸருக்குச் செல்லும். ஏ.சி இயங்கும்போது இந்த செயல்பாடு தொடர்ச்சியாக நடைபெறும். கண்டன்ஸர் பகுதிதான் நம் பார்வைக்குத் தெரியும்படி இருக்கும். இந்தப் பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். இந்த அமைப்பில் ஏதாவது பழுது ஏற்பட்டால், தீ விபத்து ஏற்படக்கூடும். வெப்பத்தால் காயில்களில் உள்ள வெல்டிங்குகளில் விரிசல் ஏற்படலாம். அதிக அழுத்தத்தால் கம்ப்ரஸர் வெடிக்கும் நிலைக்குச் செல்லக் கூடும்.

பிஜிலி சார்ட் சர்க்யூட் ஆனாலும் தீப்பிடிக்க வாய்ப்புண்டு. ஒரு முழுமையான சர்க்யூட் என்பதால் வெளியில் தீப்பிடித்தாலும் அது வீட்டுக்குள் பரவ வாய்ப்புண்டு. கண்டன்ஸர் அமைப்பை நன்றாகக் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைப்பது அவசியமானது. எனக்குத் தெரிந்து, ஒருவர் வீட்டின் வாசலில் கண்டன்ஸர் அமைப்பை வைத்திருக்கிறார். அதிலிருந்து வெப்பம் அதிகமாகவே அதைத் தொடர்ந்து ஈரமான சாக்குப் பையால் மூடி வைத்திருக்கிறார். இதனால்  ஏ.சியின் இயக்கம் பாதிக்கப்பட்டு அடிக்கடி பழுதாகியிருக்கிறது. டெக்னீஷியன் பரிசோதிக்க வரும்போது சாக்கை முன்பே அப்புறப்படுத்தியிருப்பார்கள் என்பதால் அவராலும் கண்டறிய முடியவில்லை. அதன்பிறகு பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னரே அவர்கள் செய்த தவற்றை டெக்னீஷியன் கண்டுபிடித்திருக்கிறார். இப்படி பலருக்கு  ஏ.சியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. குறிப்பாக  ஏ.சியை சரிவரப் பராமரிக்காதது தீ விபத்து ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகப்படுத்தும்." 

``ஏ.சியை சர்வீஸ் செய்வது எந்த அளவுக்கு முக்கியமானது?"

``ஏ.சியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்வது அவசியம். அதை மட்டும் நம் ஆட்கள் செய்வதே கிடையாது. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் எனக் காலம் கடத்துகிறார்கள். அதன் பின்னர் கோடைக்காலம் முடிந்தவுடன்  ஏ.சியின் சர்வீஸையும் மறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் கோடைக் காலம் தொடங்கிய பின்னர் சர்வீஸ் செய்ய முடிவெடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில் டெக்னீஷியன்கள் கிடைப்பது கடினமானதாக இருக்கும். எனவே, அதற்கு முன்னால் டெக்னீஷியன்களை அழைத்தால் உடனே வருவார்கள். சராசரியாக ஒரு ஏ.சியை மூன்று மாத காலத்துக்கு ஒரு முறையாவது கட்டாயமாக சர்வீஸ் செய்ய வேண்டும். குளிர்காலமாகவே இருந்தாலும் அதைக் கடைப்பிடிக்கலாம்."

``கோடைக்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நிகழ்வதற்கான காரணம் என்ன?"

ஏ.சி

``தொடக்கத்தில்  ஏ.சிகளில் தரம் உயர்ந்த காப்பரையே பயன்படுத்தி வந்தார்கள். எனவே, அவை அதிக காலத்துக்குப் பிரச்னை இல்லாமல் உழைத்தன. ஆனால், சமீப காலமாக நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அலுமினியத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், சென்னை பொன்ற வெப்பம் அதிகமான நகரங்களுக்கு அவை ஏற்றவை அல்ல, அதனால் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது என்பதால் தற்போது அலுமினியம் பயன்படுத்துவதைக் குறைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது போல தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தும் ஏ.சிகளில் விபத்து அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மேலும், கோடைக் காலங்களில் ஏ.சிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதும், வெளிப்புறத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதும் விபத்து நிகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம்."

``ஏ.சிக்கு ஸ்டெபிலைசர் தேவையா?"

``மின்சாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து சீராக கொடுக்கும் என்பதால் ஒரு ஏ.சிக்கு கட்டாயமாக ஸ்டெபிலைசர் தேவைப்படும். எந்த நிறுவனத்தினுடையதாக இருந்தாலும் தரமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியம்."

``ஏ.சியை எளிமையாகப் பராமரிக்க ஏதாவது வழிகள் இருக்கிறதா?"

``பொதுவாகவே மின் சாதனங்களை நாம் கை வைப்பதைவிட டெக்னீஷியன்களிடம் ஒப்படைப்பது நல்லது. அதே நேரம் சின்னச் சின்ன பராமரிப்பு வேலைகளை வீட்டிலேயே பண்ணலாம். நீங்களே ஏ.சியில் உள்ள ஃபில்டர்களை பத்து நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யலாம். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஏ.சியைப் பொருத்த வருபவரிடம் கேட்டாலே சொல்லிக் கொடுப்பார். மார்க்கெட்டில் ஃபில்டர்களை சுத்தம் செய்யத் தனியாக பிரஷ்கள் கிடைக்கின்றன அது அவற்றில் இருக்கும் தூசிகளை எளிதாக அகற்ற உதவும். அதே நேரம் சுத்தம் செய்யும்போது உள்ளே இருக்கும் சர்க்யூட் போர்டில் தண்ணீர் படாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்."

``விபத்துகளைத் தடுக்க என்ன செய்யலாம்?"

மெக்கானிக்

``சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டால்கூட சர்வீஸ் சென்டருக்கு கொண்டுபோய் சரி செய்வதுதான் நல்ல முடிவாக இருக்கும். ஆனால் அதற்கு நேரம் ஆகும், செலவும் அதிகம் என்பது போன்ற காரணங்களால் ஏ.சி வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே சரிசெய்யச் சொல்லி விடுகிறார்கள். அதை முடிந்தவரையில் தவிர்ப்பது நல்லது. இன்று ஏ.சி மெக்கானிக்குகள் அதிகமாகப் பெருகி விட்டார்கள். `வீடு தேடிவந்து குறைவான விலையில் சர்வீஸ் செய்து தருகிறோம்' என்று தெரிவிப்பதால் வீட்டில் இருப்பவர்களும் அவர்களின் கையில்  ஏ.சி யைக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் சர்வீஸ் செய்ய முறையாகப் பயிற்சி பெற்றவர்களா என்பதைக் குறைந்தபட்சம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்களின் கையில் வேலையை ஒப்படைக்கலாம். ஏ.சியைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. விலை குறைவாகக் கிடைக்கிறதே என்ற நினைப்பில் தரமற்ற ஏ.சியை வாங்க வேண்டாம், கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல தரமான ஏ.சியை வாங்க வேண்டும். அதேபோல ஒரு ஏ.சியை வாங்குவதற்கு முன்னால் டெக்னீஷியன்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது. எந்த ஏ.சியாக இருந்தாலும் அதைச் சரியாகப் பராமரித்தால் அதற்கும் பிரச்னையில்லை, அதைப் பயன்படுத்தும் நமக்கும் பிரச்னையில்லை. "


டிரெண்டிங் @ விகடன்