ஹின்ட் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா... ஜொலிக்கும் ஹீனா கான்.. கேன்ஸ் திரைப்பட விழா! | From Priyanka Chopra to Hina Khan... Update about Cannes 2019

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:09 (17/05/2019)

ஹின்ட் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா... ஜொலிக்கும் ஹீனா கான்.. கேன்ஸ் திரைப்பட விழா!

கடந்த வாரம் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, இந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். ஆனால், இம்முறை கற்கள் பதிக்கப்பட்ட சிம்பிலான உடை மற்றும் மேக்-அப்பில் மிடுக்காகத் தோன்றினார்.

ஹின்ட் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா... ஜொலிக்கும் ஹீனா கான்.. கேன்ஸ் திரைப்பட விழா!

திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த `கேன்ஸ் திரைப்பட விழா', மே 14-ம் தேதி பிரான்ஸில் கோலாகலமாகத் தொடங்கியது. 72-வது சர்வதேச திரைப்பட விழாவான இதில், உலகமெங்கிலுமிருந்து பல்வேறு விதமான முழுநீளத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடலுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. ஏராளமான ஸ்பெஷல் மொமென்ட்டுகளை `க்ளிக்' செய்ய கேமராக்களைக் கையில் ஏந்தியபடி புகைப்படக் கலைஞர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். பிரபல அமெரிக்கப் பாடகி செலினா கோமேஸ், எல் ஃபான்னிங் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களின் வருகையோடு வண்ணமயமாகத் தொடங்கியது இந்த வருட கேன்ஸ் திருவிழா.

கேன்ஸ் திரைப்பட விழா

முன்பில்லாத பன்முகத்தன்மை கொண்ட ஜூரி குழுவை இந்த வருடத் திருவிழாவில் காண முடிந்தது. லத்தீன் அமெரிக்கரான இயக்குநர் Alejandro González Iñárritu, முதல்முறையாக ஜூரி குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ``நான் இதுவரை தலைவராக எங்கேயும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 11 வருடங்களுக்கு முன்னர் வெனீஸ் திரைப்பட விழாவில் ஜூரிக்களில் ஒருவராக இருந்ததோடு சரி. என் வாழ்நாளில், என் குடும்பம் மற்றும் படப்பிடிப்புத்தளம் உட்பட எதையும் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்ததில்லை. இங்கு நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிலைமை" என நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார் Alejandro. எட்டுப் பேர்கொண்ட ஜூரி குழுவில் நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் எனச் சமநிலையில் கொண்டிருக்கிறது இந்த வருட கேன்ஸ் விழா. இதில், 22 வயதுடைய அமெரிக்க நடிகை எல் ஃபான்னிங் ஜூரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேன்ஸ் திரைப்படத் திருவிழா வரலாற்றிலேயே இவர்தான் மிகவும் இளைய ஜூரி உறுப்பினர்.

AR Rahman

இந்த ஆண்டின் தொடக்க விழாவில், Jim Jarmusch இயக்கத்தில் உருவாகியிருக்கும் The Dead Don't Die எனும் ஜோம்பி நகைச்சுவை திரைப்படம்தான் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் செலீனா கோமேஸ், ஆடம் டிரைவர், டில்டா ஸ்வின்டன், பில் முர்ரே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

Hina Khan

இந்தியாவிலிருந்து ஐஸ்வர்யா ராய் பச்சன், மல்லிகா ஷெராவத், சோனம் கபூர், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள அனுமதி பெற்றுள்ளனர். பிரியங்கா சோப்ரா, டயானா பென்ட்டி மற்றும் ஹீனா கான் போன்றவர்கள் இதில் முதல்முறையாகப் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாய்ராவுடன் கேன்ஸ் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.
முதல் முறையாகக் கலந்துகொண்ட ஹீனா கான், Ziad Nakad couture-லிருந்து ஆடையைத் தேர்வு செய்திருந்தார். நிலம் தொடும் ஸ்லீவ், Plunging neckline மற்றும் கண்ணாடி மாதிரிகள் பொருத்தப்பட்ட கவுனில் ஜொலித்தார் ஹீனா.

Kangana Ranaut

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே பத்து நாள்களில் ஐந்து கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் 'மணிகர்ணிகா' கங்கனா ரனாவத். இவர், கேன்ஸ் சிவப்புக் கம்பள விரிப்பு நிகழ்வில், காஞ்சிபுரம் புடவையை கற்கள் பதித்த `கார்செட்டோடு' அணிந்து மிகவும் வித்தியாசத் தோற்றத்தில் தோன்றினார். பிறகு, கற்கள் பதித்த கறுப்பு மற்றும் வெள்ளை நிற பேன்ட் சூட்டில் (Pant Suit) Grey Goose பார்ட்டியில் கலந்துகொண்டார்.

Deepika Padukone

தன் உடலமைப்பை மேலும் மெலிதாக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட தீபிகா படுகோன், க்ரீம் வண்ண முழு நீள கவுனில் சாக்லேட் நிற மாபெரும் Bow இணைத்து க்ளாஸிக் தோற்றத்தில் காட்சியளித்தார். இது முதல் நாள் தோற்றம்தான். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் சிவப்புக் கம்பள விரிப்பில் போஸ் கொடுக்கத்  தயாராகிக்கொண்டிருக்கிறார். 

Priyanka Chopra

கடந்த வாரம் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, இந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கலந்துகொண்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். ஆனால், இம்முறை கற்கள் பதிக்கப்பட்ட சிம்பிலான உடை மற்றும் மேக்-அப்பில் மிடுக்காகத் தோன்றினார். பொதுமக்கள் சமூக வலைதளங்களில், இவரின் கேன்ஸ் காஸ்ட்யூம் பற்றிய விவாதங்களை முன்வைத்துக்கொண்டிருந்த வேளையில், இவர்களுக்கு `ஹின்ட்' கொடுக்கும் விதமாக மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா, மொனாகோ இளவரசி கிரேஸ் பேட்ரிஸியா கெல்லி மற்றும் இத்தாலிய நடிகை சோபியா லோரன் ஆகியோருடைய கேன்ஸ் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா. அவர்களில், தன் நெருங்கிய தோழியான மேகன் மார்கிலின் மாமியாரான இளவரசி டயானா உடுத்தியிருந்த உடையைப் போலவே, கேன்ஸில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தைக் காண்பதற்கு உடுத்தி வந்திருந்தார் பிரியங்கா ஜோனஸ்.


டிரெண்டிங் @ விகடன்