``பணமா பெருசு... அந்த நிகழ்ச்சி என் பேரைக் கெடுத்திருக்கும்!'' - நிர்மலா பெரியசாமி | Nirmala Periyasamy talks about her political stand and friendship with Tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (18/05/2019)

கடைசி தொடர்பு:18:45 (18/05/2019)

``பணமா பெருசு... அந்த நிகழ்ச்சி என் பேரைக் கெடுத்திருக்கும்!'' - நிர்மலா பெரியசாமி

``ஊதியமாகக் கிடைக்கும் பணம் மட்டுமே முக்கியமில்லை என்று கருதி அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினேன். மேற்கொண்டு அந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருந்தால், என் பெயர் கெட்டிருக்கும்."

``பணமா பெருசு... அந்த நிகழ்ச்சி என் பேரைக் கெடுத்திருக்கும்!'' - நிர்மலா பெரியசாமி

.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார், `வணக்கம்' புகழ் நிர்மலா பெரியசாமி. அரசியல், மீடியா பணி, தமிழிசை உடனான நட்பு, தமிழ் ஆர்வம் உட்பட நிர்மலாவிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் முன்வைத்து அவரிடம் பேசினோம். நிர்மலா பெரியசாமியிடமிருந்து, ஒவ்வொரு கேள்விக்கும் உற்சாகமாகப் பதில்கள் வருகின்றன. 

``தற்போதைய அ.தி.மு.க தலைமை மீது உங்களுக்கு அதிருப்தி இருப்பதாகச் செய்திகள் உலாவுகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?"

``நிச்சயமாக இல்லை. இதுபோன்ற வதந்திகளை அடிக்கடி சிலர் பரப்பிவிடுகின்றனர். மிகப்பெரிய இயக்கத்தில் பணியாற்றும்போது, சிறு சிறு மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்தக்கூடாது. அ.தி.மு.க-வில் எனக்கான மரியாதையும் கவனிப்பும் நல்லபடியாகவே தொடர்கிறது. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். எதிர்க்கட்சியினர், `வட போச்சே' என வருத்தப்படப்போவது நிச்சயம்."  

நிர்மலா பெரியசாமி

``இந்த முறை தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளராக உங்களின் செயல்பாடு பற்றி..."

``நேற்றுதான் அரவக்குறிச்சி தொகுதியில் என் பிரசாரத்தை நிறைவு செய்தேன். ஜெயலலிதா அம்மா இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அவர் துணையாக இல்லை என்கிற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் ஜெயலலிதா அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில்தான் பயணிக்கிறோம்... பயணிப்போம்."

`` `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா?"

``இல்லை! மக்களுக்கு உதவவேண்டும் என்பதே, அந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம். அது பிடித்ததால்தான், தொகுப்பாளராக ஒப்புக்கொண்டேன். என் மனசாட்சிக்கு விரோதமின்றி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றினேன். என் கொள்கைக்கும், நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கத்துக்கும் எதிராக அந்நிகழ்ச்சி செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனசாட்சிக்கு எதிராகப் பணிசெய்ய விருப்பமில்லை. சிலகாலம் போராடிப்பார்த்த பிறகே, ஊதியமாகக் கிடைக்கும் பணம் மட்டுமே முக்கியமில்லை என்று கருதி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினேன். மேற்கொண்டு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றியிருந்தால், என் பெயர் கெட்டிருக்கும். நான் தொகுப்பாளராக இருந்தவரை, அந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் மதிப்பு இருந்தது உண்மைதானே? பிறகு அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவேயில்லை. பின்னர், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் சிலர் உயிரிழந்தது குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்."

நிர்மலா பெரியசாமி

``மீண்டும் மீடியாவில் பணியாற்றுவீர்களா?"

``அரசியலுக்கு அப்பாற்பட்ட, நல்ல நிகழ்ச்சி அமைந்தால் நிச்சயம் பணியாற்றுவேன்." 

``தி.மு.க-வில் முக்கிய பிரபலங்களுடன் உங்களுக்கு அறிமுகம் இருந்ததுண்டு. ஆனால், அ.தி.மு.க-வில் இணைந்தீர்கள். என்ன காரணம்?"

``என் குடும்பத்தில் பலர் அரசியலில் பணியாற்றியிருக்கிறார்கள். அதனால் எனக்கு இளம் வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால், நேரடி அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை. தி.மு.க-வில் மறைந்த கலைஞர் கருணாநிதி உட்பட அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் மட்டுமே இருந்தது. கருணாநிதி என்னை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். நான் சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து விலகிய பிறகு, ஒருமுறை ஜெயலலிதா அம்மா என்னை அழைத்து தனிமையில் ஒரு மணிநேரம் பேசினார். அவரும் என்னை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு அழைப்பு விடுக்காத கட்சிகளே இல்லை. பிறகு அரசியலுக்கு வர முடிவெடுத்தபோது, ஜெயலலிதா அம்மாவின் அ.தி.மு.க-தான் எனக்குப் பொருத்தமான கட்சியாக இருக்கும் என நினைத்தேன்.

நிர்மலா பெரியசாமி

``தமிழிசையுடனான உங்கள் நட்பு இப்போது எப்படி இருக்கிறது? 9 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிவி நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டது நினைவிருக்கிறதா?"

``எங்களுடையது நீண்டகால நட்பு. நீங்கள் கூறிய, விஜய் டிவி `ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம். அதில், எங்கள் தமிழ்த் திறனைப் பயன்படுத்தி விளையாடினோம். அந்த நிகழ்வை மறக்க முடியுமா? அப்போது அவர் அரசியலில் வளர்ந்துவந்த காலகட்டம். அதனால் அடிக்கடி சந்தித்துக்கொண்டு, நிறைய விஷயங்களை விவாதிப்போம். இப்போது இருவரும் பிஸியாக இருக்கிறோம். அதனால் சந்தித்துக்கொள்வது அரிதுதான். ஆனால், எங்கள் இருவரின் மனதிலும் நட்பு பழைய நினைவுகளுடன் அப்படியே இருக்கிறது.

பலகட்சி பிரபலங்களுடனும் எனக்கு நட்பு உண்டு. நேரப் பற்றாக்குறையாலும் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்பதாலும்... பலருடனும் இப்போது நட்பு குறைந்துள்ளது. ஒருவேளை அரசியல் நண்பர்களுடன் சந்திப்பு ஏற்பட்டாலும், அரசியல் தவிர்த்து பர்சனல் விஷயங்களைத்தான் பேசுவோம்." 

நிர்மலா பெரியசாமி

``சமூகவலைதளங்களில் தமிழிசைக்கு எதிராகக் கேலி, கிண்டல்கள் அதிகம் இருக்கிறது. அது குறித்து உங்கள் கருத்து?"

``பெண்களை இழிவுப்படுத்துவதாக நினைத்து, முகம் தெரியாத தைரியமில்லாதவர்கள் செய்யும் மட்டமான செயல் இது. யாராக இருந்தாலும், அவரின் உழைப்பைத்தான் பார்க்க வேண்டும். ஒருவரின் செயலுக்கு, கருத்துக்கு ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சனம் சொல்வதே சரி. ஒருவரின் உருவ அமைப்பை வைத்து விமர்சனம் செய்வது மிகத் தவறானது. அப்படிச் செய்யும் முகநூல் வீரர்களின் செயல், அவர்களின் மன அகங்காரத்தையே பிரதிபலிக்கிறது. தமிழிசையின் முகம்போல, அவரின் குணமும் அழகுதான். மிகக் கடுமையாக உழைத்துத்தான் தமிழிசை தனக்கான இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். அவரை விமர்சனம் செய்பவர்கள், அவர் கடந்துவந்த பாதையைத் தெரிந்துகொள்வது சிறந்தது. இதைத் தோழியாக இல்லாமல், சக பெண்ணாகச் சொல்கிறேன்." 

``தமிழ் ஆசிரியராக அல்லது பேராசிரியராகப் பணியாற்றும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதா?"

``எனக்குத் தமிழ் ஆர்வம் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால், நான் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஆசிரியர் ஆகவேண்டும் என்பது என் பெரிய ஆசை. சிலகாலம் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பயிற்சி எடுத்தேன். பிறகு ஆசிரியராகும் சூழல் ஏற்படவேயில்லை. அதனால் எனக்கு வருத்தமுண்டு."


டிரெண்டிங் @ விகடன்