நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... சுருங்கும் நிலப்பரப்பு... நாசா வெளியிட்ட புதுத் தகவல்! | moonquakes have happened says NASA

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:22 (18/05/2019)

நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... சுருங்கும் நிலப்பரப்பு... நாசா வெளியிட்ட புதுத் தகவல்!

நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... சுருங்கும் நிலப்பரப்பு... நாசா வெளியிட்ட புதுத் தகவல்!

நிலநடுக்கம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிலவுநடுக்கம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பூமியில் ரசாயன மாற்றம், பூமித்தட்டுகளில் ஏற்படும் உராய்வு, எரிமலை வெடிப்புகள் போன்ற காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படும். பூமியைப் போலவே நிலவிலும் நடுக்கம் உண்டாகிறது என நாசா தற்போது தெரிவித்துள்ளது. நிலவின் உட்பகுதியில் நிலவும் அதிகக் குளிர்ச்சியின் காரணமாக, நிலவானது சிறிதாகிக்கொண்டே போவதால் அதன் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்திருக்கிறது. இந்தச் சுருக்கங்களால் நிலவானது ஓர் உலர் திராட்சை போலத் தோற்றமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

நிலாவில் ஏற்பட்ட மாற்றங்கள்

நிலவின் மேற்பரப்பை ஆய்வுசெய்ய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) அப்போலோ 11, அப்போலோ 12, அப்போலோ 14, அப்போலோ 15 மற்றும் அப்போலோ 16 ஆகிய ஐந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. அதில் அப்போலோ 11 மட்டும் மூன்று வாரங்களில் செயலிழந்துவிட்டதால், மற்ற அப்போலோ 12, 14, 15 & 16 செயற்கைக்கோள்கள் மூலம் கிடைத்துள்ள தரவுப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின்படி நிலவுப்பரப்பின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவு வரை குளிர்ச்சி அதிகமாகி நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு, மேற்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பு ஏற்பட்டு உறுதியாக இருக்கும் நிலவின் மேற்பகுதியில் விரிசல்களும் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் நிலவின் ஒரு பகுதி தாழ்ந்து, அதன் அருகிலேயே மற்றொரு பகுதி உயரமாகக் காணப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ``செயற்கைக்கோள்கள் இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட படங்களை அனுப்பியுள்ளன. அதில் 3,500-க்கும் அதிகமான படங்களில் நிலாவின் நிலப்பரப்பின் மேற்பகுதியில் மடிப்பு மடிப்பாகச் சுருக்கங்கள் போன்று மாறியிருப்பதைக் காணமுடிந்தது. இந்தப் படங்கள் அனைத்தும் 1969 முதல் 1977 வரையிலான, சுமார் 50 ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. படங்களில் சுருக்கமானது சிறிய படிக்கட்டுகள் போன்று 10 மீட்டர் முதல் பல கிலோ மீட்டர்கள் வரை நீளமாக உள்ளது. இவை நிலவு சீராகக் குளிர்வடைதால் ஏற்படும் நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை" எனத் தெரிவித்துள்ளனர். அப்போலோ செயற்கைக்கோளில் நான்கு இடங்களில் தரையிறங்கிய சீஸ்மோமீட்டர்கள் (நிலநடுக்கத்தின் வேகம் மற்றும் திறன் ஆகியவற்றை அளக்கும் கருவி) கிட்டத்தட்ட 28 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

நாசா வெளியிட்ட நிலவின் படம்

மேலும், நிலவில் ஏற்பட்டிருக்கும் சில நிலநடுக்கங்கள் வலுவானவை. அவை 5 ரிக்டர் வரை இருக்கக்கூடும் என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரும் ஸ்மித்சோனியன் தேசிய விமானம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் மூத்த விஞ்ஞானியுமான தாமஸ் வாட்டர் கூறுகிறார். மேலும், ``நிலவில் இயற்கையாகவே விண்கற்கள் மோதுவதால் சில நில நடுக்கம் உண்டாகும். செயற்கையான நிலநடுக்கங்கள் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் விண்கலனின் தாக்கத்தினால் உண்டாகலாம்" என்றும் கூறியுள்ளார்.

Moon surface

மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிளவு மற்றும் மடிப்புகள் சந்திரனின் டெக்டோனிக்களின் ஆதாரமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். (Tectonic என்பது பூமியின் மேற்பரப்பு கட்டமைப்பை உருவாக்குகிற, மாற்றுகிற மற்றும் இயக்குகிற ஒரு புவி சக்தி ஆகும்) இதேபோல் நிலவிற்கும் தனது கட்டமைப்பை மாற்றுகிற உள்சக்தி இருக்கும் என்று நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் நிலவின் இந்தப் பிளவு மற்றும் விரிசல்கள் நிலவின் டெக்டோனிக் செயல்பாட்டோடு தொடர்புடையதா என ஆராய்கின்றனர். இதை சீஸ்மோமீட்டர்கள் மூலம் கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.

லேசான நிலநடுக்கங்கள் கிட்டத்தட்ட 18 மைல் (30 கிலோமீட்டர்) வரை பிளவை உருவாக்கியுள்ளன. மேலும் நிலவானது அதிக அழுத்தத்தை எதிர்கொண்டபோது இந்தப் பிளவுகள் சுமார் 37 மைல் ( 60 கிலோ மீட்டர்)வரை பாதித்துள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நிலவினை குறித்த இந்த ஆய்வின் தகவல்கள் அனைத்தும் நேச்சர் ஜியோசயின்ஸ் (Nature Geoscience) நாளிதழில் வெளியாகியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்