காளான் வளர்ப்பில் மாதம் ₹1 லட்சம் வருமானம்... விடாமுயற்சியால் சாதித்த பெண்! | Kerala woman earns 1 lakh rupees per month from mushrooms

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (19/05/2019)

கடைசி தொடர்பு:13:59 (19/05/2019)

காளான் வளர்ப்பில் மாதம் ₹1 லட்சம் வருமானம்... விடாமுயற்சியால் சாதித்த பெண்!

துரதிருஷ்டவசமாக அது தோல்வியில் முடிகிறது. தாங்க முடியாத விரக்தியில் மனம் உடைந்து போகிறார். பெரும் முதலீடும், அதிகமான நேரம், பராமரிப்பு இல்லையென்றாலும், 6 மாத உழைப்பு வீணாகினால் விரக்தி வரத்தானே செய்யும்.

காளான் வளர்ப்பில் மாதம் ₹1 லட்சம் வருமானம்... விடாமுயற்சியால் சாதித்த பெண்!

"குறைந்த பராமரிப்பு தேவைப்பட்டாலும், காளான்களைப் பயிரிடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் பொறுமையாகவும், மன உறுதியுடனும் இருந்தால் காளான் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் விஷயம்தான்." என்று தனது காளான் பண்ணைக்கு வருபவர்களிடம் சொல்லி வருபவர், கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் ஷிஜே வர்கீஸ்.  

காளான் வளர்ப்பு - கேரளா

கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில், எரமல்லூர் (Eramalloor) நகரில் இருக்கிறது, ஷிஜே வர்கீஸின் பண்ணை. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ஆரம்பித்த பயணம் இப்போது லாபகரமான பண்ணையாக வளர்ந்து நிற்கிறது. ஆரம்பத்தில் லாபம் கொடுக்காத காளான் மூலம் இப்போது மாதம் 1,00,000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இவரது பண்ணையில் பயிற்சி பெற வெளிநாடுகளில் இருந்தும் ஆள்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகக் காளான் வளர்ப்பு மிகவும் லாபகரமான திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இதற்கு மக்கள் அதிகமாகக் காளான்களை விரும்பி வாங்கியதும் முக்கியமான காரணம். இதுபோக, மாநில விவசாயத் துறையும், காளான் வளர்ப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. விவசாயிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துதல் என பயிற்சிகளைக் கொடுத்தும் ஊக்கப்படுத்தி வருகிறது. 

காளான் மலையாள மொழியில் 'கூன்' என அழைக்கப்படுகிறது. காளான் கேரளாவில் அதிகமான அளவில் மக்களால் சாகுபடி செய்யப்படாமல் இருந்தது. ஆனால், அந்த தட்பவெப்ப நிலைக்குத் தானாகவே ஆங்காங்கே அதிக அளவில் முளைத்திருந்தது. இதனைக் கண்ட ஷிஜே வர்கீஸ்க்கு சிறிய வயதிலிருந்தே காளான் வளர்ப்புமீது காதல் வந்திருக்கிறது. என்றாலும், பல ஆண்டுகள் கழித்துத்தான் இவருக்குக் காளான் வளர்ப்பு சாத்தியமானது. திருமணம் முடிந்து வீட்டில் இருந்த தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். சிறிய வயதில் இருந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். ஆனால், குழந்தைகள் பெரிதாக வளர்ந்த பின்னர், ஓய்வு நேரம் கூடுதலாக கிடைத்தது. கிடைத்த ஓய்வு நேரத்தை வெட்டியாகக் கழிப்பதில் இவருக்கு விருப்பம் இல்லை.

கேரள பெண் ஷிஜே வர்கீஸ்

Photos and News Courtesy: The Better IndiaShije Varghese

தற்செயலாக இவரது வீட்டுப் பக்கத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு ஒன்று நடைபெற்றது. அதைக் கேள்விப்பட்டு தன் கணவரின் ஊக்கத்துடன், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்த பின்னர், காளான் வளர்ப்பு தொழில் ஆரம்பிக்க முன்வந்த நேரம் அவருக்கு இன்னொரு நினைப்பு தோன்றியிருக்கிறது. தொழில் நன்றாக இருக்குமா, காளானைச் சந்தைப்படுத்துவது எப்படி என எண்ணி கொஞ்சம் தயங்கியிருக்கிறார், ஷிஜே. கணவர் தைரியம் சொல்ல அன்று ஆரம்பமானது, ஷிஜேவின் வெற்றிப் பயணம்.  

முதலில் ஒரு பாக்கெட்டுக்கு மூன்று அடுக்குகள் காளான் வீதம், இரண்டு பாக்கெட்டுகளில் வளர்க்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ரப்பர் மரங்களின் துகள்களை வைத்து அடுக்குகள் அமைத்து காளான்களை வளர்த்தார். அவை நன்றாக வளர்ந்து ஷிஜேவுக்கு ஊக்கத்தைக் கொடுத்தன. இதுதவிர, அவர் கணவரும் ஊக்கம் கொடுக்கவே, தன் பண்ணையை விரிவுபடுத்தினார் ஷிஜே. அடுத்த ஆறே மாதங்களில் 300 அடுக்குகள் கொண்ட காளான் பண்ணை அமைக்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அது தோல்வியில் முடிகிறது. தாங்கமுடியாத விரக்தியில் மனம் உடைந்து போகிறார். பெரும் முதலீடும், அதிகமான நேரம் பராமரிப்பு இல்லையென்றாலும், 6 மாத உழைப்பு வீணாகினால் விரக்தி வரத்தானே செய்யும். ஷிஜேவை அவரது கணவர் தேற்றி மீண்டும் காளான் வளர்ப்பில் ஈடுபட வைக்கிறார். இந்த முறை ஷிஜே எச்சரிக்கையுடன் காளான் வளர்ப்பில் ஈடுபட ஆரம்பிக்கிறார். கேரளாவில் உள்ள பல்வேறு காளான் பண்ணைகளை பார்வையிட்டு, தான் செய்த தவற்றைப் புரிந்துகொள்கிறார். 

கேரள மாவட்டத்தில் பயிற்சி

காளான் வளர்ப்புக்கு வெப்பநிலையும், ஈரப்பதமும் கட்டாயத் தேவை. இரண்டும் சரியாக கிடைத்தால் மட்டுமே லாபகரமான காளான் வளர்ப்பு சாத்தியம். ஆனால், கேரளாவின் தட்பவெப்ப நிலைக்கு, இது சாத்தியம் அல்ல. அதனால், ஷிஜே தனது காளான் பண்ணையில் நவீன குளிர்பதன முறையில் வெப்பநிலையை வைத்து காளானை வளர்க்க ஆரம்பிக்கிறார். இந்தத் தொழில்நுட்பம் மூலமாகக் காளான் வளர்ப்பு சாத்தியமாகத் தொடங்கியது. 

ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், ஈரப்பதம் 80 முதல் 95 சதவிகிதம் வரையும் வைத்து காளான்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காளான் வளர்ப்பு ஷிஜேவுக்கு கைகொடுக்க ஆரம்பிக்கிறது. அடுத்ததாக வெட்டிவேர் புல்லுடன் விசிறியை இணைத்து, காளானுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் முறையைக் கையாள்கிறார் ஷிஜே. அடுத்த இரண்டு வருடங்களாகச் சோதனை முயற்சியாகக் காளானை வளர்க்க ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக காளான் வளர்ப்பு கைகொடுக்கிறது. அதனால் தனது பண்ணையில் கிடைத்த காளான்களை 'கூன்பிரெஷ்' எனும் பெயரில் வீட்டு முன் கடை அமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

காளான் - வருமானம்

Photos and News Courtesy: The Better IndiaShije Varghese

ஆரம்பத்தில் கடை வருமானம் கொடுக்கவில்லை என்றாலும், போகப்போக வருமானம் கொடுக்க ஆரம்பித்தது. இதனால், இவரது சிப்பிக் காளான், பால் காளான்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். இவரது காளான் பண்ணைக்கு விவசாயத் துறை அதிகாரிகளும் வந்து பார்வையிடுகின்றனர். வெற்றிகரமாகக் காளான் வளர்த்து காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஆனார். 
இன்று இவரது பண்ணையில் வளரும் காளான்களை பார்சல் மூலம் கேரளா முழுவதும் விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் காளான் மூலம் சுமார் 1 லட்சத்துக்கும் மேல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கிலோ காளானை 300 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். மார்ச் மற்றும் மே மாதங்களில் காளான் உற்பத்தி குறைந்தாலும், நவீன குளிர்பதன தொழில்நுட்பம் மூலம் வருட உற்பத்தியைத் தக்கவைத்துக் கொள்கிறார். காளான் வளர்ப்புக்காகப் பல விருதுகளை இவர் வாங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் காளான்களில் இருந்து மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். 


டிரெண்டிங் @ விகடன்