மரணத்தை அரவணைத்த வேகத்தின் நாயகன் நிக்கி லாடா! | Niki Lauda dies at age 70

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/05/2019)

கடைசி தொடர்பு:14:42 (21/05/2019)

மரணத்தை அரவணைத்த வேகத்தின் நாயகன் நிக்கி லாடா!

மரணத்தை அரவணைத்த வேகத்தின் நாயகன் நிக்கி லாடா!

சாதனைகள் தோற்கடிக்கப்படலாம்; வரலாறுகள் மாறலாம்; புதிய சாம்பியன்கள் உருவாகலாம். ஆனால், நிக்கி லாடா என்ற பெயரை மட்டும் ஃபார்முலா ஒன் என்றுமே மறக்காது. மூன்று முறை F1 சாம்பியன் பட்டம் வாங்கிய நிக்கி லாடா 70 வயதில் இயற்கை எய்திவிட்டார். மரணத்தைத் தொட்டு, F1-ல் மறக்க முடியாத வரலாற்றை எழுதி, குடும்பம் சூழ அமைதியான முறையில் வாழ்ந்து வந்த இந்தச் சாம்பியன் இப்போது காற்றுடன் கலந்துவிட்டார்.  

நிக்கி லாடா

1949-ம் ஆண்டு பிறந்த நிக்கி லாடா தன் குடும்பத்தை எதிர்த்து ஃபார்முலா ஒன் போட்டியில் கலந்துகொண்டார். வீட்டில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால், வங்கியில் கடன் வாங்கி ரேஸ்களில் கலந்துகொண்டு 1971-ல் F1 போட்டிக்குள் நுழைந்தார். மார்ச் மற்றும் BRM டீம்களுக்கு போட்டிபோட்டவர் வெறும் மூன்று ஆண்டுகளிலேயே என்ஸோ ஃபெராரியை இம்ப்ரஸ் செய்து, ஃபெராரி டீமுக்குள் நுழைந்தார். முதல் சீஸனின் முதல் போட்டியிலேயே ஃபெராரிக்கு போடியம் அடித்துக்கொடுத்தார். அந்த சீஸனில் நடைபெற்ற 4 போட்டிகளில் வெற்றிபெற்றார். அடுத்த சீஸனிலேயே டிரைவர் சாம்பியன் பட்டம் வாங்கினார்.

1982 மெக்லரனில் நிக்கி லாடா

1976-ல், டிரைவர் சாம்பியன் பட்டத்தை வாங்கி ஓர் ஆண்டுகூட முடிவடையாத நிலையில் ஜெர்மனியின் நர்பரிங் சர்க்யுட்டில் லாடாவுக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. முகம் மற்றும் உடலில் பலத்த தீக்காயங்களுடன் காரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, தீயில் இருந்து வந்த நச்சுக்காற்றைச் சுவாசித்ததில் நுரையீரல் சேதமாகியிருந்தது. நிக்கி லாடா இறக்கப்போகிறார் என்று மருத்துவமனையிலேயே அவருக்கு இறுதிச் சடங்குகளை நடத்தியது. ஆனால், லாடாவின் மன உறுதியும், அவருக்கு F1 மீது இருந்த காதலும் அவரிடமிருந்து மரணத்தைப் பிரித்தே வைத்தது. பல அறுவைசிகிச்சைகளுக்கு பின் 40 நாள் கழித்து முகத்தில் கட்டுகளோடு இத்தாலி சர்க்யுட்டில் மீண்டும் ரேஸூக்கு வந்தார்.

ஜேம்ஸ் ஹன்ட் மற்றும் லாடா

ஜப்பானில் கடைசி போட்டி. ஜேம்ஸ் ஹன்ட் மற்றும் லாடா இருவரும் அந்த சீஸனின் சாம்பியன்ஷிப்பை பிடிக்க நின்றுகொண்டிருந்த நிலையில், விடாது மழை பெய்ததால் `நான் மீண்டும் ஆபத்தில் இறங்கப்போவதில்லை’ என அந்த ரேஸில் லாடா பங்கேற்கவில்லை. லாடா மற்றும் ஜேம்ஸ் ஹன்ட் இருவருக்கும் இடையே இருந்த போட்டி மற்றும் நட்பை 'ரஷ்' என்ற திரைப்படமாக எடுத்துள்ளார்கள்.

Niki Lauda

1975, 1977 மற்றும் 1984 என மூன்று ஆண்டுகள் இரண்டு முறை ஃபெராரியிலும், ஒரு முறை மெக்லாரனிலும் சாம்பியன் பட்டம் வாங்கினார் நிக்கி லாடா. 1979-ல் ஃபார்முலா ஒன் போட்டியிலிருந்து வெளியேறியவர், தன் சொந்த ஃபிளைட் நிறுவனத்தை ஆரம்பித்த பிறகு, மீண்டும் 1982-ல் மெக்லாரனுக்காகப் போட்டிபோட வந்தார். 1984-ல் ஆலன் ஃப்ராஸ்ட் உடன் கடும் போட்டியில் இருந்த லாடா கடைசியில் 0.5 பாயின்ட் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடித்து மீண்டும் சாம்பியன்ஷிப்பை வாங்கினார். பிறகு, 1985-ல் F1 போட்டியில் நிரந்தரமாக விடைபெற்றார். F1 ரேஸ்களிலிருந்து விடைபெற்ற பிறகும் பல ஆண்டுகள் ஃபார்முலா ஒன் டீம்களோடு பணியாற்றினார். 1993-ல் ஃபெராரிக்கு கன்சல்ட்டிங் சாம்பியனாகச் சில காலம் பணியாற்றினார்.

Niki lauda passed away

ஜாகுவார் ரேஸ் டீமின் முதல்வராக 2001-02 ஆண்டுகளில் பணியாற்றினார். கடைசியாக 2012-ல் ஹாமில்டனை மெர்சிடீஸ் டீமுக்கு அழைத்துவந்தார். மெர்சிடீஸில் இவருக்கு Non Executive chairman என்று பதவி வழங்கப்பட்டது. ரேஸராக இருந்தபோதும் இல்லாதபோதும் F1 போட்டியில் பல மாற்றங்கள் நடப்பதற்கு இவர் காரணம். மரணம் தன்னைப் பிடிக்க முடியாத வேகத்தில் பறந்தவர் இப்போது ஓய்வெடுக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்