``மெரினாவில் கடலிடம் இருக்கும் ஜாக்கிரதை உணர்வை ராட்டினத்திடமும் காட்டுங்கள்'' | Paediatrician's opinion on the merry go round accident

வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (21/05/2019)

கடைசி தொடர்பு:20:14 (21/05/2019)

``மெரினாவில் கடலிடம் இருக்கும் ஜாக்கிரதை உணர்வை ராட்டினத்திடமும் காட்டுங்கள்''

``கடலருகில் பிள்ளைகள் போனால் எவ்வளவு ஜாக்கிரையாக இருக்க வேண்டுமோ, அதேபோன்ற ஜாக்கிரதையுடன் குழந்தைகள் ராட்டினத்தின் அருகே நிற்கும்போது இருங்கள். இந்தச் சம்பவம் அந்தப் பாடத்தைத்தான் நமக்கெல்லாம் கற்றுத் தந்திருக்கிறது''

`மெரினா பீச்சில், சுழலும் ராட்டினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 7 வயதுச் சிறுவன் தலையில், ராட்டினத்தின் கம்பி பலமாக இடித்ததால் அவன் மரணமடைந்தான்' என்ற செய்தியைப் படித்ததும் `அச்சோ' என்கிற பதற்றம் ஒன்று மனதில் தொற்றிக்கொண்டது. ராட்டினத்தில் அடிபடுவது என்பது தவிர்க்கக்கூடிய விபத்துதான் என்பதால், என்னென்ன மாதிரியான தவிர்க்கக்கூடிய விபத்துகளை பிள்ளைகள் தினமும் சந்திக்கிறார்கள் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜிடம் கேட்டோம். 

மெரினா - விபத்து

``இந்த ராட்டின விபத்து, சாலை விபத்து போல தினசரி நடக்கிற நிகழ்வு கிடையாது. அபூர்வமாக நடக்கிற விபத்துதான். நான் குழந்தையாக இருந்தபோதும் மெரினாவில் ராட்டினங்கள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. அப்போது பிள்ளைகள் ராட்டினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், கூடவே பெற்றோர்கள் இருப்பார்கள். அதனால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது. இப்போது, பீச்சுக்குச் சென்றாலும் பெற்றோர்கள் செல்போனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் ஆர்வத்தில் ராட்டினங்களைச் சுற்றி நிற்கிறார்கள். இன்னும் சில பெற்றோர், குழந்தைகளை ராட்டினங்களின் அருகில் நிற்க வைத்துக்கூட போட்டோ எடுக்கிறார்கள். இந்த விபத்து செய்தியைப் பொறுத்தவரை, சிறுவன் ஆர்வத்தில் ராட்டினத்தின் அருகே சென்றுவிட்டான். இதில், ராட்டினக்காரரையும் பெரியளவில் குற்றம் சொல்ல முடியாது. அது அவர் பிழைப்பு. மெரினா பீச் குழந்தைகள் அதிகமாக வருகிற பகுதி என்பதால், ராட்டினத்தைச் சுற்றி ஒரு வேலி மாதிரி அமைப்பு இருந்திருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும். இதற்கு கார்ப்பரேஷன்தான் பொறுப்பெடுக்க வேண்டும்'' என்று சொன்னவர், சிறுவர்கள் சந்திக்கிற மற்ற தவிர்க்கக் கூடிய விபத்துகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 

``இப்போது இருக்கிற வீடுகளின் தரையில் அழகுக்காக மார்பிள்ஸ் அல்லது டைல்ஸ்தான் பதிக்கிறார்கள். போன தலைமுறை மொசைக்கும் வழுக்கி விடும் என்றாலும், அதைவிட இந்தக் காலத்து மார்பிள்ஸும் டைல்ஸூம் அதிகமாகவே வழுக்குகிறது. தெரியாமல் தண்ணீர் சிந்திவிட்டால் மட்டுமல்ல, இவற்றின் மேலே போடுகிற நைலான் மிதியடியின் மேல் கவனக்குறைவாக காலை வைத்தாலும் வழுக்கி விடுகிறது. எனவே, தண்ணீர் சிந்தாமல் இருக்க, சிந்தினாலும் உடனே துடைக்க, மிதியடியில் காலை நிதானமாகத் துடைக்க பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.  
குழந்தை நல மருத்துவர் பழனிராஜ்
இன்றைக்கு எல்லா வீடுகளிலும், தரையும் சுவரும் சேரும் இடங்களில், அரையடி உயரத்துக்கு ஒரு அட்டாச்மென்ட் போல மார்பிள்ஸ் வைக்கிறார்கள். அவற்றின் முனைகள் ஷார்ப்பாக இருக்கின்றன. இது பார்க்க அழகாக இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், என்னிடம் தையல் போடுகிற அளவுக்கு ரத்தக் காயத்துடன் வருகிற குழந்தைகள் அதிகமாக அடிபடுகிறது இந்த ஷார்ப் முனைகளில்தான். விளையாடும்போது தரையில் வழுக்கி விழுந்தால் குறைந்தபட்சம் வீக்கமோ அல்லது அதிகபட்சம் எலும்பு முறிவோதான் ஏற்படும். ஆனால், இந்த ஷார்ப் முனைகளின் விழும்போதுதான், தையல் போடுகிற அளவுக்கு வெட்டுக்காயமே விழுந்து விடுகிறது. பர்சனலாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தக் காரணத்துக்காகவே நான் என் வீட்டுச் சுவரில் இருந்த அந்த எக்ஸ்ட்ரா டைல்ஸை எடுத்தே விட்டேன். 

இதைத் தவிர, படிக்கட்டுகளில் விழுவது, சைக்கிள் ஓட்டும்போது விழுவது ஆகியவற்றை, பிள்ளைகளைக் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொன்னாலே தவிர்த்து விடலாம். மற்றபடி, இந்தக் கால சென்னைப் பிள்ளைகள் மரமேறுவதில்லை. அதனால், அவர்களுக்கு இந்த வகையில் விபத்து நிகழாது. ஆனால், சென்னையைத் தாண்டி இருக்கிற பிள்ளைகள் மரத்திலிருந்து கீழே விழுகிற விபத்தையும் சந்திப்பார்கள். `மரத்தில் ஏறினாலே கீழே விழுந்து விடுவாய்' என்று பயங்காட்டாமல், உயரமான மரங்களில், பலமில்லாத மரங்களில் ஏறாதீர்கள் என்று சொல்லிக் கொடுங்கள் போதும். 

நூறு சதவிகிதம் தவிர்த்தே ஆக வேண்டிய விபத்துகள் என்றால், முதலில் நெருப்புக் காயம், அடுத்து கொதிக்கிற எண்ணெய், சூடான பால் மற்றும் சுடுநீரில் குழந்தைகள் தவறி விழுவதைத்தான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்துகிற விஷயங்களை, அவர்கள் சின்ன பிள்ளைகள் என்றால், கைகளுக்கு எட்டுகிற தொலைவில் வைக்காதீர்கள். பெரிய பிள்ளைகள் என்றால், அதனால், விளையப் போகிற ஆபத்துகளை எடுத்துச் சொல்லுங்கள். சென்ற வாரம் தூளியில் கழுத்து இறுக்கி ஒரு சிறுமி இறந்து போனாள் இல்லையா? அதுகூட தவிர்த்திருக்கக் கூடிய விபத்துதான். 

இனிமேல் பீச்சுக்குப் போனால், கடலருகில் பிள்ளைகள் போனால் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமோ, அதேபோன்ற ஜாக்கிரதையுடன் குழந்தைகள் ராட்டினத்தின் அருகே நிற்கும்போதும் இருங்கள். இந்தச் சம்பவம் அந்தப் பாடத்தைத்தான் நமக்கெல்லாம் கற்றுத் தந்திருக்கிறது'' என்று முடித்தார் டாக்டர் பழனிராஜ்.

 


டிரெண்டிங் @ விகடன்