5G சேவை வேண்டுமா, துல்லியமான வானிலை அறிவிப்பு வேண்டுமா?- கேட்கும் நாசா | Avoid 5G technology if you need accurate weather forecasting

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (21/05/2019)

5G சேவை வேண்டுமா, துல்லியமான வானிலை அறிவிப்பு வேண்டுமா?- கேட்கும் நாசா

உங்கள் முன்னால் இரண்டு விஷயங்களை வைக்கிறார்கள். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்குத் துல்லியமான வானிலை முன்னறிவிப்பு வேண்டுமா இல்லை வேகமான இணைய சேவையைத் தருகின்ற 5G சேவை வேண்டுமா? 

புயல், மழை, சூறாவளி போன்ற சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நமக்கு நிச்சயமாகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புதான் தேவைப்படும். ஆனால், இப்போது இவை இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுமளவுக்கு அப்படியென்ன அவசரம் வந்துவிட்டது? 

ஆம், நாம் இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஏனென்றால், 5G சேவையைப் பயன்படுத்தினால் அது தற்போது நாம் செய்துகொண்டிருக்கும் துல்லியமான வானிலை முன்னறிவிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமென்று கூறுகிறார்கள் அமெரிக்காவின் வானிலை ஆய்வு நிறுவனம், நாசா போன்ற அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இந்தச் சேவையால் அமெரிக்காவின் வானிலை முன்னறிவிப்பு வசதிகளின் திறன் முப்பது சதவிகிதம் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால் கடலோரங்களில் வாழும் மக்களுக்கு ஒரு சூறாவளி பற்றிய விவரம் அது ஏற்பட இருக்கும் காலத்தின்போதுதான் தெரியவரும். இப்போது இருப்பதுபோல் தாங்கள் சுதாரித்துக்கொள்ள கால அவகாசம் கிடைக்காது.

5G சேவை

Photo Courtesy: Qorvo

அமெரிக்காவில் தற்போது 5G சேவையைப் பரிசோதிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அமெரிக்காவில் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனம், நாசா மற்றும் அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை நடத்திய பரிசோதனைகளில் இந்தச் சேவையைக் கொண்டு வருவதால் ஏற்படப் போகும் விளைவுகள் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேசியபோது, ``FCC என்ற நிறுவனம் தற்போது நிறுவ இருக்கும் 5G கோபுரங்கள் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டல ஆய்வு நிறுவனத்தின் (NOAA) 77 சதவிகித தரவுகளை அழித்துவிடும். இதைத் தடுத்து நிறுத்த இரண்டு தரப்பு அறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.